Last Updated : 28 Dec, 2018 10:49 AM

 

Published : 28 Dec 2018 10:49 AM
Last Updated : 28 Dec 2018 10:49 AM

பும்ரா வேகத்தில் சுருண்டது ஆஸி.; 151 ரன்களுக்கு ‘ஆல் அவுட்’: பாலோ ஆன் வழங்கவில்லை

மெல்போர்னில் நடந்து வரும் பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் பும்ராவின் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆஸ்திரேலிய அணி 292 ரன்கள் பின்தங்கி இருக்கும் நிலையில், இந்திய அணி பாலோ ஆன் வழங்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியுள்ளது.

66.5 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. கடைசி 4 விக்கெட்டுகளை 13 ரன்களுக்கு இழந்தது ஆஸ்திரேலியா என்பது பரிதாபமானதாகும்.

மெல்போர்னில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 443 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, நேற்று மாலை முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் சேர்த்திருந்தது. ஹாரிஸ் 5 ரன்களுடனும், பிஞ்ச் 3 ரன்களுடன் களத்தில் இருந்து இன்றைய 3-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

10-வது ஓவரில்

இன்றைய மூன்றாம் நாளில் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறிவிட்டது. இசாந்த் சர்மா, பும்ரா வேகத்தில் பந்துகள் எகிறத் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 5-வது ஓவரிலேயே விக்கெட் விழுந்தது.

இசாந்த் சர்மா வீசிய 11-வது ஓவரில் மிட் விக்கெட் திசையில் நின்றிருந்த மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் ஆரோன் பிஞ்ச் ஆட்டமிழந்தார். 24 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது ஆஸி.

அடுத்து கவாஜா களமிறங்கி, ஹாரிஸுடன் சேர்ந்தார். ஆனால், ஹாரிஸ் அடுத்த 3 ஓவர்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். பும்ரா வீசிய 14-வது ஓவரில் ஷார்ட் பந்தை அடிக்க முற்பட்டு இசாந்த் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து 22 ரன்களில் ஆட்டமிழந்தார் ஹாரிஸ். 36 ரன்களில் 2-வது விக்கெட்டைப் பறிகொடுத்தது ஆஸி.

3-வது விக்கெட்டுக்கு மார்ஷ் களமிறங்கி, கவாஜுடன் இணைந்தார். இருவரும் நிதானமாகப் பந்துகளை எதிர்கொண்டனர். ஆனால், ஆடுகளம் எகிறத் தொடங்கியதால், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் பந்தை கணித்து ஆட முடியவில்லை. இதனால் ரன் சேர்ப்பதிலும் மந்தநிலை நீடித்தது.

 

ஜடேஜா சுழல்

ஜடேஜா பந்துவீச அழைக்கப்பட்டதற்குப் பலன் கிடைத்தது. 20 ஓவரை ஜடேஜா வீசினார். 21 ரன்கள் சேர்த்திருந்த நிலையில்,கவாஜாவின் மட்டையின் உள் இடுக்கில் பட்டு ஷார்ட் லெக் திசையில் அகர்வாலிடம் கேட்சானது. 53 ரன்களுக்கு ஆஸ்திரேலியா 3 –வது விக்கெட்டை இழந்தது.

4-வது விக்கெட்டுக்கு ஹெட் களமிறங்கி மார்ஷுடன் சேர்ந்தார். ஜடேஜாவின் பந்துகள் இந்த அளவுக்கு ‘டர்ன்’ ஆகுமா என்பது வியப்புதான். அது ஆடுகளத்தின் தன்மையா அல்லது ஜடேஜாவின் திறமையா எனும் அளவுக்கு பேட்ஸ்மேன்கள் ஆடுவதற்குக் கடினமாக இருந்தது.

33-வது ஓவரை பும்ரா வீச மார்ஷ் எதிர்கொண்டார். கடைசிப் பந்தை பும்ரா மிக அருமையான ஸ்லோ டெலிவரி செய்ய அதை கால்காப்பில் வாங்கி எல்பிடபிள்யு முறையில் 19 ரன்களில் வெளியேறினார் மார்ஷ். 89 ரன்களில் 4-வது விக்கெட்டை பறிகொடுத்தது ஆஸி.

மிட்ஷெல் மார்ஸ் களமிறங்கி, ஹெட்டுடன் சேர்ந்தார். இருவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பும்ரா வீசிய 37-வது ஓவரில் மீண்டும் விக்கெட் விழுந்தது. ஆடுகளத்தின் வித்தியாசமான தன்மையால் இரு பந்துகள் எகிறத் தொடங்கின. 4-வது பந்தில் டிராவிஸ் ஹெட்டின் ஸ்டெம்புகள் எகிறி கிளீன் போல்டு என்ற முறையில் 20 ரன்களில் வெளியேறினார். 92 ரன்களுக்கு 5-வது விக்கெட்டை இழந்தது ஆஸி.

அடுத்ததாக கேப்டன் பெய்ன் கடும் நெருக்கடியுடன் களமிறங்கினார். ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் சேர்ப்பதைக் காட்டிலும் விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் முயற்சியில் பேட் செய்து பார்த்தும் முடியவில்லை. அடுத்த சிறிதுநேரத்தில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட் வீழ்ந்தது.

ஜடேஜா வீசிய 44-வது ஓவரில் முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து மிட்ஷெல் மார்ஷ் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 102 ரன்களுக்கு 6-வது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா.

முடிந்தது ஆஸி.

bh11jpgவிக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பும்ரா : படம் உதவி ட்விட்டர்100 

பெய்ன் 12 ரன்களுடன், கம்மின்ஸ் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். முகமது ஷமி வீசிய 60-வது ஓவரில் கம்மின்ஸ் 17ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஸ்டார்க் களமிறங்கி, பெய்னுடன் சேர்ந்தார். நிதானமாக பேட் செய்த நிலையில், பும்ராவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார் பெய்ன். பும்ரா வீசிய 65-வது ஓவரில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து 22ரன்களில் பெய்ன் ஆட்டமிழந்தார். அதன்பின் ஆஸ்திரேலயாவின் சரிவை பும்ரா பார்த்துக்கொண்டார்.

67-வது ஓவரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் லயனை எல்பிடபிள்யு முறையிலும் ஹேசல்வுட்டை கிளீன் போல்டாக்கியும்  வெளியேற்றிய பும்ரா ஆஸ்திரேலிய முதல் இன்னிங்ஸை முடித்து வைத்தார்.

66.5 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்தியத் தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x