Published : 06 Sep 2014 09:26 AM
Last Updated : 06 Sep 2014 09:26 AM

5-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து ஆறுதல் வெற்றி

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லீட்ஸில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சதமடித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாய் இருந்தார்.

இங்கிலாந்து நிர்ணயித்த 295 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே ரஹானேவை இழந்தது. தொடர்ந்து சொதப்பி வரும் கோலி, 6-வது ஓவரில் ஆண்டர்சன் வீசிய பந்தில் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்த தவான், ராயுடு ஜோடியால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாமல் போனது. தவான் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மோயின் அலியின் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

சிறப்பாக ஆடிய ராயுடு 59 பந்துகளில் அரை சதம் கண்டார். ஆனால் அவரும் அடுத்த சில ஓவர்களில் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரெய்னா 18 ரன்கள், தோனி 29 ரன்கள், அஸ்வின் 16 ரன்கள் என சீரான இடைவேளையில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் ஆடிவந்த ரவீந்திர ஜடேஜா மட்டும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

30 பந்துகளில் 86 ரன்கள் தேவை என்கிற நிலையில், கடைசி விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஜடேஜா, உமேஷ் யாதவ் இணை, 24 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தது. இதில் 2 பந்துகளை மட்டுமே சந்தித்த யாதவ், ஒரு ரன் கூட சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முடிவாக, 49-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா 87 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில், முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அடுத்த 3 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 5-வது போட்டியிலாவது இங்கிலாந்து வெற்றி பெறுமா என்ற ஏங்கிய சொந்த ஊர் ரசிகர்களுக்கு, இந்த வெற்றி பெரிய ஆறுதலாக அமைந்தது. 113 ரன்கள் அடித்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆட்டநாயகனாகவும், இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முன்னதாக டாஸ் வென்ற, இங்கிலாந்தை பேட்டிங்கை செய்ய அழைத்தார். துவக்க வீரர் ஹேல்ஸ் 4 ரன்களுக்கு வெளியேற, வழக்கத்தை விட முன்னதாக களமிறக்கப்பட்ட மோயின் அலி 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். கேப்டன் குக் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஆடிவந்த ஜோ ரூட், இந்திய பந்துவீச்சை சிறப்பாக சந்தித்தார். 68 பந்துகளில் அரை சதம் தொட்ட ரூட், பவர்ப்ளேவில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவருடன் இணைந்த பட்லரும் தன் பங்கிற்கு, இந்தியாவின் பந்துவீச்சை சிதறடித்தார். பவர்ப்ளே ஓவர்களில் (5 ஓவர்கள்) 54 ரன்கள் குவிய, இங்கிலாந்து அணியின் ரன்ரேட் உயர்ந்தது. 40 பந்துகளை சந்தித்த பட்லர் 49 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனதால் அரை சதத்தை தவறவிட்டார். 104 பந்துகளில் 97 ரன்கள் எடுத்திருந்த ரூட், ஜடேஜாவின் பந்தை சிக்ஸருக்கு விளாசி, சதத்தை எட்டினார். இது அவரது சொந்த மண் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவாக 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x