Published : 26 Nov 2018 08:43 PM
Last Updated : 26 Nov 2018 08:43 PM

புதிய பெர்த் மைதானம், புதிய பிட்ச்: இந்திய அணிக்குக் காத்திருக்கும் அபாயம்

பெர்த் டெஸ்ட் என்றாலே ஒரு காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்குக் கொண்டாட்டம்தான், பேட்ஸ்மென்களுக்குத் திண்டாட்டம்தான். இம்முறை இந்தியா ஆடும் பெர்த் மைதானம் முற்றிலும் புதிது, முன்பு ஆடும், ‘வக்கா’ என்று அழைக்கப்படும் மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க மைதானம் அல்ல. இது முற்றிலும் புதிய மைதானம்.

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது, பிறகு 2வது டெஸ்ட் டிசம்பர் 14ம் தேதி இந்த புதிய பெர்த் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்தப் பிட்ச் ட்ராப் இன் பிட்ச் ஆகும், அதாவது வேறு இடத்தில் செய்து இங்கு கொண்டு வந்து பதிப்பார்கள். இதில் புற்கள் வளர்க்கப்பட்டு கடினமாக இருக்கும். முதல் 2 நாட்கள் பந்துகள் குறைந்தது பேட்ஸ்மென்களின் தொண்டைக்குழி, முகம் வரைக்கும் பவுன்ஸ் ஆகும்.

இதில் சமீபமாக ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகள் ஒருநாள் போட்டியில் மோத, ஸ்டெய்ன், ரபாடா, லுங்கி இங்கிடியை ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களாலேயே ஆட முடியவில்லை. அப்படி பந்துகள் எகிறின.   இந்திய பேட்ஸ்மென்களில் விராட் கோலி நீங்கலாக ஒருவரும் ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்ளக் கூடியவர்கள் அல்ல. அதாவது ஷார்ட்பிட்ச் பந்துகளை எதிர்பார்த்து கால்கள் நகராமல் ஃபுல் லெந்த் பந்துகளுக்கு மட்டையை நீட்டி அவுட் ஆகக்கூடியவர்கள் இந்திய பேட்ஸ்மென்கள். பெர்த்தில் இதற்கான வாய்ப்பு அதிகம்.

இந்த மைதானத்தின் பிட்ச் தயாரிப்பாளரான அனுபவமிக்க சிப்தோர்ப் என்பவர் ஆஸி. ஊடகம் ஒன்றில் கூறும்போது,  “ஆஸி.-தென் ஆப்பிரிக்கா போட்டியின் போது பிட்சில் பவுன்ஸ் அதிகமாக இருந்தது.  இம்முறையும் 4 நாள் ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டி, பிறகு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆகியவற்றில் பந்துகள் நிச்சயம் முதல் 2 நாட்களுக்கு கண்டபடி எகிறும். அதன் பிறகு அது எப்படி மாறும் என்று கூற முடியவில்லை, சில பிளவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் அது என்ன செய்யும் என்று தெரியவில்லை.

நிச்சயம் ஸ்பின்னர்களுக்கு இது பிடிக்காது, நல்ல ஸ்பின்னர்கள் விக்கெட் எடுக்க முடியும். ஒருநாள் போட்டியை வைத்துக் கூற முடியாது, டெஸ்ட் போட்டிகளின் போது இன்னும் கூடுதல் பவுன்ஸ் இருக்கும். ” என்றார்.

மைக்கேல் கிளார்க் இந்திய அணிக்கு வழங்கப்பட்ட ஷெட்யூல் இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது. முதலில் எப்போதும் பிரிஸ்பன், பிறகுதான் அடிலெய்ட் வரும், ஆனால் அடிலெய்ட் 2 முறையாக முதலில் இடம்பெறுவது இந்திய அணிக்காக ஏற்படுத்தப்பட்ட ஷெட்யூல் என்று முதல் டி20 போட்டியின் போது வர்ணனையில் தெரிவித்தார். இம்முறை பிரிஸ்பன் இல்லை, அடிலெய்ட், பெர்த், மெல்போர்ன், சிட்னியில் நடக்கிறது, பிரிஸ்பன் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய அனுகூலம் என்றார் மைக்கேல் கிளார்க். பெர்த்... டிசம்பர் 14... ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியப் பந்து வீச்சிலும் வேகம் உள்ளது, ஆனால் சரியான லெந்த்தைக் கண்டுபிடித்துக் கொள்ளவில்லையெனில், பிட்சைப்பார்த்து பூரிப்பு அடைந்து ஷார்ட் பிட்ச் உத்திக்குப் போனால் ஆஸி. பொறியில் சிக்கிய கதைதான் ஆகும். ஏனெனில் ஷார்ட் பிட்ச் பந்துகளை ஆஸ்திரேலியர்கள் தூக்கத்தில் கூட எழுந்து அடிப்பார்கள் என்று ஒரு முறை கபில்தேவ் சொன்னது நினைவில் வைக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x