Published : 29 Sep 2014 02:43 PM
Last Updated : 29 Sep 2014 02:43 PM
மொஹாலியில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் நடத்தையை மீறியதற்காக கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் கிளென் மேக்ஸ்வெல் எச்சரிக்கப்பட்டார்.
கோப்ராஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சைபிராண்ட் எங்கெல்பிரெக்ட் என்பவரிடம் 23 ரன்களுக்கு பவுல்டு ஆனார் கிளென் மேக்ஸ்வெல். இதனால் வெறுப்படைந்த அவர் பெவிலியன் திரும்பிச் செல்லும் போது பவுண்டரி அருகே வைக்கப்பட்டிருந்த குப்பை போடும் தொட்டியை மட்டையால் தாக்கியதாக புகார் எழுந்தது.
இது ஐசிசி நடத்தை விதிமீறல் லெவல் 1 வகையைச் சேர்ந்தது. மேக்ஸ்வெல் தன் தவறை ஒப்புக் கொண்டார்.
அதாவது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது உடைகள், மைதானம், மைதானத்தில் உள்ள பொருட்கள் ஆகியவற்றைச் சேதப்படுத்துதல் விதிமீறல் ஆகும்.
லெவல் 1 என்பதால் வெறும் எச்சரிக்கையோடு தப்பித்தார் கிளென் மேக்ஸ்வெல்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் தனது ட்விட்டரில் நகைச்சுவையாக “குப்பைத் தொட்டியை தட்டிவிட்டதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். அதன் பிறகு குப்பைத் தொட்டியுடன் நீண்ட நேரம் பேசினேன், இப்போது எங்களிடையே உறவு நல்ல முறையில் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப், கோப்ராஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT