Published : 30 Dec 2018 09:22 AM
Last Updated : 30 Dec 2018 09:22 AM
எங்களுடைய வெற்றியை யாரும் தடுக்க முடியாது, இந்த வெற்றி இதோடும் முடித்துக்கொள்ளப் போவதில்லை, சிட்னியிலும் எங்கள் வெற்றி தொடரும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மெல்போர்னில் நடந்த பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது. இதன் மூலம் 40 ஆண்டுகளில் டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளை வென்றுள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்றுமுன்னிலை வகிக்கிறது இந்திய அணி. சிட்னியில் கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி அடுத்து நடைபெற உள்ளது.
இந்த போட்டியின் வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
நாங்கள் இந்த வெற்றியோடு நிறுத்திக்கொள்ளப் போவதில்லை. இந்த வெற்றி எங்களுக்கு அதிகமான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த வெற்றி சிட்னியிலும் தொடரும். பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம், அதனால்தான் நாங்கள் பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைத்துள்ளோம். இதைத் தொடரவே விரும்புகிறோம்.
தென் ஆப்பிரிக்காவிலும் இதேபோன்ற நம்பிக்கையான கிரிக்கெட்டைத்தான் வெளிப்படுத்தினோம். அடுத்து வரும் போட்டிகளில் நான் நீண்ட நேரம் நிலைத்து பேட் செய்து அதிக ரன்கள் அடிக்க விரும்புகிறேன். அதிலும் 4-வது 5-வது நாளில் மெல்போர்ன் மைதானத்தில் பேட் செய்வது கடினமாக இருந்தது. ஆஸ்திரேலிய அணிக்கும் கடினமாக இருந்தது என்பது தெரியும். இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் எங்கள் பந்துவீச்சாளர்கள்தான். குறிப்பாக பும்ரா.
3 வேகப்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து அதிகமான விக்கெட்டுகளை ஒரு ஆண்டில் அணிக்காக வீழ்த்தி இருக்கிறார்கள். கூட்டாக இருந்து இவர்கள் சிறப்பாக பந்துவீசுவதைப் பார்க்கும் போது, கேப்டனாக நான் பெருமைப்படுகிறேன்.
எங்களுடைய முதல்தரமான கிரிக்கெட் அமர்க்களமாக இருக்கிறது, அதனால்தான் இந்தப் போட்டியில் வென்றோம். இந்தியாவில் முதல் தரமான வசதிகளும், அதற்கான வாய்ப்புகளும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு இருந்ததால், வெளிநாடுகளில் சிறப்பாக பங்களிப்பு செய்ய முடிகிறது.
மயங்க் அகர்வால் பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். புஜாரா எப்போதுமே சிறப்பு, புஜாராவுடன் இணைந்து அதிகமான ரன் அடிக்க நினைக்கிறேன். முதல் இன்னிங்ஸில் விஹாரி நீண்டநேரம் நிலைத்து ஆடி, நம்பிக்கையூட்டியுள்ளார். ரோஹித் சர்மாவும் பங்களிப்பு செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முதல் இந்திய கேப்டன் நானாக இருப்பேனாஎன்பது தெரியாது. நேர்மையாகப் பதிலும் அளிக்க இயலாது. கடைசி டெஸ்ட் போட்டியில் எங்கள் வெற்றியை எதுவும்தடை செய்ய முடியாது.
இவ்வாறு கோலி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT