Published : 20 Sep 2014 08:45 PM
Last Updated : 20 Sep 2014 08:45 PM

கடைசி 2 பந்துகளில் 2 சிக்சர்: மிட்செல் மார்ஷ் அதிரடியில் பெர்த் அணிக்கு வெற்றி

மொஹாலியில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டின் ஏ-பிரிவு ஆட்டத்தில் டால்பின்ஸ் அணியை பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி பரபரப்பான முறையில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.

வெற்றி பெறத் தேவையான 165 ரன்களை எடுக்கக் களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 19வது ஓவர் முடிவில் 149/3 என்று இருந்தது. கடைசி 6 பந்துகளில் வெற்றிக்குத் தேவை 16 ரன்கள். மிட்செல் மார்ஷ் களத்தில் 27 ரன்களுடன் ஆடி வந்தார்.

கடைசி ஓவரை டால்பின் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஃபிரைலிங்க் வீசினார். முதல் பந்து யார்க்கராக அமைய அதனை லாங் ஆனில் தட்டிவிட்டு 2 ரன்கள் எடுக்க முயன்றார் ஆனால் 1 ரன்னே எடுக்க முடிந்தது. 2வது பந்தில் 15 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்டன் ஆகர் அவுட் ஆக, 4 பந்துகளில் வெற்றிக்குத் தேவை 15 ரன்கள்.

டர்னர் என்பவர் களமிறங்கி டீப் ஸ்கொயர் லெக் திசையில் 2 ரன்களை எடுத்தார். பிறகு 4வது பந்தில் லாங் ஆனில் 1 ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை மிட்செல் மார்ஷிற்கு அளிக்கிறார்.

2 பந்துகள் 12 ரன்கள் தேவை. 5வது பந்தில் மிட்செல் மார்ஷ் கிட்டத்தட்ட அரை கிரவுண்ட் மேலேறி வந்து ஃபுல்டாஸை மிட்விக்கெட்டில் அபாரமான சிக்சருக்குத் தூக்கினார். 6வது பந்தும் யார்க்கர் முயற்சி தோல்வியடைய தாழ்வான ஃபுல்டாஸை நேராக தூக்கி சிக்ஸ் அடிக்க பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியினர் உற்சாகத்தில் மைதானத்தை மொய்க்கத் தொடங்கினர். இதன் மூலம் இந்த அணி 4 புள்ளிகள் பெற்றுள்ளது.

மிட்செல் மார்ஷ் 26 பந்துகளில் 40 நாட் அவுட். முன்னதாக பெர்த் கேப்டன் ஆடம் வோஜஸ் 7 ரன்களில் வெளியேற, சி.ஜே.சிம்மன்ஸ் 36 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 48 ரன்களை விளாசினார். சிம்மன்ஸ், ஒயிட்மேன் இணைந்து 5 ஒவர்களில் 55 ரன்களை விளாசினர். சிம்மன்ஸ் அவுட் ஆனவுடன் மிட்செல் மார்ஷ், ஒயிட் ஆகியோர் இணைந்து 6 ஓவர்களில் 49 ரன்கள் சேர்த்தனர். ஒயிட்மேன் 32 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 45 எடுத்து அவுட் ஆனபோது பெர்த் அணி 15.5 ஒவர்களில் 118/3 என்று இருந்தது. 25 பந்துகளில் வெற்றிக்குத் தேவை 47 ரன்கள்.

ஆஸ்டன் ஆகர் இறங்கி 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்தார். இவர் 19வது ஓவரில் அடித்த 2 பவுண்டரிகள் முக்கியமாக அமைந்தது.

முன்னதாக டாஸ் வென்ற டால்பின்ஸ் கேப்டன் வான் விக் பேட் செய்ய முடிவெடுத்தார். ஆனால் முதல் ஓவரிலேயே கேப்டன் வான் விக் மற்றும் செட்டி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, டெல்போர்ட் 2வது ஓவரில் அவுட் ஆனார். ஸ்கோர் 12/3 என்று ஆனது.

அதன் பிறகு கே.ஏ.மகராஜ் என்ற வீரர் இறங்கி 22 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 29 ரன்கள் எடுத்தார். ஆனால் இவரும் 6வது ஓவரில் அவுட் ஆக ஸ்கோர் 45/4 என்று இருந்தது. டி.ஸ்மித் என்பவர் இறங்கி 21 ரன்கள் எடுத்தார். இவர் அவுட் ஆகும் போது ஸ்கோர் 10.2 ஓவரில் 75.

ஆனால் ஸோண்டோ என்பவர் கடைசி வரை நின்று 50 பந்துகளில் 63 ரன்களை எடுத்தார். கடைசியில் பெலுக்வாயோ என்பவர் 14 ரன்களை எடுக்க கடைசி ஓவரில் 2 சிக்சர்களை வாரி வழங்கி தோல்விக்கு இட்டுச் சென்ற பவுலர் ஃபிரைலிங்க் 6 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 15 ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணி 164 ரன்களை எட்டியது.

ஆட்ட நாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார். தற்போது பிரிவு பி-ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளின் பார்படாஸ் டிரைடண்ட்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 9 ஓவர்களில் 80 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x