Published : 28 Dec 2018 02:00 PM
Last Updated : 28 Dec 2018 02:00 PM
மெல்போர்னில் நடந்து வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் கம்மினஸ் வேகப்பந்துவீச்சில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசை சிதைந்தது. 346 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலி வீரர் கம்மின்ஸ் 6 ஓவர்கள் வீசி 2 மெய்டன், 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கோலி, புஜாரா டக்அவுட்டிலும், ரஹானே, ரோஹித் சர்மா சொற்ப ரன்னிலும் நடையைக் கட்டினார்கள். மெல்போர்ன் ஆடுகளம் எந்த அளவுக்கு மோசமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் உணர்த்தினார் கம்மின்ஸ்.
அதிலும் கம்மின்ஸ் வீசிய ஒரே ஓவரில் புஜாராவும், கோலியும் டக் அவுட்டில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹானே, ரோஹித் சர்மா கூட சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினார்கள்.
28 ரன்களில் 3 விக்கெட்
28 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளையும் அதே ரன்னில் இழந்தது பரிதாபம். அடுத்த 16 ரன்களைச் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது இந்திய அணி.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 66.5 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி 4 விக்கெட்டுகளை 13 ரன்களுக்கு இழந்தது ஆஸ்திரேலியா என்பது பரிதாபமானதாகும்.
292 ரன்கள் முன்னிலை பெற்று பாலோ ஆன் வழங்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்து, 346 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. களத்தில் மயங்க் அகர்வால் 28 ரன்களுடனும், ரிஷப் பந்த் 6 ரன்களுடனும் உள்ளனர்.
சொத்தை ஆடுகளம்
ஹாரிஸ் 5 ரன்களுடனும், பிஞ்ச் 3 ரன்களுடன் இன்றைய 3-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறியிருந்ததால், இசாந்த் சர்மா, பும்ரா வேகத்தில் பந்துகள் எகிறத் தொடங்கி, கணிக்க முடியாமல் பேட்ஸ்மேனுக்குச் சென்றது.
இசாந்த் சர்மா வீசிய 11-வது ஓவரில் மிட் விக்கெட் திசையில் நின்றிருந்த மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் ஆரோன் பிஞ்ச் ஆட்டமிழந்தார்.
அடுத்து கவாஜா களமிறங்கி, ஹாரிஸுடன் சேர்ந்தார். பும்ரா வீசிய 14-வது ஓவரில் ஷார்ட் பந்தை அடிக்க முற்பட்டு இசாந்த் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து 22 ரன்களில் ஆட்டமிழந்தார் ஹாரிஸ்.
ஜடேஜா பந்துவீச அழைக்கப்பட்டதற்குப் பலன் கிடைத்தது. 20 ஓவரை ஜடேஜா வீசினார். 21 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், கவாஜாவின் மட்டையின் உள் இடுக்கில் பட்டு ஷார்ட் லெக் திசையில் அகர்வாலிடம் கேட்சானது. 53 ரன்களுக்கு ஆஸ்திரேலியா 3-வது விக்கெட்டை இழந்தது.
ஜடேஜாவின் பந்துகள் இந்த அளவுக்கு ‘டர்ன்’ ஆகுமா என்பது வியப்புதான். அது ஆடுகளத்தின் தன்மையா அல்லது ஜடேஜாவின் திறமையா எனும் அளவுக்கு பேட்ஸ்மேன்கள் ஆடுவதற்குக் கடினமாக இருந்தது.
33-வது ஓவரை பும்ரா வீச மார்ஷ் எதிர்கொண்டார். கடைசிப் பந்தை பும்ரா மிக அருமையான ஸ்லோ டெலிவரி செய்ய அதை கால்காப்பில் வாங்கி எல்பிடபிள்யு முறையில் 19 ரன்களில் வெளியேறினார் மார்ஷ்.
பும்ரா வீசிய 37-வது ஓவரில் டிராவிஸ் ஹெட்டின் ஸ்டெம்புகள் எகிறி கிளீன் போல்டு என்ற முறையில் 20 ரன்களில் வெளியேறினார்.
ஜடேஜா வீசிய 44-வது ஓவரில் முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து மிட்ஷெல் மார்ஷ் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
பெய்ன் 12 ரன்களுடன், கம்மின்ஸ் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். முகமது ஷமி வீசிய 60-வது ஓவரில் கம்மின்ஸ் 17ரன்களில் ஆட்டமிழந்தார்.
2-வது சிறந்த பந்துவீச்சு
அடுத்து ஸ்டார்க் களமிறங்கி, பெய்னுடன் சேர்ந்தார். நிதானமாக பேட் செய்த நிலையில், பும்ராவிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார் பெய்ன். 67-வது ஓவரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் லயனை எல்பிடபிள்யு முறையிலும் ஹேசல்வுட்டை கிளீன் போல்டாக்கியும் வெளியேற்றிய பும்ரா ஆஸ்திரேலிய முதல் இன்னிங்ஸை முடித்து வைத்தார்.
66.5 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்தியத் தரப்பில் பும்ரா 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியாவில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவரின் 2-வது மிகச்சிறந்த பந்துவீச்சாக பும்ராவின் பந்துவீச்சு அமைந்து. கடந்த 1985-ம் ஆண்டு கபில்தேவ் அடிலெய்டில் ஆஸி.க்கு எதிராக 106 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். அதேபோல கடந்த 1997-ம் ஆண்டு பி.சந்திரசேகர் 52 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி பாலோ ஆன் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கியது.
விஹாரி, மயங்க் அகர்வால் களமிறங்கினார்கள். இருவரும் 28 ரன்கள் வரை நிதானமாவே ஆஸி. வீரர்களின் பந்துவீச்சைக் கையாண்டனர். ஆஸ்திரேலிய வீரர்களைப் போல் இந்திய பேட்ஸ்மேன்களும் பேட்டிங் செய்ய மிகவும் சிரமப்பட்டனர். அந்த சிரமம் 13-வது ஓவரில் இருந்து தெரிந்தது.
கம்மின்ஸ் மிரட்டல்
விஹரியின் 'வீக் பாயின்ட்' தெரிந்துகொண்டு கம்மின்ஸ் பவுன்ஸர் வீசிய எளிதாக விக்கெட்டைப் பறிகொடுத்தார். 13-வது ஓவரின் கடைசிப் பந்தில் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து விஹாரி 13 ரன்களில் வெளியேறினார்.
15-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இநத் ஓவரின் 2-வது பந்தில் புஜாரா லெக் கல்லி திசையில் நின்றிருந்த ஹாரிஸிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்த கோலியும் ‘லெக் கல்லி திசையில்’ வீசப்பட்ட பந்தில் ஹாரிஸிடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்தில் வெளியேறினார். இந்திய அணி 28 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது.
17-வது ஓவரை கம்மின்ஸ் வீச வந்தபோது, ரஹானே வெளியேறினார். டவுன்லெக் திசையில் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ஒரு ரன்னில் வெளியேறினார்.
ரோஹித் சர்மா, அகர்வால் ஓரளவுக்கு நிதானமாக பேட் செய்தனர். ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சை மிக லாவகமாக அகர்வால் எதிர்கொண்டார். ஆனால், ஹேசல்வுடந் வீசிய 22-வது ஓவரில் ரோஹித் சர்மா 5 ரன்கள் சேர்த்த நிலையில், முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த மார்ஷிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
களத்தில் மயங்க் அகர்வால் 28 ரன்களுடனும், ரிஷப் பந்த் 6 ரன்களுடனும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT