Published : 28 Dec 2018 07:18 PM
Last Updated : 28 Dec 2018 07:18 PM
2018ம் ஆண்டு விளையாட்டுக்கு மிகவும் நினைவில் வைத்துக் கொள்ள ஆண்டாக அமைந்தது. ரஷ்யாவில் உலகக்கோப்பையை பிரான்ஸ் வென்றது. ஸ்மித், பேங்கிராப்ட், வார்னர் தடை விவகாரம், தலைப்புச் செய்திகளில் தீயாகப் பரவிய செரீனா வில்லியம்ஸின் ஆவேசம் என்று சுவாரசியமான ஆண்டாகத் திகழ்ந்தது 2018.
கால்பந்து உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ்:
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலகக்கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியில் ஜூலை 15ம் தேதியனறு குரேஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் உலக சாம்பியன்களானது. மின்னல் வேக கிலியன் மபாப்பே, பால் போக்பா, ஆண்டாய்ன் கிரீஸ்மேன் கோல்களை அடித்தனர். 1998ம் ஆண்டு பிரான்ஸ் உலகக்கோப்பையை வென்ற போது மபாப்பே பிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சைக்கிள் சாம்பியன்ஷிப்பான டூர் தி பிரான்ஸை வென்ற தாமஸ்:
வெல்ஷைச் சேர்ந்த ஜெரைண்ட் தாமஸ் என்ற வீரர் ஜூலை 29ம் தேதி புகழ்பெற்ற டூர் தி பிரான்ஸ் சைக்கிள் பந்தய சாம்பியன் ஆனார்.
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி கோச் ஜோஸ் மோரின்ஹோ நீக்கம்:
டிசம்பர் 18ம் தேதியன்று இங்கிலிஷ் பிரிமியர் லீக் கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கோச் பொறுப்பிலிருந்து மோரின்ஹோ நீக்கப்பட்டார். ஏற்கெனவே செல்ஸீ, ரியால் மேட்ரிட் அணிப் பொறுப்புகளிலிருந்தும் இவர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செரீனாவின் அமெரிக்க ஓபன் ஆவேசம்:
செப்.8ம் தேதி அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் 24ம் பட்டம் வெல்லும் முனைப்பில் ஆடிய செரீனா வில்லியம்ஸ், நடுவர் கார்லோஸ் ரேமோஸுடன் சண்டையிட்டார். 2 விதிமீறலில் ஈடுபட்டதாக செரீனாவின் 2 புள்ளிகளைக் குறைத்தார் நடுவர். இதனையடுத்து அவர் கடுமையாக சண்டையிட அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் மேலும் ஆவேசமடைந்தார். இதனால் கவனம் இழந்த செரீனா ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவிடம் இறுதிப் போட்டியை இழந்தார்.
ரியால் மேட்ரிட்டின் ‘ட்ரிபிள்’:
மே 26-ம் தேதி லிவர்பூல் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ரியால் மேட்ரிட் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது. பயிற்சியாளர் ஜினடைன் ஜிடேன் தலைமையில் இது தொடர்ச்சியாக 3வது கோப்பையாகும். மொத்தமாக 13வது சாம்பியன் பட்டமாகும். ஜினடேன் ஜிடேனின் கடைசி போட்டியாக இது அமைந்தது. ஸ்டார் ஸ்ட்ரைக்கர் கிறிஸ்டியானோ ரொனால்டோ யுவன்டஸ் அணிக்குச் சென்றது ரியாலை மேலும் வலுவிழக்கச் செய்தது.
நெருக்கடியில் ஆஸி. கிரிக்கெட்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுகு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுத்த கேப்டவுன் டெஸ்ட் பந்து சேதப்படுத்திய சம்பவம். டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பேங்கிராப்ட் தடைசெய்யப்பட்டனர், பயிற்சியாளர் டேரன் லீமென் ராஜினாமா செய்தார். கேமராவில் பால் டேம்பரிங்கைப் படம் பிடித்த சேனலில் முன்னாள் தென் ஆப்பிரிக்க பிரமாத ஸ்விங் பவுலர் ஃபானி டிவில்லியர்ஸ் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது, அவர்தான் இதனை அம்பலப்படுத்தினார், தற்போது வார்னர்தான் முழுக்காரணம் என்று பேங்கிராப்ட் கூற, ஸ்மித் ஆஸி. கிரிக்கெட் வாரிய உயரதிகாரிகள் கொடுத்த வெற்றி நெருக்கடிதான் காரணம் என்று ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்து கொண்டு வருகின்றனர்.
மோட்ரிச் சாதனை:
கால்பந்து நட்சத்திரங்கள் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோவைப் பின்னுக்குத்தள்ளி உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை குரேஷியாவின் மோட்ரிச் தட்டிச் சென்றார். ரஷ்யாவின் கால்பந்து உலகக்கோப்பையில் குரேஷியா இறுதிப் போட்டிக்கு முன்னேற மோட்ரிச் மிக முக்கியப் பங்களிப்பைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி கிரிக்கெட் அணி சாதனை:
ஆஸ்திரேலியாவுடனான இத்தனையாண்டு கால கிரிக்கெட் தொடர்புகளில் முதல் டெஸ்ட் போட்டியில் இதுவரை வெற்றி பெறாமல் இருந்த வறட்சியை கிங் கோலி தலைமையில் இந்திய அணி இந்த ஆண்டுப் போக்கி அடிலெய்ட் டெஸ்ட்டில் வென்று தொடரின் முதல் போட்டியை ஆஸி. மண்ணில் முதன் முதலில் வென்ற சாதனையை நிகழ்த்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT