Published : 05 Nov 2018 04:33 PM
Last Updated : 05 Nov 2018 04:33 PM

ஆத்திரமும் அழுகையுமாக வந்தது... விராட் கோலி மட்டும் இல்லையென்றால்... - மனம் திறக்கும் ஷர்துல் தாக்கூர்

ஹைதராபாத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் 294வது டெஸ்ட் கிரிக்கெட் வீரராக தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் தொப்பியை வாங்கி களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூரின் கனவு 1.4 ஓவர்களில் முறிந்தது.

ஷர்துல் தாக்கூர் காயமடைந்து வெளியேற அனைவருக்கும் கசப்பான ஓர் தருணமாக அமைய, இந்திய அணித்தேர்வு, உடற்தகுதித் தேர்வு அனைத்தும் கேள்விக்குள்ளாகின. தவறான காரணங்களினால் தலைப்புச் செய்தியானார் ஷர்துல் தாக்கூர்.

விராட் கோலி மட்டும் அப்போது இல்லையென்றால் தனக்கு இன்னும் துயரமாகியிருக்கும் என்று கூறுகிறார் ஷர்துல் தாக்கூர்.

காயத்தில் வெளியேறிய ஷர்துல் தாக்கூர் அந்தத்தருணத்தைத் தற்போது ஆங்கில ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்ட போது, “கடும் ஆத்திரமும் அழுகையும் வந்தது. இப்படி முதல் டெஸ்ட் போட்டியை இழக்க யார்தான் விரும்புவார்கள்? ஒருவரும் விரும்ப மாட்டார்கள். உண்மையில் இது பயங்கரமானது, நம்புங்கள்.

என்ன நடந்ததோ அதனை ஏற்றுக் கொள்வதே நல்லது, புகார் தெரிவிக்கத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். இனி என்ன கிரிக்கெட்டுக்கு விரைவில் திரும்ப வேண்டும் அவ்வளவே.

எனக்கு வலி வேதனை ஏற்பட்ட போது விராட் கோலி என்னிடம் வந்து ஏன்? என்னாயிற்று? என்றார். நான் என்னால் தொடர முடியவில்லை என்றேன். அவர் என் நிலைமையைப் பார்த்தார், நான் அழுதுவிடுவேன் போல் இருந்தேன். அப்போது விராட் கோலியின் வார்த்தைகள் எனக்கு பெரிதும் ஆறுதலாக இருந்தன. இந்திய அணியின் உடற்கோப்புப் பயிற்சியாளர் பேட்ரிக் பர்ஹாட்டிடம் பேசினார், பிறகு என்னைத் தேற்றி ரிலாக்ஸாக இருக்குமாறு தெரிவித்தார்.

அவர் எனக்கு நம்பிக்கை அளித்ததோடு, அன்றைய தினம் ஆட்டம் முடிந்தவுடன் என்னுடன் பேசுகிறேன் என்றார் விராட் கோலி. தினம் முடிந்த பிறகு என்னை சந்தித்து ஆறுதல் கூறினார், விளையாட்டு வீரர் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்றா, இப்போது கூட என்னிடம் பேசுவார், மேலும் விரைவில் காயத்திலிருந்து வெளியே வர டிப்ஸ்களும், ஆலோசனைகளையும் வழங்கினார் விராட்.

இவ்வாறு கூறினார் ஷர்துல் தாக்கூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x