Published : 27 Dec 2018 04:55 PM
Last Updated : 27 Dec 2018 04:55 PM
இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் விளையாடும் 3வது டெஸ்ட் போட்டியின் மெல்போர்ன் ட்ராப்-இன் பிட்ச் ‘படு ஃபிளாட்’ பிட்சாக இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஓ’கீஃப் முதல் நாள் ஆட்டத்திற்கு முன்பே இதனை, ‘புஜாரா பிட்ச்’ என்று கிண்டலடித்திருந்தார். அதாவது பந்துக்கும் மட்டைக்கும் சரியான போட்டி இருக்க வேண்டும், அதுதான் அங்கு முதல் நாள் வந்த 73,000 ரசிகர்களுக்கும் விருந்து படைக்கும், ஆனால் இந்திய அணியின் 2 விக்கெட்டுகள் மட்டுமே அன்று விழுந்தது, பந்துகளில் ஸ்விங் இல்லை, பவுன்ஸும் வேகமாக இல்லை, மெதுவான பவுன்சாகவே இருந்தது என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஆனால் இன்று புஜாரா, ரஹானே இருவரும் முறையே ஒருவர் வேகப்பந்துக்கும், இன்னொருவர் நேதன் லயன் சுழலுக்கும் மிகவும் தாழ்வாக வந்த பந்தில் ஆட்டமிழந்திருப்பதால் இனி பேட்டிங் கடினமாக இருக்கும், ஆனாலும் இந்திய வெற்றி, அல்லது ஆஸி. வெற்றி, அல்லது ட்ரா ஆகிய 3 முடிவுகளுமே சாத்தியம் என்கிறார் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச்.
கடந்த ஆஷஸ் தொடரில் மெல்போர்னில் 1081 ரன்கள் குவிக்கப்பட்டு மொத்தம் 24 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தன. இதனையடுத்து ஐசிசி மெல்போர்ன் பிட்சுக்கு 3 தகுதியிழப்புப் புள்ளிகளை வழங்கியது. எந்த ஒரு மைதானமும் 5 தகுதியிழப்புப் புள்ளிகளைப் பெறுமாயின் அது 12 மாதங்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டுக்கு லாயக்கற்றது என்று ஒதுக்கப்படும், இதுதான் ஐசிசி விதிமுறை.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை அதிகாரி கெவின் ராபர்ட்ஸ், ஆஸி. ஊடகம் ஒன்றிற்குக் கூறும்போது, இன்னும் உயிரோட்டமுள்ள பிட்சை எதிர்பார்த்தோம். பிட்ச் தயாரிப்பாளர் ஸ்டூவர்ட் பாக்ஸுடன் பேசியுள்ளோம். அடுத்த ஆண்டிலாவது இன்னும் கொஞ்சம் உயிர் இருக்கும் பிட்சைப் போடுமாறு வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
சத நாயகன் செடேஷ்வர் புஜாரா இன்று பாட் கமின்ஸின் தாழ்வான பந்துக்கு விக்கெட்டை இழந்தார். அவர் கூறும்போது, “இப்போது இந்தப் பிட்ச் எளிதான பேட்டிங் பிட்ச் அல்ல, இந்த பிட்சின் வேகத்துக்கு தகவமைத்துக் கொள்வது கடினம். இத்தகைய பிட்ச்களில் எப்போதும் சந்தேகத்துடன் தான் ஆட வேண்டும்” என்கிறார், ஆனால் இந்தப் பிட்ச்களில் பழக்கமில்லாத ஒரு துணைக்கண்ட வீரரின் கருத்தை எவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ள முடியும் என்பது தெரியவில்லை என்கிறது ஆஸி. ஊடகம்.
டர்க் நேனஸ் என்ற முன்னாள் வேகப்பந்து வீச்சாளர், “மண் பிரச்சினை என்றால் அந்த மண்ணுக்குப் பதிலாக வேறு மண்ணைப் பயன்படுத்தலாம். மெல்போர்ன் மைதானத்திலேயே வேகமும், பந்துகள் எழும்பும் ஆட்டக்களம் இருக்கும் போது எதற்காக வேறு இடத்தில் செய்து எடுத்து வர வேண்டும்?” என்கிறார்.
ஆனால் இந்தப் பிட்ச் இன்னும் மோசமடையும் என்கிறார் ஏரோன் பிஞ்ச், “பவுன்ஸ், ஸ்விங் இல்லை ஆனால் பிட்ச் கொஞ்சம் மோசமடையத் தொடங்கியுள்ளது. 2 நாட்கள் முடிந்துள்ளது, இனி பிட்ச் எப்படி நடந்து கொள்ளும் என்பதைக் கணிப்பது கடினம். 3, 4,5-வது நாட்களில் இந்தப் பிட்ச் வேறு ஒரு கதையைக் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இன்று கூட இரண்டு பந்துகள் தாழ்வாகின, ஒரு சில பந்துகள் எழும்பின, ஆகவே இந்திய வெற்றி, ஆஸி. வெற்றி, ட்ரா ஆகிய 3 முடிவுகளும் சாத்தியமே” என்கிறார் பிஞ்ச்.
443 ரன்களையும் விட இந்திய அணி இன்னும் கொஞ்சம் குறைந்த ஓவர்களில் 500 ரன்களை எட்டி டிக்ளேர் செய்து கடைசி ஒன்று அல்லது ஒன்றரை மணி நேர ஆட்டத்தை ஆஸ்திரேலியா கையில் கொடுத்திருந்தால் ஆஸ்திரேலிய பேட்டிங் எப்படிப் போகும் என்று சொல்லிவிடலாம், ஆனால் இந்திய அணி சுமார் 170 ஒவர்கள் ஆடி 443 ரன்களை எடுத்திருப்பது மந்தமான பேட்டிங்கே. ரோஹித் சர்மா ஏன் கட்டைப் போட்டு ஆடினார் என்பது கேள்விக்குறியே. அவர் அடித்து ஆட நல்ல நிலையில்தான் அணி இருந்தது, ஆனால் அவர் டொக்கு வைக்கும் ஆட்டத்தைத் தேர்வு செய்தது புரியாத புதிராகவே உள்ளது.
பிட்ச் ஏற்றத்தாழ்வாக நாளை மாறினால் ஆஸ்திரேலியாவின் பாடு திண்டாட்டம்தான், அப்படி மாறவில்லை எனில் இந்திய பவுலர்களுக்கு வெயிலில் காய்ச்சல்தான் நடக்கும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் ஆஸி. ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT