Published : 25 Sep 2014 05:04 PM
Last Updated : 25 Sep 2014 05:04 PM
இன்சியானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் ஹாக்கியில் பாகிஸ்தானிடம் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது.
பிரிவு-பி-யில் இருக்கும் இந்தியா முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்து ஏமாற்றமளித்தது.
ஆனால் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர். சர்தார் சிங் கேப்டன்சியிலான இந்திய அணி இந்தப் போட்டியில் பந்தை அதிகம் தன் ஆதிக்கத்தில் வைத்திருந்தது. ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக போட்டியை இழந்துள்ளது.
காரணம், இந்திய முன்கள வீரர்கள் வாய்ப்புகளைக் கோட்டை விட்டனர். குறிப்பாக ரமன் தீப் சிங் சொதப்பினார். இந்தத் தோல்வியினால் பி-பிரிவில் இந்தியா 2-ஆம் இடம் பிடித்து அரையிறுதியில் பலமான தென்கொரியாவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எதுவாக இருந்தாலும் வரும் சனிக்கிழமையன்று தரவரிசையில் தாழ்வான இடத்தில் இருந்தாலும் அபாயகரமான சீன அணியை இந்தியா வீழ்த்த வேண்டும்.
பெனால்டி கார்னர் ஷாட்களை எடுக்கும் ருபிந்தர் பால் சிங் காயமடைந்ததால் வி.ஆர்.ரகுநாத் மேல் அந்தப் பொறுப்பு விழ அவர் இரண்டு அருமையான கோல் வாய்ப்புகளை நழுவ விட்டார்.
அதே போல் பாஸ் செய்யும் பந்தை தடுத்து நிறுத்துவதில் ரமன் தீப் சிங் கடுமையாக சோடை போனார். அவர் குறைந்தது 3 வாய்ப்புகளையாவது நழுவ விட்டார் என்றே கூற வேண்டும். அவருடன் பார்ட்னராக இருந்த ஆகாஷ் தீப் சிங் மிகவும் அருகில் ஒரு கோல் வாய்ப்பை பாகிஸ்தான் கோல் கீப்பர் இம்ரான் பட்டிடம் நேராக அடித்து தவற விட்டார்.
ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது உமர் கோல் அடித்தார். முதலில் வகாஸ் அடித்த ஷாட்டை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுக்க பட்டுத் திரும்பிய பந்தை உமர் கோலாக மாற்றினார்.
இதன் பிறகு இந்தியா தாக்குதல் ஆட்டம் ஆடியது ஆனால் மேற்கூறிய தவறுகளினால் வாய்ப்புகளைக் கோட்டைவிட்டது இந்தியா. கடைசியாக 53வது நிமிடத்தில் இடது புறத்திலிருந்து கோதாஜித் அடித்த பாஸை நிகின் திம்மையா கோலாக மாற்றி ஆறுதல் அளித்தார்.
ஆனால் இந்த ஆறுதல் அடுத்த நிமிடத்திலேயே உடைந்தது. பாகிஸ்தானின் வகாஸ் ரிவர்ஸ் ஷாட் மூலம் வெற்றிக்கான கோலை அடித்தார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிகளிலும் வென்ற பாகிஸ்தான் அடுத்து ஓமன் அணியைச் சந்திக்கிறது. அந்த அணியை வெற்றி பெற பாகிஸ்தானுக்கு பிரச்சினை இருக்காது, எனவே பிரிவு-பி-யில் பாகிஸ்தான் முதலிடம் வகிப்பது உறுதியே என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT