Last Updated : 18 Dec, 2018 10:14 AM

 

Published : 18 Dec 2018 10:14 AM
Last Updated : 18 Dec 2018 10:14 AM

நீண்ட இடைவெளிக்குப் பின் ஆஸி. வெற்றி: போராடாமல் இந்திய அணி சரண்; தோல்வியில் ‘புதிய சாதனை’

பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 146 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து நீண்ட வெற்றி தாகத்தை தணித்துக்கொண்டது ஆஸ்திரேலிய அணி.

இன்று ஆட்டம் தொடங்கியது முதல் மொத்தமே 15 ஓவர்கள் மட்டுமே விளையாடிய இந்திய அணி மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் 28 ரன்களுக்குள் போராடாமல் தாரை வார்த்துக் கொடுத்து தோல்வி அடைந்தது.

'சூப்பர் சாதனை'

இந்தத் தோல்வியின் மூலம் இந்த ஆண்டில் வெளிநாடுகளில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பெறும் 7-வது தோல்வி இதுவாகும். இதற்கு முன் அதிகபட்சமாக ஒரு ஆண்டில் வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டி தோல்வி என்பது 6 மட்டுமே கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தது. அதை இப்போதுள்ள இந்திய அணி முறியடித்து சாதனை படைத்துவிட்டது.

அதேசமயம், இந்த ஆண்டு டர்பன் நகரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது, அதன்பின் எந்த டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறவில்லை.

ஏறக்குறைய 8 டெஸ்ட் போட்டிகளாக வெற்றியே இல்லாமல் வறண்டு, துவண்டு, சோர்வடைந்து கிடந்த ஆஸ்திரேலிய அணிக்கு இந்த வெற்றி நீர்பாய்ச்சி புதிய தெம்பை அளித்திருக்கிறது. இந்த வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் வீழ்த்திய நாதன் லயன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பாடம் கற்குமா?, மாற்றம் நிகழுமா?

அதேசமயம் இந்திய அணியும் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொண்டது. தொடக்க வீரர்கள் சரியில்லாமல் ஆடியதால், கடந்த 2 டெஸ்ட் போட்டியிலும் நடுவரிசை வீரர்களுக்கே சுமை கூடியது. குறிப்பாக சட்டீஸ்வர் புஜாரா, ரஹானே, விராட் கோலி ஆகியோரே கடந்த 2 டெஸ்ட் போட்டியிலும் பெரும்பாலும் சுமையைச் சுமந்தனர்.

ஆதலால், அடுத்து வரும் 2 டெஸ்ட் போட்டியில் தொடக்கக் கூட்டணியை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக பிரித்வி ஷா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மயங்க் அகர்வால், ஹர்திக் பாண்டியா வருகின்றனர். ஆதலால், புதிய வீரர்களை அணிக்குக் கொண்டு வந்து வரும் 26-ம் தேதி தொடங்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை வலிமையாக எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இந்திய அணி உள்ளது.

அணியில் விராட் கோலிக்கு அடுத்தார்போல், நின்று நிலைத்து பேட் செய்யக்கூடிய வீரர்கள் இல்லாதது தோல்விக்கு முக்கியக் காரணமாகும், ரிஷப் பந்த் இளம் வீரராகவும், பொறுமையாக களத்தில் நிற்க இயல்பில்லாதவராக உள்ளார். ஆதலால், அடுத்த 2 டெஸ்ட் போட்டியில் பர்தீவ் படேலை களமிறங்கி இந்திய அணி சோதிக்கலாம். ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த காலத்தில் அவரின் அனுபவம், பேட்டிங் அனுபவம் ஆகியவை இந்திய அணிக்கு சிறப்பு சேர்க்கும்.

இந்த டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த கேப்டன் விராட் கோலி, சிறப்பு வாய்ந்த சுழற்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம். உமேஷ் யாதவுக்குப் பதிலாக பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்படும் ரவிந்திர ஜடேஜாவை அணியில் சேர்த்திருந்தால், கடைசி வரிசை பேட்டிங்கை பலப்படுத்தி இருப்பார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்களுக்கும், இந்திய அணி 283 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலையையும் சேர்த்து இந்திய அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியதால், தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இந்த டெஸ்ட் போட்டியிலும் கே.எல்.ராகுலும், முரளி விஜய்யும் சொதப்பலாக பேட் செய்தனர்.

மோசமான தொடக்கம்

ராகுல் டக்அவுட்டிலும், முரளி விஜய் 20 ரன்னிலும் வெளியேறினார்கள். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து சவால் விட்ட விராட் கோலி 17 ரன்னிலும், ரஹானே 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 112 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துள்ளது. களத்தில் விஹாரி 24 ரன்களுடனும், ரிஷப் பந்த் 9 ரன்களுடனும் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

15 ஓவர்களில் முடிந்தது

rishjpgஆட்டமிழந்து வெளியேறிய ரிஷப் பந்த் : படம் உதவி ட்விட்டர்100 

 

விஹாரி கூடுதலாக 4 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டார் பந்துவீச்சில் மிட்விக்கெட்டில் ஹாரிஸிடம் கேட்ச் கொடுத்து 28 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து உமேஷ் யாதவ் களமிறங்கி, ரிஷப் பந்துடன் சேர்ந்தார். இருவரும் சில ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தனர். களத்தில் பொறுமை காக்காமல் பேட் செய்த ரிஷப் பந்த் அவசரப்பட்டு விக்கெட்டைப் பறிகொடுத்தார். லயன் வீசிய 54-வது ஓவரில் பவுண்டரி அடித்த நிலையில் அடுத்த பந்தை ரிஷப் பந்த் தூக்கி அடிக்க அது மிட்விக்கெட் திசையில் ஹேண்ட்ஸ்கம் கையில் கேட்சாக மாறியது. ரிஷப் பந்த் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஸ்டார்க் வீசிய 55-வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து உமேஷ் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

55-வது ஓவரை வீசிய கம்மின்ஸ் தனது பங்கிற்கு டெய்லண்டர்கள் பும்ரா, இசாந்த் சர்மாவை டக்அவுட்டில் அனுப்பினார்.

56 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 140ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் லயன், ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x