Published : 07 Sep 2014 10:54 AM
Last Updated : 07 Sep 2014 10:54 AM

உலகக் கோப்பையை தக்கவைக்க பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும்: இந்திய கேப்டன் தோனி வலியுறுத்தல்

உலகக் கோப்பையை தக்கவைப்பதற்கு கடைசிக் கட்ட ஓவர்களை சிறப்பாக வீசும் திறனை இந்திய பவுலர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. எனினும் லீட்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி கண்டது.

இந்த போட்டிக்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் தோனி, “கடைசிக் கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்துவீசுவதை மேம்படுத்த வேண்டும். ஏனெனில் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் முற்றிலும் மாறுபட்டவை.

நியூஸிலாந்தில் நாம் நிறைய போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்றாலும், அங்குள்ள மைதானங்கள் அனைத்தும் சிறியவை. அதனால் 40 ஓவர்களுக்குப் பிறகு நாம் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்த முடியாது. எனவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படும். அப்போது சிறப்பாக பந்துவீச வேண்டிய பொறுப்பு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இருக்கிறது” என்றார்.

இந்திய அணி அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளுடன் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

அது தொடர்பாக பேசிய தோனி, “அணியில் ஏதாவது குறை இருப்பின் அதை விரைவாக தீர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து வரக்கூடிய போட்டிகளை நன்றாக பயன்படுத்திக் கொள்வது மிக முக்கியமானது. அதேநேரத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்போது யார்க்கர் பந்துகளை வீசுவதும், பந்தை ஸ்விங் செய்வதும் கடினமாக இருக்கும். ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் போட்டி எப்படி இருக்கும் என்பதை துல்லியமாகக் கணிக்க முடியாது” என்றார்.

இங்கிலாந்திடம் தோற்றது குறித்துப் பேசிய தோனி, “பந்துவீச்சு நன்றாக இருந்தது. இந்த மைதானத்தில் 300 ரன்கள் என்பது சராசரியான ஸ்கோர்தான். ஆனால் மிடில் ஓவர்களில் மிக எளிதாக விக்கெட்டை இழந்துவிட்டோம். அதன்பிறகு வெற்றி பெறுவதற்கான நிலையில் இல்லை. மிக எளிதாக விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிட்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x