Published : 13 Nov 2018 04:57 PM
Last Updated : 13 Nov 2018 04:57 PM
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று பணமழை டி20 கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்த 360 டிகிரி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் உலகின் பல்வேறு டி20 லீகுகளுக்காக கால அட்டவணை தயாரித்தவர்களை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
கிரிக் இன்போ இணையதளத்தில் ஐபிஎல் போட்டிகளை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் கூறும் டிவில்லியர்ஸ் இது குறித்து மேலும் எழுதியிருப்பதாவது:
அனைத்து டி20 லீகுகளையும் விட ஐபிஎல் உலகில் மிகப்பெரிய டி20 லீக். விராட் கோலி மற்றும் என் அணியான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருவின் சக வீரர்களுடன் மீண்டும் இணைய என்னால் நீண்ட நாள் காத்திருக்க முடியாது, விரைவில் இணைய ஆவலாக இருக்கிறேன். இம்முறை 2018 தொடரின் ஏமாற்றங்களையெல்லாம் நாங்கள் அணியாகத் திரண்டு துடைத்தெறிவோம்.
ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரை வெல்லக் கூடிய ஆற்றல் உள்ளதுதான், ஆனால் இதுவரை ஏன் வெல்ல முடியவில்லை என்பது ஒருவருக்கும் தெரியாத புதிராக உள்ளது. இம்முறை 2019-ல் நாங்கள் ஒரு அணியாக மிகவும் சவாலாக இருப்போம்.
இந்தியாவில் தேர்தல் நேரம் என்பதால் ஐபிஎல் இந்தியாவில் நடக்குமா என்பது தெரியவில்லை. இந்தியாவில் ஐபிஎல் நடைபெறுவதுதான் சிறந்தது, காரணம் அந்த ரசிகர்கள் அபாரம், அவர்களை கேளிக்கைப்படுத்துவதுதான் முக்கியம். ஆனாலும் இதைவிடவும் முக்கிய காரணங்கள் இருந்தாலும் சரியான முடிவு எட்டப்படும் என்றே நினைக்கிறேன்.
2009-ல் தென் ஆப்பிரிக்கா ஐபிஎல் போட்டிகளை நடத்தியது, இம்முறையும் தென் ஆப்பிரிக்காவில் நடக்கலாம் என்று வதந்திகள் நிலவுகின்றன. யு.ஏ.இ.யிலும் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எங்கு நடந்தாலும் ஐபிஎல் கிரிக்கெட் 7 வாரங்களுக்கு பெரிய கேளிக்கை விருந்து படைக்கும் ஒரு தொடராகும், இது ஒரு தனித்துவமான கேளிக்கை வடிவமாகும்.
இவ்வாறு கூறியுள்ளார் டிவில்லியர்ஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT