Published : 27 Aug 2014 10:00 AM
Last Updated : 27 Aug 2014 10:00 AM

அமெரிக்க ஓபன்: விடாப்பிடியாக போராடி வென்றார் முர்ரே

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டபோதும் விடாப்பிடியாக போராடி நெதர்லாந்தின் ராபின் ஹேஸியை தோற்கடித்தார் பிரிட்டனின் ஆன்டி முர்ரே.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஆன்டி முர்ரே 6-3, 7-6 (6), 1-6, 7-5 என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 70-வது இடத்தில் இருக்கும் ராபின் ஹேஸியை வீழ்த்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றிய முர்ரே, டைபிரேக்கர் வரை சென்ற 2-வது செட்டை கடும் போராட்டத்துக்குப் பிறகு 7-6 (6) என்ற கணக்கில் வென்றார். போட்டி 3-வது செட்டோடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட முர்ரே, அந்த செட்டை 1-6 என்ற கணக்கில் ஹேஸியிடம் இழந்தார்.

4-வது செட்டில் அவ்வப்போது சிகிச்சை பெற்றுக்கொண்டே விளையாடிய முர்ரே தடுமாறினார். அப்போது முர்ரேவின் இரு சர்வீஸ்களை முறியடித்த ராபின் ஹேஸி 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதனால் போட்டி அடுத்த செட்டுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சரிவிலிருந்து மீண்ட முர்ரே, 11-வது கேமில் ஹேஸியின் சர்வீஸை முறியடித்து திருப்புமுனையை ஏற்படுத்தினார். அடுத்த கேமில் தனது சர்வீஸை தக்கவைத்ததன் மூலம் அந்த செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.

வெற்றி குறித்துப் பேசிய முர்ரே, “மிக எளிதாக ஹேஸியிடம் தோல்வியடைந்திருப்பேன். போட்டி 5-வது செட்டுக்கு சென்றால் மிகவும் சிக்கலாகிவிடும் என நினைத்தேன். தோல்வியின் விளிம்புக்கே சென்றேன்” என்றார்.

ஜோகோவிச் வெற்றி

மற்றொரு ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் சர்வதேச தரவரிசையில் 79-வது இடத்தில் உள்ள அர்ஜென்டீனாவின் டீகோவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 6-2, 7-6 (6), 7-6 (3) என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் ஜிரி வெஸ்லேவையும், கனடாவின் மிலோஸ் ரயோனிச் 6-3, 6-2, 7-6 (1) என்ற நேர் செட்களில் ஜப்பானின் டோரோ டேனியலையும் தோற்கடித்தனர்.

ஷரபோவா வெற்றி

மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா 6-4, 6-0 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான மரியா கிரிலென்கோவை தோற்கடித்தார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் 2-4 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த ஷரபோவா, அடுத்த 10 கேம்களையும் தொடர்ச்சியாக கைப்பற்றி போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.

மற்ற ஆட்டங்களில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 2-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கிமிகோ டேட் கிரம்மையும், போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-7 (2), 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வைல்ட்கார்ட் வீராங்கனை டேனிலே காலின்ஸையும் தோற்கடித்தனர். போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் கனடாவின் ஷரோன் ஃபிச்மானை தோற்கடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x