Last Updated : 30 Nov, 2018 09:07 AM

 

Published : 30 Nov 2018 09:07 AM
Last Updated : 30 Nov 2018 09:07 AM

‘கவாஜா முன் கோலி சும்மா’; டெஸ்ட் தொடரை ஆஸி. வெல்லும்: சீண்டுகிறார் பாண்டிங்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாதான் வெல்லும், அதேபோல டெஸ்ட் தொடரில் அதிகமான ரன் குவிப்பவர்களில் கோலியைக் காட்டிலும் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாதான் முதலிடம் வகிப்பார், தொடர்நாயகன் விருதையும் பெறப்போகிறார் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்பே கொம்பு சீவிவிடுகிறார்.

ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான தீவிரப் பயிற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.

2018-ம் ஆண்டைப் பொறுத்தவரை இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு அணி வீரர்கள் ஆதரவு கொடுக்காவிட்டாலும் அவரின் பேட்டிங் மிக அற்புதமாக இருந்து வருகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் அடித்த கோலி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 539 ரன்கள் குவித்தார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2018-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை கோலி படைத்தார். இந்த ஆண்டில் விராட் கோலியின் டெஸ்ட் சராசரி 18 இன்னிங்ஸில் 59.05 சராசரியாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு இந்திய அணி பயணம் ேமற்கொண்டபோது, விராட் கோலி 4 சதங்கள் உள்ளிட்ட 692 ரன்கள் சேர்த்து 86.50 சராசரி வைத்திருந்தார். ஆதலால், இந்த முறை விராட் கோலியின் பேட்டிங் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்படுகிறது.

ஆனால், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், கோலியைக் காட்டிலும் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா டெஸ்ட் தொடரில் அதிகமான ரன்களைக் குவிப்பார் எனத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள இணையதளம் ஒன்றுக்கு ரிக்கி பாண்டிங் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

கோலி நன்றாக விளையாடக்கூடியவர் மறுப்பதில்லை. ஆனால், உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலியாவில் சிறப்பாக பேட் செய்து பல சாதனைகளை செய்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று நினைக்கவில்லை.

எப்படி இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் உள்ள சூழலுக்கு ஏற்றார்போல் நன்றாக விளையாடக்கூடியவர் கவாஜா. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிகமான ரன்களைக் குவித்து, தொடர்நாயகன் வாங்கும் வீரராக கவாஜா இருப்பார். கோலி அதிகமான ரன்கள் குவிப்பார் என்று நினைக்கவில்லை.

கவாஜாவின் மீது நம்பிக்கை வைத்துத்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்துக்குத் தேர்வாளர்கள் தேர்வு செய்தனர். அங்கு கவாஜா சிறப்பாகச் செயல்பட்டார். அதே நம்பிக்கை இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் கவாஜா மீது வைத்துள்ளார்கள், அவர் சிறப்பாகச் செயல்படுவார். நிச்சயம் டெஸ்ட் தொடரில் விராட் கோலியை தோற்கடிப்பார் கவாஜா.

கோலியும் சிறப்பாக விளையாடுவார், நம்பிக்கை இருக்கிறது. இந்திய அணி பயணம் செல்லும் நாடுகளில் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த ஆஸ்திரேலியப் பயணத்திலும் கோலி சிறப்பாக பேட் செய்தார்.

ஆனால்,மெல்பர்ன், சிட்னி மைதானம் போன்று அடிலெய்டும், பெர்த் மைதானமும் இருக்காது என்பதைக் கோலி உணர வேண்டும். இந்த ஆடுகளில் புற்கள் அதிகம் இருப்பதால், வீரர்கள் எளிதாக பேட் செய்ய முடியாது. கடந்த பயணத்தில் இங்கு இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். அதேபோல இந்த முறையும் பெர்த், அடிலெய்ட் ஆடுகளத்தைத் தயாரிக்க வேண்டும்.

ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இல்லாத காரணத்தால், இந்திய அணி டெஸ்ட் தொடரை இந்த முறை வெல்லும் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால், இதுவரை 44 போட்டிகளில் 5 ஆட்டங்களில் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. நாங்கள் 40 ஆண்டுகால வரலாற்றைப் பேசுகிறேன். இதுவரை இந்தியா இங்கு வந்து ஒருமுறைகூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை.

அதற்குக் காரணம் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான, அதிகமாக எழும்பும் ஆடுகளம்தான் காரணம். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். அதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். என்னைப் பொருத்தவரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும்

இவ்வாறு பாண்டிங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x