Published : 06 Aug 2014 04:03 PM
Last Updated : 06 Aug 2014 04:03 PM

அஸ்வின், கம்பீர் உள்ளே; ஷிகர் தவன், ரோகித் சர்மா வெளியே?

ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் நாளை தொடங்கவிருக்கும் 4வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மற்றும் கம்பீர் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபார்மில் இல்லாத ஷிகர் தவன் மற்றும் மோசமான ஷாட் தேர்வில் அவுட் ஆன ரோகித் சர்மா அணியில் இடம்பெற மாட்டார்கள் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஏஜென்சி செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரத்தில் ஆண்டர்சன் உண்மையை ஒப்புக் கொண்டும் அவர் மன்னிக்கப்பட்டது இந்திய அணியிடத்தில் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேப்டன் தோனி சம்பவத்தை நேரில் பார்த்த முறையில் சாட்சியம் அளித்தும் ஆண்டர்சனின் அராஜக நடத்தைத் தண்டிக்கப்படாமல் விடப்பட்டது இந்திய அணி வீரர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே இந்திய அணி வீரர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வெற்றி பெற்று ஆண்டர்சனின் சொந்த மைதானத்தில் அவருக்கு ஒரு விக்கெட்டைக் கூட கொடுக்காமல் ஆடுவதே அவருக்குக் கற்பிக்கப்படும் ஒரே பாடம்.

இதற்கு முன்னுதாரணங்கள் நிறைய இருந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு அனில் கும்ளே தலைமையில் சென்ற போது நடந்த விஷயங்கள் சிறந்த உதாரணமாக உள்ளது.

ஹர்பஜன் சிங்-ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விவகாரமும் இப்படியாக ஊதிப்பெருக்கப்பட்டு இந்திய வீரர்கள் மீது கடும் கண்டனங்கள் குவிந்தன. மேலும் அந்த சர்ச்சைக்குரிய சிட்னி டெஸ்ட் போட்டியில் நடுவரின் மோசடிகளால் இந்தியா வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டி தோல்வியில் முடிந்தது.

அடுத்த டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றபோது, ஹர்பஜன் விவகாரத்தை மனதில் கொண்டும் சிட்னி மோசடிகளைக் கருத்தில் கொண்டும் ஆடிய இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்து பழி தீர்த்தது. பெர்த்தில் துணைக் கண்ட அணியிடத்தில் முதன் முதலாக ஆஸ்திரேலியா தோல்வி அடைந்து அவமானங்களைச் சந்தித்தது.

மற்றொரு உதாரணம், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டெனிஸ் லில்லிக்கும், பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியாண்டடிற்கும் இடையே நடந்தது. மியாண்டட் மட்டையை உயர்த்தி லில்லியை அடிக்கவே சென்றார்.

ஆனால் அடுத்த போட்டியில் லில்லிக்கு ஒரு விக்கெட்டைக் கூட கொடுக்காமல் ஆடியது பாகிஸ்தான். இப்படியாக கிரிக்கெட் ஆட்டத்தில் நடக்கும் தனிநபர் மோதல்களுக்கு கிரிக்கெட் ஆட்டத்தில் பதிலடி கொடுத்த சம்பவங்கள் ஏராளம் உண்டு.

இந்திய அணியும் அத்தகைய நிலைமையில் இப்போது உள்ளது. தோனி, உண்மையில் இந்த விஷயத்தில் கோபமும் வெறுப்பும் அடைந்தவர் என்றால் இங்கிலாந்தை வீழ்த்த கடுமையாக விளையாட வேண்டியது அவசியம். வருண் ஆரோன் போன்ற சற்றே வேகம் கூடுதலாக வீசும் பவுலரை களமிறக்கி இங்கிலாந்து வீரர்களைப் பதம் பார்க்க அறிவுறுத்தப்பட வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அவரது சொந்த மண்ணில் ஒரு விக்கெட்டைக் கூட கொடுக்காமல் வெறுப்பேற்றி இந்திய அணி வெல்வதே அவருக்கும் தொடர்ந்து எதிரணியினரை வசை பாடுவதையே ஒரு பண்பாடாகவைத்திருக்கும் இங்கிலாந்து அணிக்கும் அளிக்கும் தக்க பாடமாக அமையும்.

எனவே தோனிக்கு இந்த டெஸ்ட் தொடர் இனிமேல்தான் சிறந்த சவால். சவால்களை அவர் எப்படிச் சந்திக்கிறார் என்பது பொறுத்தே டெஸ்ட் போட்டிகளில் அவர் கேப்டன் பொறுப்பு நீட்டிக்கப்பட வேண்டுமா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x