Published : 06 Nov 2018 04:00 PM
Last Updated : 06 Nov 2018 04:00 PM

வங்கதேசம் அதிர்ச்சித் தோல்வி: 17 ஆண்டுகளுக்குப் பிறகு அயல்நாட்டில் டெஸ்ட் வெற்றி பெற்று ஜிம்பாப்வே எழுச்சி

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அனைவரின் எதிர்பார்ப்பையும் முறியடிக்கும் விதமாக 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அயல்மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

ஜிம்பாப்வே அணி தன் 2 இன்னிங்ஸ்களில் முறையே 282 மற்றும் 181 ரன்களை எடுக்க வங்கதேச அணி 143 மற்றும் 169 ரன்களுக்கு சுருண்டு 151 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது, வங்கதேச பவுலர் தைஜுல் இஸ்லாம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் வங்கதேசம் 321 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்சில் களமிறங்கியது, ஆனால் சிகந்தர் ரஸா 2 விக்கெட்டுகளையும் மவுதா 4 விக்கெட்டுகளையும் மசகாட்ஸா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற இன்று 169 ரன்களுக்குச் சுருண்டு 151 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

மேலும் 5 ஆண்டுகளில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் வெற்றி என்பதுடன், ஜிம்பாப்வே மொத்தத்தில் தன் 3வது அயல்மண் வெற்றியைப் பெற்றது. 17 ஆண்டுகளுக்கு முன்பாக 2001-ல் பெற்ற வெற்றியும் வங்கதேசத்துக்கு எதிராகத்தான்.

 

கைல் ஜார்விஸ், பிரெண்டன் மவுதா ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்ற, சிகந்தர் ரஸா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வங்கதேசம் உணவு இடைவேளையின் போது 111/5 என்று ஆனது, லிட்டன் தாஸ் (23), இம்ருல் கயேஸ் (43), மஹ்முதுல்லா (16) ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சாதனை 321 ரன்களை வெற்றிக்காக விரட்டிய வங்கதேசம் 26/0 என்று 4ம் நாளான இன்று தொடங்கியது. ஆட்டம் 30 நிமிடங்கள் முன்னதாக தொடங்கியது

2009-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக 217 ரன்களை விரட்டி ஜெயித்ததே வங்கதேசத்தின் சிறந்த விரட்டல் எனும்போது 321 என்பது அதிகம்தான். ஆனால் சிகந்தர் ரசா தொடக்க வீரர் லிட்டன் தாஸுக்கு எதிரகா ரிவியூவில் எல்.பி.யை வென்றார்.

அடுத்ததாக மோமினுல் ஹக், ஜார்விஸ் பந்து ஒன்றை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார், இம்ருல் கயேஸை ரஸா பவுல்டு செய்ய 83/3 என்று ஆனது வங்கதேசம்.

கேப்டன் மஹ்முதுல்லா தன்னை முன்னதாக இறக்கிக் கொண்டு 4ம் நிலையில் வந்தார், ஆனால் அவரும் 16 ரன்களில் ரஸா பந்தில் ஷார்ட் லெக்கில் கிரெய்க் எர்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன் பிறகு ரஸா உணவு இடைவேளை தருனத்தில் கவரில் ஒரு அபாரமான கேட்சைப் பிடிக்க அறிமுக பவுலர் மவுதா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு முஷ்பிகுர் ரஹிம் 13 ரன்களில் மவுத்தா பந்தை ஸ்வீப் செய்து டாப் எட்ஜ் ஆனார். மசகாட்சா டைவ் அடித்து டீப் ஸ்கொயர்லெக் அருகே கேட்ச் எடுத்தார். மெஹதி ஹசன் மிராஸ் 7 ரன்களில் மவுதாவிடம் வீழ்ந்தார். தைஜுல் இஸ்லாம், நஜ்முல் இஸ்லாம் இருவரும் முறையே மஸகாட்ஸா, மவுதா ஆகியோரிடம் டக் அவுட் ஆகி வெளியேற ஆரிபுல் ஹக் ஒரு முனையில் ஆக்ரோஷமாக ஆடி 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 37 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டுக்காக சகாப்வா கேட்ச் எடுக்க மசகாட்ஸா விக்கெட் எடுத்தார். 64வது ஒவரில் வங்கதேசம் சப்ஜாடாக முடிந்து போனது. மவுதா 10 ஓவர்களில் 21 ரன்களுக்கு 4 விக்கெட் என்பது அறிமுக ஜிம்பாப்வே வீரருக்குச் சாதனையாகும்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு அயல்மண்ணில் தன் முதல் வெற்றியை பெற்று வங்கதேச அணிக்கு அந்நாட்டு வெறி பிடித்த ரசிகர்கள் முன்னிலையில் அதிர்ச்சி உதை கொடுத்தது. ஆட்ட நாயகனாக முதல் இன்னிங்ஸில் 88 ரன்கள் என்ற முக்கியப் பங்களிப்புச் செய்ட சான் வில்லியம்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

2 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே 1-0 என்று முன்னிலை பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x