Published : 11 Dec 2018 02:57 PM
Last Updated : 11 Dec 2018 02:57 PM
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு தனது கடைசி கிரிக்கெட் போட்டியை ரஞ்சி கோப்பை தொடரில் ஆடினார். இதுவும் மற்றுமொரு கிரிக்கெட்டரின் ஓய்வுதானே என்று சாதாரணமாக கடந்து போக முடியவில்லை.
2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபோது தனது வாழ்நாள் கனவு நனவானதாக சச்சின் கண்ணீர் மல்க கூறினார், முன்னனி வீரர்கள் பலரும் சச்சினுக்காகவே உலகப்கோப்பையை வென்றதாக பெருமிதத்துடன் கூறியபோது “எந்த ஒரு தனி மனிதனை விடவும் தாய்நாடே பெரிது, நாட்டுக்காகவே பெருமைபடுவதாகக் கூறினார் காம்பிர்.
2012-ல் அணியிலிருந்து நீக்கப்பட்டபோது கூறப்பட்ட காரணம் இவர் இரண்டு ஆண்டுகளாக சதமடிக்கவில்லை என்பதே, ஆனால் அப்போதைய நிலையில் அவர் சதமடித்திருந்தாலும் அணிக்காக ஆடாமல் சதத்திற்காக ஆடுகிறார் என்று காரணம் கூறி நீக்கியிருப்பார்கள். ஆட்டத்தின்போது ஆக்ரோஷமாக இருக்கும் காம்பிர் தான் நீக்கப்பட்டது குறித்த சர்ச்சைகளுக்கு தன் மீது யாரும் பரிதாபப்பட வேண்டாம், எனது திறமையை நிரூபித்து மீண்டும் இடம்பிடிப்பேன் என்று முடித்துக் கொண்டார்.
5 போட்டிகளைக் கொண்ட தொடராக இருந்தால் அது ஜிம்பாப்வே அணியாக இருந்தாலும் ஒரு போட்டியிலாவது தோற்றுத்தான் தொடரை வெல்வோம் என்றிருந்த காலத்தில் கேப்டனாக 2010-ல் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என்று முழுமையாக கைப்பற்றிக் காட்டினார்.
வழக்கமாக இந்திய பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் வார்த்தைகளால் வம்பிழுக்கும்போது தலையைக் குனிந்து கொள்ளும் பழக்கம் இவரிடம் இருந்ததில்லை, அதே நேரம் ஆக்ரோஷமாக பேட்டை சுழற்றி விக்கெட்டை இழப்பதும் கிடையாது. ஆக்ரோஷத்தை உத்வேகமாக்கி அணியை வெற்றி பெற வைப்பதில் விராட் கோலிக்கு அண்ணன் இவர். ஐபிஎல் போட்டியின்போது விராட் கோலியுடனும் கடும் வாய்த் தகராறு, மீண்டும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் இடம் கிடைத்தபோது இவர் கூறியது வரும் ஐபிஎல் போட்டியிலும் அதேபோன்ற சூழல் ஏற்பட்டால் எனது அணியின் கேப்டனாக அதே ஆக்ரோஷத்துடன்தான் கோலியை சந்திப்பேன் என்றார். இதே காம்பிர்தான் 2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 150* ரன்கள் அடித்ததற்காக தனக்கு கிடைத்த ஆட்டநாயகன் விருதை அப்போட்டியில் முதல் சதம் அடித்திருந்த இளம் வீரரான விராட் கோலியை அழைத்து பகிர்ந்து கொண்டார். சக மாநில வீரர்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தரும் இப்பண்பு டெல்லி வீரர்களுக்கே உரிய தனிச்சிறப்பு.
மனதில் பட்ட நியாயமான எண்ணங்களை துணிவுடன் வெளிப்படுத்துவதில் கங்குலியை போன்றவர். 2012-ல் நடந்த முத்தரப்பு தொடரில் அடிலெய்டில் நடந்தது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம். இப்போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டபோது அந்த ஓவரில் தோனி 112 மீட்டர் சிக்ஸருடன் அணியை வெற்றி பெற வைத்த பினிஷிங் திறமையை அனைவரும் புகழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால் போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு வந்திருக்கக் கூடாது, அதற்கு முன்பே முடித்திருக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை புரிய வைத்தார். ஆம், உண்மையில் அப்போட்டியில் 270 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய போது 34.1-வது ஓவரின்போது காம்பிர் 92 ரன் எடுத்து 4-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அப்போது தேவைப்பட்ட ரன்கள் 96 பந்துகளில் 92 ரன்கள்தான், தேவையான ரன் ரேட் வெறும் 5.75 தான். அப்போது களமிறங்கிய தோனி நிலைமைக்கு ஏற்றவாறு ஆடாமல் மிக மெதுவாக ஆடி 76 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் அடித்த அந்த ஒரு சிக்ஸரை தவிர வேறு ஒரு
பவுண்டரியும் அடிக்கவில்லை. கடைசி ஓவரில் டோனிக்கு பிடிக்கப்பட்ட கேட்ச் நோபாலாக இல்லாமல் இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம். கேப்டனாகவே இருந்தாலும் அவசியமில்லாமல் கடைசி ஓவர் வரை போட்டியை இழுத்து வந்த தவறை சுட்டிக் காட்டினார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) எதிர்த்து டிஆர்எஸ் முறையை அமல்படுத்தும் துணிவு ஐசிசி-க்கே இல்லாத நிலையில் டிஆர்எஸ்-ஐ முறைக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததில் தொடங்கி சமீபத்தில் மயானங்க் அகர்வாலுக்கு வாய்ப்பளிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவது குறித்தும் துணிந்து கருத்துக்களை வைக்கிறார். ஒருவேளை மற்ற வீரர்களைப் போல் இவரும் “அனுசரித்து” போயிருந்தால் இந்திய அணியின் அலிஸ்டர் குக்காக இருந்திருக்கலாம். ஆனால் அப்படி இருந்திருந்தால் இவர் பெயருக்குரிய கம்பீரம் காணாமல் போயிருக்கும். இவருடைய இந்த யாரையும் சார்ந்திருக்காத போக்குதான் இவரின் தனித்துவமிக்க இன்னிங்ஸ்களாக போற்றப்படும் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் 75(54), 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் 97(122) மற்றும் நேப்பியர் டெஸ்டில் இரண்டு நாட்களாக களத்தில் நின்றிருந்த மன உறுதிக்கும் காரணமாக இருந்தது. ஆனால் இந்த மூன்று போட்டிகளிலுமே ஆட்ட நாயகன் விருது இவருக்கு வழங்கப்படவில்லை.
ஷாட் லெக்கில் இவரது பீல்டிங் திறமை அபாரமானது, ஆனால் ஆஸ்திரேலிய தொடரில் உச்சகட்ட பார்மில் இருந்தபோது இவரை சுழற்சி முறையில் பெஞ்சில் உட்கார வைக்க சொல்லப்பட்ட காரணம் “ஸ்லோ பீல்டர்”. கேவலமாக ஆடிக்கொண்டிருந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு தலைமையேற்று இரண்டு முறை ஐபில் கோப்பையை பெற்றுக் கொடுத்த பின்பும் அங்கு நீடிக்க முடியவில்லை. தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதபோதும் தனக்காக எதையும் கேட்காமல் தன் கடன் உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபிப்பதே என சளைக்காமல் ஆடிக்கொண்டிருந்தார்.
வெறும் புள்ளி விபரங்களுக்காக மட்டும் புகழப்படும் வீரரல்ல கம்பிர், தோனியின் மட்டை வீச்சு வேகத்தைப் பார்த்து எதிர் முனையில் நிற்கும் பேட்ஸ்மேன்களே மிரளும் நிலையில், டெஸ்ட் போட்டியை டிரா செய்ய பேராடிக் கொண்டிருக்கும் கடைசி வரிசை வீரருக்கு நிறுத்துவது போல அசால்டாக டி20 போட்டியில் அவரைச் சுற்றி பீல்டர்களை நிறுத்துவதை எல்லாம் சிங்கத்தை சிறையில் அடைக்கும் சாமர்த்தியம். அப்படி நிறுத்துவதுடன் முடிவதல்ல விஷயம், அந்த அட்டாக்கிங் பீல்டிங்கிற்கும் தானே தலைமையேற்று சில்லி பாய்ண்டில் நின்று அந்த வியூகத்தை வெற்றிகரமாக முடித்திருக்காவிட்டால் களங்கப்பட்டிருக்கும் இவரது நோக்கம்.
கடந்த ஐபிஎல்-லில் அணியின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று பாதியிலேயே டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஒதுங்கி கொண்டார். தற்போதைய டெல்லி ரஞ்சி அணியின் கேப்டன் பதவியையும் மறுத்த காம்பிர், தன்னுடைய கடைசிப் போட்டியை அனைவரையும் போல சொந்த மைதானத்திலேயே விரும்பி ஆடிக் கொண்டிருக்கிறார். அதிலும் சதமடித்து தான் ஓய்ந்துபோய் ஓய்வுபெறவில்லை என்கிறார். இவரது கருத்துக்களில் வெறும் சர்ச்சை மட்டும் இருந்திருந்தால் இவரும் பத்தோடு பதினொன்றாக ஆகியிருப்பார். உண்மையை உரக்கச் சொல்லும் துணிவு இருந்தது. அது ட்விட்டரானாலும் பொதுவெளியானாலும். இனி இவர்போல் ஒரு வீரர் கிடைப்பது அரிது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT