Published : 09 Dec 2018 10:32 AM
Last Updated : 09 Dec 2018 10:32 AM
அடிலெய்டில் நடந்துவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
அடியெல்ட் மைதானத்தில் கடந்த 100 ஆண்டுகளில் எந்த அணியும் 300 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ததது இல்லை. இந்த சாதனையை ஆஸ்திரேலியா படைக்குமா அல்லது இந்தியா வாகை சூடுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்னும் நான்கரை 'செஷன்' இருக்கும் நிலையில், விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடும் நோக்கில் ஆஸ்திரேலிய அணியினர் களமிறங்கியுள்ளனர்.
ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறி இருப்பதால், அஸ்வின் மாயஜாலம் நிகழ்த்தினால், இந்திய அணி வெற்றி பெற அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ஆஸி. அணி முதல் விக்கெட்டை அஸ்வினிடம் இழந்துள்ளது. 28 ரன்களுக்கு ஆரோன் பிஞ்ச் விக்கெட்டை இழந்து ஆஸி. அணி ஆடி வருகிறது.
இந்திய அணியின் கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் களத்தில் சிறிதுகூட நிற்காமல் மோசமாக ஆட்டமிழந்தது பெரும் வேதனைக்குரியதாகும். கடைசி 4 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது மிகப் பரிதாபமாகும்.
பந்துவீச்சாளர்களா இருப்பவர்களுக்குப் பந்துவீச்சு பயிற்சி மட்டுமே இருக்க வேண்டும் என்கிற நேர்கோட்டிலிருந்து விலகி சிறிது பேட்டிங்கிலும் ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபட்டிருந்தால், 4 பேட்ஸ்மேன்களும் ஓரளவுக்கு ரன்கள் சேர்த்திருப்பார்கள். இன்னும் ஓரளவுக்குக் கவுரவமான இலக்கை நிர்ணயித்திருக்க முடியும்.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ததது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 15 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்ஸை ஆடியது.
3-வது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்திருந்தது. ரஹானே ஒரு ரன்னிலும், புஜாரா 40 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்து இன்றைய 4-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்து 200 ரன்களுக்கு மேல் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
ஆடுகளம் மெல்ல சுழற்பந்துவீச்சுக்கு மாறியதால், நாதன்லயன் பந்துவீச அழைக்கப்பட்டார். அவரின் பந்துவீச்சை சமாளித்து விளையாட இந்திய பேட்ஸ்மேன்கள் சிறிது சிரமப்பட்டனர். அணியின் ஸ்கோர் 234 ரன்கள் இருக்கும் போது, நாதன் லயன் வீசிய பந்தில் 'ஷார்ட் லெக்' திசையில் புஜாரா அடிக்க அதை பிஞ்ச் 'கேட்ச்' பிடித்தார். புஜாரா 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ரோஹித் சர்மா சிறிதுநேரம் மட்டுமே களத்தில் இருந்தார். லயன் வீசிய பந்தில் சில்லி 'பாயிண்ட்டில்' நின்றிருந்த ஹேஸ்ட்ஸ்கம்ப் கையில் 'கேட்ச்' கொடுத்து 6 ரன்னில் ரோஹித் வெளியேறினார்.
6-வது விக்கெட்டுக்கு வந்த ரிஷப் பந்த், ரஹானேயுடன் சேர்ந்தார். இருவரும் ஓரளவுக்குத் தாக்குப்பிடித்தனர். அதிரடியாக ஆட்டத்துக்கு ரிஷப் பந்த் மாறினர். லயன் வீசிய ஒரு ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து ரன் வேகத்தை அதிகப்படுத்தினார்.
ஆனால், நீண்டநேரம் நிலைக்காத ரிஷப் பந்த் 28 ரன்கள் சேர்த்த நிலையில், லயன் பந்துவீச்சில் 'டீப் கவர் பாயிண்ட்டில் பிஞ்சிடம் 'கேட்ச்' கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய அஸ்வின் 5 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்டார்க் பந்துவீச்சில் 'டீப் பேக்வார்ட் ஸ்குயர் திசையில் ஹாரிஸிடம் 'கேட்ச்' கொடுத்து ஆட்டமிழந்தார்.
104-வது ஓவரை லயன் வீசினார். இந்த ஓவரின் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. 70 ரன்கள் சேர்த்திருந்த ரஹானே 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஆட முற்பட்டு முதல் பந்திலேயே ஸ்டார்க்கிடம் 'கேட்ச்' கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த ஷமி 'டீப் மிட்விக்கெட்டில்' ஹாரிஸிடம் 'கேட்ச்' கொடுத்து 'டக்அவுட்டில்' வெளியேறினார். இதனால், ஹாட்ரிக் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இசாந்த் சர்மா தடுத்துவிட்டார்.
ஸ்டார்க் வீசிய 107-வது ஓவரில் இசாந்த் சர்மா 'ஷார்ட் லெக்' திசையில் பிஞ்சிடம் 'கேட்ச்' கொடுத்து வெளியேறினார். 107 ஓவர்களில் இந்திய அணி 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஏற்கெனவே 15 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததையடுத்து, 323 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணியின் கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் சிறிது தாக்குப்பிடித்து பேட் செய்திருந்தால், இன்னும் கூடுதலாக 50 ரன்கள் கிடைத்திருக்கும். ஆனால், கடைசி 4 ரன்களைச் சேர்க்க 4 விக்கெட்டுகளை இழந்தது கொடுமையாகும்.
ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் லயன் 6 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT