Last Updated : 23 Dec, 2018 05:08 PM

 

Published : 23 Dec 2018 05:08 PM
Last Updated : 23 Dec 2018 05:08 PM

திரும்பிப் பார்க்கிறோம்-2018 : தங்கத்தில் முடித்த சிந்து, திருமணத்தில் சாய்னா

2018-ம் ஆண்டு இந்திய பாட்மிண்டன் ஆடவர், மகளிர் அணிகள் இருவருக்குமே நினைவில் நிற்கக்கூடிய பொன்னான ஆண்டாக அமைந்தது என்றே கூறலாம்.

 பேட்மிண்டன் என்றாலே இந்தியாவில் கோபிசந்த் தவிரயாரையும் தெரியாமல் இருந்த நிலையில், உலகமே பாட்மிண்டனில் இந்தியாவை இன்று உற்நோக்குகிறது என்றால்,  சாய்னா, சிந்து என்றால் மிகையல்ல

இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் புதிய போட்டிக் கட்டமைப்பை இந்த ஆண்டு புகுத்தியது. வீரர்களையும், வீராங்கனைகளையும் உற்சாகப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு போட்டித்தொடரிலும் எவ்வாறு தங்கள் பங்களிப்பை அளிக்கிறார்கள் என்பதைப் பொருத்து கிரேடு முறையும், பரிசுமுறையும் அறிமுகப்படுத்தியது. பாட்மிண்டன் சம்மேளனத்தின் இந்த வித்தியாசமான முடிவுக்கு நல்ல வீரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது என்பதற்கு அவர்கள் பெற்ற பதக்கங்களே சாட்சி.

ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டனில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமைக்குரியர் 22வயதான புசர்ல வெங்கட சிந்து(பி.வி.சிந்து).

இந்த ஆண்டில் உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, தனிப்பட்ட கோப்பைக்கான பல்வேறு போட்டிகளில் சிந்து பங்கேற்றாலும் இறுதிச்சுற்று வரை வெள்ளியோடு வீடு திரும்புவராகவே இருந்துவந்தார். தங்கம் என்பது சிந்துவுக்கு எட்டாத பதக்கமாகிவிட்டதா என்றெல்லாம் பேசப்பட்டது, விமர்சிக்கப்பட்டது.

தங்கம் வெல்லும் அளவுக்கு சிந்துவால் சர்வதேச வீராங்கனைகளோடு போட்டியிட முடியாது, திறனில்லை, கடைசிநேரத்தில் நடுங்கும் “சோக்கர்ஸ்” என்ற கிண்டலுக்கு ஆளானார் சிந்து.

ஆனால், அனைவரின் விமர்சனங்களையும் உடைக்கும் வகையில் 'வேர்ல்டு டூர் பைனல்' பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று விமர்சனங்களுக்கும் தூள்தூளாக்கிக் காட்டி சுபமாக ஆண்டை முடித்துள்ளார்.

இந்த ஆண்டில் சிந்து பங்கேற்ற பல போட்டிகளில் சிறப்பான பங்களிப்புச் செய்துள்ளார். சீனாவில் ஜூலைமாதம் நடந்த 'உலக சாம்பியன்ஷிப்' போட்டியில் வெள்ளி, இந்தோனேசியாவில் ஆகஸ்ட் மாதம் நடந்த 'ஆசிய விளையாட்டு'ப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி, ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் மாதம் நடந்த 'காமென்வெல்த் போட்டி'யில் ஒற்றையர் பிரிவில் வெள்ளி, இந்தியா ஓபன், தாய்லாந்து ஓபன் ஆகிய போட்டிகளில் 2-ம் இடம் பெற்று சிந்து சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். கடந்த 15-ம் தேதி சீனாவில் நடந்த 'வேர்ல்டு டூர் பைனல்' போட்டியில் தங்கம் வென்று இந்த ஆண்டை தங்கத்துடன் மகிழ்ச்சியாக முடித்துள்ளார் சிந்து.

சாய்னாவுக்கு நினைவில் நிற்கும் ஆண்டு

saina-nehwalpngகணவர் பருப்பள்ளி காஷ்யப்புடன் சாய்னா நேவால்100 

சாய்னா நேவாலுக்கு இந்த ஆண்டு வாழ்வில் மறக்க முடியாத ஆண்டாக அமைந்திருக்கும். ஏனென்றால், காமன்வெல்த் போட்டியில் பாட்மிண்டனில் 2-வது தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெயர், மற்றொரு ஆனந்தமான விஷயம்,  திருமண பந்தத்தில் சாய்னா இணைந்துள்ளார். பிரபல பாட்மிண்டன் வீரர் பருப்பள்ளி காஷ்யப்பை திருமணம் செய்து வாழ்வின் மறக்கமுடியாத ஆண்டாக 2018 அவருக்கு அமைந்துவிட்டது.

கடந்த 2017-ம் ஆண்டின் பெரும்பகுதியான மாதங்கள் மூட்டுவலியால் அவதிப்பட்ட சாய்னா பெரும்பாலான போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்துவிட்டு 2018-ம் ஆண்டை உற்சாகமாக எதிர்நோக்கினார். அது வீண்போகவில்லை. 2018 'இந்தோனேசியா மாஸ்டர்ஸ்' முதல் போட்டியிலேயே இறுதிப்போட்டிவரை சென்று வெள்ளி வென்றார்.

ஆஸ்திரேலியாவில் நடந்த 'காமென்வெல்த் போட்டி'யில் இறுதிப்போட்டியில் சிந்துவை வீழ்த்தி 2-வது முறையாக தங்கப்பதக்கத்தை சாய்னா பெற்றார், அதுமட்டுமல்லாமல் அணியாக விளையாடியதிலும் தங்கத்தை வென்றார் சாய்னா தலைமையிலான அணி.

'ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்' போட்டியில் மூன்றாவது முறையாக இந்த ஆண்டு வெண்கலப்பதக்கத்தை வென்றார் சாய்னா. சாய்னாவின் வேகத்துக்கு தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெண்கலமே கிடைத்தது.

இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப்போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் வெண்கலம் வென்று, இந்தியாவுக்கு ஆசியப்போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்த பெருமை சாய்னாவைச் சேர்ந்தது.

டென்மார்க் ஓபன் போட்டியில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை சென்ற சாய்னா வெள்ளியோடு திரும்பினார். அதுமட்டுமல்லாமல் சயத் மோடி இன்டர்நேஷனல், இந்தோனேசியா மாஸ்டர்ஸ் ஆகிய போட்டிகளிலும் வெள்ளி வென்றார் சாய்னா. சாய்னாவைப் பொறுத்தவரை 2018-ம் ஆண்டு ஏமாற்றம் தரும் ஆண்டாக அமையாமல், ஏற்றத்தையும், புதிய வாழ்க்கையை பரிசாக அளித்த ஆண்டாகவே இருந்தது.

சமீர் வர்மா

ஆடவர் பிரிவில் சமீர் வர்மா குறிப்பிடத்தகுந்த பட்டங்களை வென்றார். சுவிஸ் ஓபன் சூப்பர் 300, சயத் மோடி இன்டர்நேஷனர், ஹைதராபாத் ஓபன் ஆகிய போட்டிகளில் பட்டம் வென்றார் சமீர் வர்மா. வேர்டு டூர் பைனல்ஸ் போட்டியில் முதன் முதலி்ல இந்த ஆண்டு பங்கேற்று அரையிறுதிவரை சென்றார் சமீர். அடுத்த ஆண்டு தங்கம் வெல்வார் என்று நம்பும் அளவுக்கு திறமையான வீரராக சமீர் வர்மா மிளிர்கிறார்.

17-வயதான லக்ஷ்யா ஆசிய ஜூனியர் பிரிவில் சாம்பியன் பட்டம்வென்று எதிர்கால இந்திய பாட்மிண்டனுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார். மேலும் இளைஞர் ஒலிம்பிக்கில் வெள்ளியும், உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலமும் லட்ஷயா வென்றது சிறப்பாக இந்த ஆண்டு அமைந்தது. அதிலும் குறிப்பாக ஆண்டு கடைசியில் டாடா ஓபன் இன்டர்நேஷன் போட்டியில் கோப்பையை வென்றார் லக்ஷ்யா.

ஸ்ரீகாந்த் ஏமாற்றம்

sreejpgசிறீகாந்த் 100 

இந்த ஆண்டு கிடாம்பி சிறிகாந்துக்குதான் ஏமாற்றமான ஆண்டாக அமைந்தது. சிறீகாந்த் பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் அரையிறுதியிலும், காலிறுதியிலும் தோல்வி அடைந்து வெளியேறினார். 2017-ம்ஆண்டு 4 கோப்பைகளை வென்ற சிறீகாந்த், 2018-ம் ஆண்டு காமென்வெலத் போட்டியில் வெள்ளி மட்டுமே வென்றார். சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் சில மாதங்கள் முதலிடத்தில் இருந்த சிறீகாந்த் அதன்பின் மோசமான ஆட்டத்தால் சரிந்தார். முதலிடத்துக்கு இந்தியர் முன்னேறியது வரலாற்று நிகழ்வாக அமைந்தது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் சிராக்ரெட்டி, சட்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகியோர் காமென்வெல்த் போட்டியில் வெள்ளி வென்று சாதித்தனர். மேலும், ஹைதராபாத் ஓபனில் வெள்ளியும், சயத் மோடி சூப்பர் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் இருவரும் கைப்பற்றினார்கள்.

அஸ்வினி

aswinijpgஅஸ்வினி பொன்னப்பா 100 

அஸ்வினி பொன்னப்பா, தனது சக பாட்னர் சிக்கி ரெட்டியுடன் இணைந்து மகளிர் இரட்டையர் பிரிவில் காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றார், சயத் மோடி இன்டர்நேஷனல் போட்டியில் வெள்ளியையும் கைப்பற்றினர். மற்றவகையில் சிறப்பான அளவுக்கு பட்டம் வெல்லவில்லை என்றபோதிலும் இந்திய பாட்மிண்டன் விளையாட்டுக்கு இந்த ஆண்டு இன்பமான, நினைவில் கொள்ளத்தக்க, சாதனைகள் நிறைந்த ஆண்டாகவே அமைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x