Published : 25 Aug 2014 09:11 AM
Last Updated : 25 Aug 2014 09:11 AM

முதல் ஒருநாள் போட்டி இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

இந்திய-இங்கிலாந்து அணி களுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பிரிஸ்டோலில் இன்று நடைபெறுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி கண்ட இந்திய அணி, ஒருநாள் தொடரை வெற்றியோடு தொடங்கும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் டெஸ்ட் தொடரில் கண்ட வெற்றியால் உத்வேகம் பெற்றுள்ள இங்கிலாந்து, ஒருநாள் தொடரிலும் வெற்றியைத் தொடர முயற்சிக்கும்.

உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் இரு அணிகளுக்குமே இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலகக் கோப்பை போட்டிக்கான அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன.

உலகக் கோப்பை போட்டிக்காக சரியான வீரர்களைக் கண்டறியும் வகையிலேயே இங்கிலாந்துக்கு எதிராக 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று விக்கெட் கீப்பராக சஞ்ஜூ சாம்சனும், 3-வது சுழற்பந்து வீச்சாளராக கரண் சர்மாவும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், சுழற்பந்து வீச்சாளர் இடத்துக்கு போதுமான வீரர்கள் இருப்பதால் சாம்சன், சர்மாவுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே.

7 பேட்ஸ்மேன்கள்

இந்திய அணி ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி, அம்பட்டி ராயுடு, ரஹானே, ரெய்னா, தோனி என 7 பேட்ஸ் மேன்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மாவும், ஷிகர் தவனும் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தால் மட்டுமே இந்தியா வின் ரன் குவிப்பு சிறப்பாக அமையும்.

தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவாக வெளியேறும் பட்சத்தில் அது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக் கடியாக அமையும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து தொடர்களில் 6 போட்டிகளில் ரோஹித்-தவன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு முறையே 14, 10, 15, 22, 64, 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து சொதப்பிய ரோஹித்-தவன் ஜோடி பார்முக்கு திரும்புமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டெஸ்ட் தொடரில் சொதப்பிய கோலி, மிடில்செக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடியது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

அஸ்வினா, ஜடேஜாவா?

ஆல்ரவுண்டர் இடத்தில் அஸ்வின் அல்லது ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. இரு ஆல்ரவுண்டர்களுடன் களமிறங்குவது என முடிவெடுத்தால் ரஹானேவுக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னி இடம்பெறலாம். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார், முகமது சமி, உமேஷ் யாதவ் அல்லது மோஹித் சர்மா இடம்பெற வாய்ப்புள்ளது.

உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் விளையாடவுள்ள கடைசி தொடர் இதுதான். உலகக் கோப்பையை மனதில் வைத்தே இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அவர், அலாஸ்டர் குக்குடன் இணைந்து இங்கிலாந்தின் இன்னிங்ஸை தொடங்கவுள்ளார்.

மிடில் ஆர்டரில் இயான் பெல், கேரி பேலன்ஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், இயோன் மோர்கன் ஆகியோரும், வேகப்பந்து வீச்சாளர்களாக ஜேம்ஸ் ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் டிரெட்வெல் ஆகியோரும், சுழற்பந்து வீச்சாளராக மொயீன் அலியும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே வலுவாக உள்ளது.

மழை வாய்ப்பு

பிரிஸ்டோலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனால் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்தியா:

எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, சஞ்ஜு சாம்சன், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, கரண் சர்மா, மோஹித் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சமி, தவல் குல்கர்னி, புவனேஸ்வர் குமார்.

இங்கிலாந்து:

அலாஸ்டர் குக் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், கேரி பேலன்ஸ், இயான் பெல், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஃபின், ஹரி கர்னே, அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், இயோன் மோர்கன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் டிரெட்வெல், கிறிஸ் வோக்ஸ்.

போட்டி நேரம்: பிற்பகல் 3

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்ஷன்

இதுவரை...

இந்தியாவும் இங்கிலாந்தும் இதுவரை 87 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 47 முறையும், இங்கிலாந்து 35 முறையும் வெற்றி கண்டுள்ளன. 2 போட்டிகள் டையில் முடிந்துள்ளன. 3 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.

பிரிஸ்டோல் மைதானத்தில் இந்தியா இதுவரை 3 போட்டிகளில் விளையாடி முறையே கென்யா, இலங்கை (இரண்டும் உலகக் கோப்பை போட்டி), இங்கிலாந்து அணிகளைத் தோற்கடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x