Last Updated : 28 Dec, 2018 09:06 AM

 

Published : 28 Dec 2018 09:06 AM
Last Updated : 28 Dec 2018 09:06 AM

புஜாரா சொல்லியது பலித்தது: விக்கெட்டுகளை இழந்து ஆஸி. போராட்டம்: பும்ரா அபாரம்

மெல்போர்னில் நடந்துவரும் பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 100 ரன்களைச் சேர்ப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிர்த் பும்ரா, இசாந்த், சர்மா, ஜடேஜா ஆகியோரின் கணிக்க முடியாத பந்துவீச்சால் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறுகின்றனர்.

மெல்போர்ன் ஆடுகளம் 'சொத்தை ஆடுகளம்'(ஐசிசி 'புவர் ரேட்டிங்') என்று ஏற்கனவே ஐசிசி தெரிவித்துள்ள நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் ஆடுகளம் மூன்றாவது நாளில் இருந்து மாறிவிட்டது.

இந்த ஆடுகளத்தில் இந்திய அணியை முதல் இன்னிங்ஸில் 200 ரன்களுக்குள் சுருட்டும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்படும் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், முற்றிலும் மாறுபட்டு இருப்பதால், ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங் செய்ய மிகவும் சிரமப்படுகின்றனர்.

ஆடுகளத்தின் தன்மை சீராக இல்லாததால், ஏதாவது குறிப்பிட்ட இடத்தில் பந்தை 'பிட்ச்' செய்தால், பவுன்ஸ் ஆகியும், ஸ்விங் ஆகியும் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்துவருகிறது.

இந்த ஆடுகளம் குறித்து சத்தீஸ்வர் புஜாராவும், ஆஸி. கேப்டன் டிம் பெய்னும் கூறிய கருத்து உண்மையாகியுள்ளது. புஜாரா கூறுகையில், “ இந்த ஆடுகளத்தில் 400 ரன்களுக்கு மேல் அடித்ததே வெற்றிக்கான ஸ்கோர்தான். ஆடுகளம் 3-வது நாளில் மாற்றமடைந்துவிடும்” எனத் தெரிவித்திருந்தார். அது பலித்துவிட்டது.

அதுமட்டுமல்லாமல் இந்த ஆடுகளத்தில் முதலில் டாஸ் வென்று பேட் செய்து நல்ல ஸ்கோர் செய்தால், வெற்றி எளிது என்று 'பிட்ச் ரிப்போர்ட்' கூறியது. அதன் அடிப்படையில் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்றது இந்திய அணிக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமாகும்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டிவிட்டதால், அந்த இலக்கை அடைய வேண்டும் என்ற நெருக்கடி  ஆஸி. அணிக்கு அதிகரித்துள்ளது, இதனால், ஆஸ்திரேலிய வீரர்கள் சிறிது அதிரடி ஆட்டத்தை காலையில் இருந்து கையாண்டனர். ஆஸி. வீரர்களின் நெருக்கடியை சரியாகப் பயன்படுத்திய இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

முதல் இரு நாட்கள் யாரும் கணிக்க முடியாத நிலையில் ஆட்டம் சென்றநிலையில், இப்போது ஆட்டத்தின் போக்கு மாறியுள்ளது. தோல்வியைத் தவிர்க்கும் வகையில் ஆஸ்திரேலிய அணி போராடி வருகிறது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வேண்டிய சூழல் இருக்காது என்ற நிலையை நோக்கி ஆட்டம் சென்றாலும் வியப்படையத் தேவையில்லை என்ற கோணத்தில் ஆட்டம் செல்கிறது.

443 டிக்ளேர்

மெல்போர்னில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 443 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, நேற்று மாலை முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் சேர்த்திருந்தது. ஹாரிஸ் 5 ரன்களுடனும், பிஞ்ச் 3 ரன்களுடன் களத்தில் இருந்து இன்றைய 3-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

10-வது ஓவரில்

இன்றைய மூன்றாம் நாளில் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறிவிட்டது. இசாந்த் சர்மா, பும்ரா வேகத்தில் பந்துகள் எகிறத் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய5 –வது ஓவரிலேயே விக்கெட் விழுந்தது.

இசாந்த் சர்மா வீசிய 11-வது ஓவரில் மிட்விக்கெட் திசையில் நின்றிருந்த மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் ஆரோன் பிஞ்ச் ஆட்டமிழந்தார். 24 ரன்களுக்கு முதல்விக்கெட்டை இழந்தது ஆஸி.

அடுத்து கவாஜா களமிறங்கி, ஹாரிஸுடன் சேர்ந்தார். ஆனால், ஹாரிஸ் அடுத்த 3 ஓவர்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பும்ரா வீசிய 14-வது ஓவரில் ஷார்ட் பந்தை அடிக்க முற்பட்டு இசாந்த் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து 22 ரன்களில் ஆட்டமிழந்தார் ஹாரிஸ். 36 ரன்களில் 2-வது விக்கெட்டு பறிகொடுத்தது ஆஸி.

3-வது விக்கெட்டுக்கு மார்ஷ் களமிறங்கி, கவாஜுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக பந்துகளை எதிர்கொண்டனர். ஆனால், ஆடுகளம் எகிறத் தொடங்கியதால், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் பந்தை கணித்து ஆடமுடியவில்லை. இதனால் ரன் சேர்ப்பதிலும் மந்தநிலை நீடித்தது.

ஜடேஜா சுழல்

ஜடேஜா பந்துவீச அழைக்கப்பட்டதற்குப் பலன் கிடைத்தது. 20 ஓவரை ஜடேஜா வீசினார். 21 ரன்கள் சேர்த்திருந்த நிலையில்,கவாஜாவின் மட்டையின் உள் இடுக்கில் பட்டு ஷார்ட் லெக் திசையில்  அகர்வாலிடம் கேட்சானது. 53 ரன்களுக்கு ஆஸ்திரேலியா 3 –வது விக்கெட்டை இழந்தது.

4-வதுவிக்கெட்டுக்கு ஹெட் களமிறங்கி மார்ஷுடன் சேர்ந்தார். ஜடேஜாவின் பந்துகள் இந்த அளவுக்கு ‘டர்ன்’ ஆகுமா என்பது வியப்புதான். அது ஆடுகளத்தின் தன்மையா அல்லது ஜடேஜாவின் திறமையா எனும் அளவுக்கு பேட்ஸ்மேன்கள் ஆடுவதற்குக் கடினமாக இருந்தது.

33-வது ஓவரை பும்ரா வீச மார்ஷ் எதிர்கொண்டார். கடைசிப் பந்தை பும்ரா மிக அருமையான ஸ்லோ டெலிவரி செய்ய அதை கால்காப்பில் வாங்கி எல்பிடபிள்யு முறையில் 19 ரன்களில் வெளியேறினார் மார்ஷ். 89 ரன்களில் 4-வது விக்கெட்டை பறிகொடுத்தது ஆஸி.

மிட்ஷெல் மார்ஸ் களமிறங்கி, ஹெட்டுடன் சேர்ந்தார். இருவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பும்ரா வீசிய 37-வது ஓவரில் மீண்டும் விக்கெட் விழுந்தது. ஆடுகளத்தின் வித்தியாசமான தன்மையால் இரு பந்துகள் எகிறத் தொடங்கின. 4-வது பந்தில் டிராவிஸ் ஹெட்டின் ஸ்டெம்புகள் எகிறி கிளீன் போல்டு என்ற முறையில் 20 ரன்களில் வெளியேறினார். 92 ரன்களுக்கு 5-வது விக்கெட்டை இழந்தது ஆஸி.

அடுத்ததாக கேப்டன் பெய்ன் கடும் நெருக்கடியுடன் களமிறங்கினார். ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் சேர்ப்பதைக் காட்டிலும் விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் முயற்சியில் பேட் செய்து பார்த்தும் முடியவில்லை. அடுத்த சிறிதுநேரத்தில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட் வீழ்ந்தது.

ஜடேஜா வீசிய 44-வது ஓவரில் முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து மிட்ஷெல் மார்ஷ் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 102 ரன்களுக்கு 6-வது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா.

பெய்ன் 12 ரன்களுடன், கம்மின்ஸ் 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் சேர்த்துள்ளது ஆஸ்திரேலியா. 323 ரன்கள் பின்தங்கியுள்ள ஆஸ்திரேலிய அணியின் கைவசம் இன்னும் 4 விக்கெட்டுகள் கைவசம் உள்ளன.

இன்று மாலைக்குள் ஆஸி. அணிக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு வேளை இந்திய அணி பாலோ-ஆன் தருகிறதா அல்லது தொடர்ந்து பேட் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால், தோல்வியைத் தவிர்க்க ஆஸ்திரேலிய அணி போராடத் தொடங்கிவிட்டது என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x