Published : 21 Nov 2018 06:39 PM
Last Updated : 21 Nov 2018 06:39 PM

ஷிகர் தவண் அதிரடி வீண்: 11 ரன்கள் கூடுதலாக எடுத்த இந்திய அணி டக்வொர்த் முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யிடம் தோல்வி

பிரிஸ்பன் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் மழைக் குறுக்கிட்டதால் 17 ஒவர்களாகக் குறைக்கப்பட்ட போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஒரிஜினல் ஸ்கோரான 158 ரன்களைக் காட்டிலும் கூடுதலாக ரன்கள் எடுத்த இந்திய அணி டக்வொர்த் முறை இலக்குப் படி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 158/4 என்று முடித்தது, இந்திய அணிக்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் இலக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்டது,  ஆனால் ஷிகர் தவண் (76) அதிரடிக்கு மற்ற வீரர்கள் உறுதுணையாக ஆடவில்லை. ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி ஆகியோர் சேர்ந்து 28 பந்துகளில் 24 ரன்களையே எடுத்தது பெரும் பின்னடைவானது.

இந்தியப் பந்து வீச்சு ஆரம்பத்தில் நன்றாக அமைந்தது, பும்ரா, புவனேஷ்வர் சிறப்பாக வீசினர் கலீல் அகமெட் ஒரு விக்கெட்டை வீழ்த்திய பிறகு பெரிய மட்டை கிறிஸ் லின்னிடம் சிக்கிச் சின்னாபின்னமானார், குருனால் பாண்டியா இந்த மட்டத்துக்கு தகுதியான பவுலரா என்ற கேள்வி எழுமாறு வீசினார். குல்தீப் யாதவ்வை ஆஸி.யினரால் ஆட முடியவில்லை என்பதுதான் இன்று இந்தியாவுக்கு ஆறுதல் 20 பந்துகளில் லின் 37 ரன்கள் எடுக்க, கிளென் மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் இணைந்து 6 ஓவர்களில் 78 ரன்கள் விளாசி ஸ்கோரை 150 கடந்து கொண்டு வந்த போது 16.1 ஓவர் முடிவில் மழை குறுக்கிட்டது, இதனையடுத்து ஆட்டம் 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. 158/4 என்ற ஆஸி. இலக்கு இந்தியாவுக்கு இதே 17 ஓவர்களில் 174 ஆக மாறியது.

விராட் கோலிக்கு கேப்டன்சி தவறுகள், பீல்டிங், கேட்ச் விட்டது, ரன் எடுக்காதது என்று மறக்கப்பட வேண்டிய ஒரு போட்டியாக இது அமைந்தது. ஆமாம்! ஆக்ரோஷத்துக்குப் புது விளக்கமெல்லாம் கொடுத்து விட்டு கேட்சை விடுவது, மிஸ்பீல்ட் செய்வது, பேட்டிங்கில் ஒரு உறுதியில்லாமல் ஆடியது என்று இருந்தால் எப்படி?

13 வது ஓவர் முடிவில் இந்தியா 114/4 என்று பின் தங்கியிருந்த போது 24 பந்துகளில் 60 ரன்கள் தேவை என்ற சாத்தியமாகா நிலையே இருந்தது.

திருப்பு முனை ஏற்படுத்திய ஓவர்:

அப்போது 14வது ஓவரை ஆண்ட்ரூ டை வீச ரிஷப் பந்த் மிகப் பிரமாதமாக முதல் பந்தை பைன்லெக் திசையில் சிக்ஸருக்குத் தூக்கினார். அடுத்த பந்து லாங் ஆனுக்கும் மிட்விக்கெட்டுக்கும் இடையே பந்து பவுண்டரிக்குப் பறந்தது. பிறகு ஒரு வைடு, ஒரு சிங்கிள் வந்தது. தினேஷ் கார்த்திக் எட்ஜில் ஒரு பவுண்டரியையும் பிறகு புல்டாஸை கார்த்திக் மிட்விக்கெட்டில் தூக்கி சிக்சருக்கும் அடிக்க கிளென் மேக்ஸ்வெலின் தீவிர முயற்சியையும் கடந்தது பந்து, அந்த ஓவரில் 25 ரன்கள் வந்தது.

இதனையடுத்து 3 ஒவர்கள் 35 ரன்கள் என்று எட்டக்கூடிய நிலை ஏற்பட்டது.  ஸ்டாய்னிஸ் வீச வந்தார், ஆஃப் கட்டர்களை வேகம் குறைத்து வீசினார், இதனை சரியாக எதிர்கொள்ளத் தவறினர் இந்திய பேட்ஸ்மென்கள்.  இந்த ஓவரில் பந்த் 2, 1 என்று அடித்து கார்த்திக்கிடம் ஸ்ட்ரைக் கொடுக்க மோசமான பந்தை கார்த்திக் ஆன் திசையில் பவுண்டரிக்கு அனுப்பினார்.  இந்த ஓவரில் 11 ரன்கள் வர, 2 ஒவர்கள் 24 என்பதும் எட்டக்கூடியதாகத்தான் தெரிந்தது.

ஆண்ட்ரூ டை வீசிய 16வது ஓவரின் முதல் பந்தை கார்த்திக் மிகப்பிரமாதமாக பிளேஸ் செய்து லாங் ஆஃப்பில் வைடாக பவுண்டரிக்கு விரட்டினார். ரிஷப் பந்த் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டிய நேரத்தில் இதே ஓவரில் ரிவர்ஸ் ஸ்கூப் முயற்சியில் பாயிண்ட்டில் கேட்ச் ஆகி 20 ரன்களில் வெளியேறினார். குருணால் பாண்டியா இறங்கியவுடன் ஹெல்மெட்டைத் தாக்கும் பவுன்சர் மூலம் வரவேற்கப்பட்டார், ஆனால் சிங்கிள் வந்தது, தினேஷ் கார்த்திக் அடுத்ததாக ஷார்ட், வைடு பந்தை விளாசத் தவறினார். அடுத்த பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து சென்று லாங் ஆனில் பவுண்டரி விளாசினார். 11 ரன்கள் வந்தது, கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில்  ஸ்டாய்னிஸ் கடைசி ஒவரை வீச முதல் பந்தை குருணால் 2 ரன்களுக்கு அடித்தார்.

அடுத்த பந்தில் ரன் இல்லை, அதற்கு அடுத்த பந்து மெதுவான பந்து வெளியே செல்லும் பந்து, ஸ்லாக் செய்ய முயன்றார் குருணால் பந்து எழும்பியது, அங்கு ஆளில்லை ஆனால் கிளென் மேக்ஸ்வெல் மிக அற்புதமாக திகைப்பூட்டும் கேட்ச் ஒன்றை பிடிக்க குருணால் மறக்க வேண்டிய போட்டியானது இது. அடுத்த பந்தே தினேஷ் கார்த்திக் ஸ்டாய்னிசின் இன்னொரு வேகம் குறைக்கப்பட்ட பிரமாதமான பந்துக்கு இறங்கி வந்தார். அடித்தார், பந்தில் வேகம் இல்லாததால் லாங் ஆஃபில் கேட்ச் ஆகி 13 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 30 ரன்கள் ஒரு அபாரமான இன்னிங்சை ஆடி பினிஷ் செய்ய முடியாமல் வெளியேறினார். ஆனால் ரிஷப் பந்த், கார்த்திக்தான் ஏற்கெனவே இந்தியாவுக்குச் செத்துப் போன ஆட்டத்தை உயிர்கொடுத்து மீட்டனர், 23 பந்துகளில் 51 ரன்கள் கலக்கல் கூட்டணி அமைத்தனர். ஆனால் வெற்றிக் கோட்டைக் கடக்க முடியவில்லை, குல்தீப் யாதவ் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினாலும் 4 ரன்களில் இந்தியா தோல்வி தழுவியது.

நகைமுரண் என்னவெனில் ஸ்கோரைப் பார்த்தால் ஆஸ்திரேலியா 158/4, இந்தியா 169/7. என்று இருக்கும் 11 ரன்கள் கூடுதலாகப் பெற்ற இந்திய அணி 4 ரன்களில் தோல்வி காரணம் மழை, அதனால் விளைந்த டக்வொர்த் கணக்கீட்டிலான புதிய இலக்கு.  முன்னதாக லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா மிகச்சிறப்பாக வீசி ராகுல், கோலியைக் காலி செய்து 4 ஓவர்களில் 22/2 என்று அபாரமாக வீசினார், இதனால் இவர் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

ஷிகர் தவண் அதிரடி, ராகுல், ரோஹித், கோலி சொதப்பல்:

இலக்கு 17 ஓவர்களில் 174 என்பது பெரிய இலக்கு, இதில் ஷிகர் தவண் பேட்டிங்கில் அவசரம் தெரிந்தது, ஆனால் ரோஹித் சர்மா மெதுவாக ஆடினார். முதல் ஒவரில் பவுண்டரியுடன் தொடங்கினாலும் ஒரு பிரெஞ்ச் கட் அதிர்ஷ்ட பவுண்டரி, இரண்டு பீட்டன் என்று தவண் தடுமாற்றத்துடன் தொடங்கினார். தவணுக்கு 2 கேட்ச்கள் விடப்பட்டன, கிரேட் இன்னிங்ஸ் என்று கூற முடியாது, ஆனால் தைரியமாக சுழற்றினார், புல்ஷாட்களை திறம்பட பயன்படுத்தினார். 65-ல் ஸாம்பா கேட்சை விட்டார், பிறகு 76-ல் கூல்ட்டர் நைல் ஹூக் ஷாட்டை கேட்ச் ஆக்கத் தவறினார்.

ஆனால் அரைசதத்திலேயே 8 பவுண்டரி 1 சிக்சர் அடித்து 28 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தார், பிறகு 42 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 76 ரன்களில் முக்கியக் கட்டத்தில் பவுன்சரை தேர்ட்மேனில் கேட்ச் கொடுத்து ஸ்டான்லேக்கிடம் வீழ்ந்தார். இவர் ஆட்டமிழக்கும் போது இந்திய அணிக்கு 5.2 ஒவர்களில் 69 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற சாத்தியமில்லா நிலையே இருந்தது, அதன் பிறகுதான் கார்த்திக், பந்த் 23 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தனர், ஆனால் வெற்றி சாத்தியமாகவில்லை, ஸ்டாய்னிஸ் கடைசியில் தன் வேலையைக் காட்டினார்.

ரோஹித் சர்மா 7 ரன்களில் இருந்த போது மேலேறி வந்து தூக்கி அடிக்க முயன்றார், முன் விளிம்பில் பட்டு பவுலர் தலைக்குப் பின்னால் செல்ல பிஞ்ச் கேட்ச் எடுத்தார். கே.எல்.ராகுல் சரளமாக ஆடவில்லை. 13 ரன்களில் ஸாம்ப்பாவிடம் ஏமாந்து ஸ்டம்பிங் ஆனார். கோலி பலத்த கரகோஷத்துடன் இறங்கி ஸாம்பாவினால் கட்டுப்படுத்தப்பட்டார் 8 பந்துகளில் 4 ரன்கள்தான் கடைசியில் கோலியின் டாப் எட்ஜை பிடித்தார் ஸாம்ப்பா, தேர்ட் மேனில் கேட்ச் ஆகி மறக்க வேண்டிய ஒரு போட்டியில் வெளியேறினார் விராட் கோலி. இவருக்குப் பிறகு தவணும் ஆட்டமிழக்க இந்திய வெற்றி துர்லபமானது. ஒரு ஓவரில் 25 ரன்களை கார்த்திக்கும், பந்த்தும் அடித்து ஆட்டத்தை இந்தியா பக்கம் கொண்டு வந்தனர், ஆனால் ஸ்டாய்னிஸ் வெற்றி பெறச் செய்தார்.

இந்தியா தொடரில் 0-1 என்று பின்னடைவு கண்டுள்ளது. ஆட்ட நாயகன் ஸாம்ப்பா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x