Last Updated : 30 Aug, 2014 10:00 AM

 

Published : 30 Aug 2014 10:00 AM
Last Updated : 30 Aug 2014 10:00 AM

சென்னை கால்பந்து சங்கத்துக்கு நாளை தேர்தல்: வாக்குறுதியோடு வாக்கு சேகரிக்கும் பிரவீண் அணி

சென்னை கால்பந்து சங்கத்தின் (சிஎப்ஏ) ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை நேரு மைதானத்தில் உள்ள சென்னை கால்பந்து சங்க அலுவலகத்தில் நாளை நடைபெறுகிறது. அப்போது புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

சென்னை கால்பந்து சங்கத்தின் தற்போதைய துணைத் தலைவரான பிரவீண் தலைமையில் ஓர் அணியும், சி.எப்.ஏ. தற்காலிக கமிட்டியின் தலைவராக இருந்த குலாம் தலைமையில் ஓர் அணியும் போட்டியிடுகின்றன. பிரவீண் அணியில் இருந்து துணைத் தலைவர்கள் பதவிக்கு பி.கே.மாதவன், முன்னாள் ஃபிபா நடுவர் சுரேஷ், மலர்மாறன், பாலகிருஷ்ணன் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு ஏரோஸ்கால்பந்து கிளப்பின் செயலாளர் தியாகராஜனும், பொருளாளர் பதவிக்கு மகேந்திரன் என்ற சுப்பிரமணியும் போட்டியிடுகின்றனர்.

குலாம் அணியில் இருந்து செயலாளர் பதவிக்கு பயிற்சியாளர் சுகுமாறனும், பொருளாளர் பதவிக்கு ஜெயச்சந்திரனும் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர்கள் பதவிக்கு ஆனந்தராஜ், கண்ணையன், குமரேஷ், மதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

101 நாள் சாதனை

கடந்தமார்ச்சில் நடைபெற்ற சிஎப்ஏ தேர்தலின் மூலம் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்ற பிரவீண் அணியினர் 101 நாள்களில் சென்னை லீக் போட்டிகளை சிறப்பாக நடத்தி சாதனை படைத்தனர். அந்த அணியினர் 101 நாட்களில் செய்த சாதனைகளையும், மீண்டும் நிர்வாகியாக தேர்வு செய்யப்பட்டால் செய்யப்போகும் சாதனைகளையும் வாக்குறுதியாக அச்சிட்டுள்ளனர். அவர்கள், வாக்களிக்கத் தகுதியுள்ள 89 கால்பந்து கிளப்புகளிடமும் வாக்குறுதிச் சீட்டை கொடுத்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தியாகராஜன் கூறுகையில், “கடந்த 4 மாதங்களில் நாங்கள் செய்த பணிகளால் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வாக்கு சேகரிக்க சென்ற இடமெல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது. அதனால் வெற்றி உறுதி” என்றார்.

வாக்குறுதியில்லாத எதிரணி

ஆனால் குலாம் தலைமையிலான அணியினரோ வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக குலாமின் கருத்தை கேட்க தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. அதேநேரத்தில் அந்த அணியின் வேட்பாளர்களில் ஒருவரான வடிவேலுவிடம் கேட்டபோது, “நாங்கள் வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை. எங்களுக்கு இந்த முறை வாய்ப்பு தாருங்கள் என்று மட்டுமே கேட்கிறோம். அவ்வளவுதான்” என்றார்.

சாதனைகள் என்ன?

சென்னை லீக் சீனியர் டிவிசன் போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கான பரிசுத் தொகையை ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தியது, 2-வது இடம்பிடிக்கும் அணிக்கான பரிசுத் தொகையை ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தியது, அனைத்து டிவிசன்களிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே தலா ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கியது, அனைத்து வீரர்களுக்கும் மருத்துவ காப்பீடு என்பது உள்ளிட்ட புதிய திட்டங்களை பிரவீண் அணியினர் கொண்டு வந்தனர். இந்த திட்டங்கள் சென்னை கால்பந்து சங்க வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுவதோடு, சென்னையில் உள்ள கால்பந்து கிளப்புகளிடமும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

கால்பந்து வீரர்கள் மகிழ்ச்சி

இந்தியாவில் எங்கும் வழங்கப்படாத பரிசுத் தொகை சென்னை லீக்கில் வழங்கப்பட்டிருக்கிறது. மாநில அளவிலான கால்பந்து போட்டிகளுக்குகூட ரூ.3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுவதில்லை. ஆனால் சென்னை லீக் போட்டியில் ரூ.7.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது, சென்னை கால்பந்து வீரர்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளது.

இது தொடர்பாக சென்னை லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற ஐசிஎப் அணியின் வீரர் ஒருவர் கூறுகையில், “பரிசுத் தொகை உயர்த்தப்பட்டதால் அணியில் இடம்பெற்ற அனைவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை கிடைத்தது” என்றார் மகிழ்ச்சியோடு.

வளர்ச்சிக்காக பாடுபடக்கூடியவர்கள்

சென்னையில் உள்ள கால்பந்து கிளப்புகளின் செயலாளர்கள் சிலர் கூறுகையில், “பிரவீண் அணியில் இடம்பெற்றிருக்கும் அனைவருமே இளைஞர்கள். அவர்கள் கடந்த 4 மாதங்களில் மிகச்சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். முன்பெல்லாம் சென்னை லீக் போட்டிகள் தொடங்குவதில் தினந்தோறும் காலதாமதம் ஏற்படும். ஆனால் இந்த முறை உரிய நேரத்தில் போட்டிகள் தொடங்கப்பட்டன. பரிசுத் தொகை உயர்த்தப்பட்டது, மருத்துவ காப்பீடு போன்றவற்றால் பல வீரர்கள் பயனடைந்துள்ளனர்.

பிரவீண் இரு தேசிய அளவிலான போட்டிகளை தலா ரூ.25 லட்சம் செலவில் வெற்றிகரமாக நடத்தியவர். அந்த அணியில் இடம்பெற்றுள்ள தியாகராஜன், கால்பந்தின் வளர்ச்சிக்காக பாடுபடக்கூடியவர். தற்போது பொருளாளராக இருக்கும் சுப்பிரமணி மற்ற நிர்வாகிகளுக்கு எல்லாம் உதாரணமாகத் திகழக்கூடியவர்.

கடந்த சென்னை லீக் போட்டியில் நடுவர்கள் பிரச்சினை செய்தபோது, அந்த பிரச்சினையை தீர்த்து போட்டி தடைபடாமல் பார்த்துக்கொண்டதோடு, வீரர்களுக்கு தேவையான சிற்றுண்டிகள், தேநீர் போன்றவற்றையும் அவரே எடுத்துச் சென்றார். எனவே சென்னையில் கால்பந்து வளர்ச்சியடைவதற்கு பிரவீண் அணியினர் மீண்டும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்” என்றனர்.

என்னென்ன வாக்குறுதிகள்?

ஆண்டுதோறும் தேசிய அளவிலான கால்பந்து போட்டியை நடத்துவது, சந்தோஷ் டிராபி, ஃபெடரேஷன் கோப்பை போட்டிகளை சென்னையில் நடத்துவது, மகளிருக்கு லீக் போட்டி நடத்துவது, பள்ளி சிறுவர்களுக்கு பயிற்சி முகாம், நடுவர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சிறப்பு முகாம், சென்னை கால்பந்து சங்கத்துக்கு தனி விளையாட்டுத் திடல் அமைக்க முதல்வரிடம் கோரிக்கை விடுப்பது என்பது உள்ளிட்ட புதிய வாக்குறுதிகளை பிரவீண் அணியினர் இந்த முறை அளித்துள்ளனர்.

கடும் போட்டி

கடந்த முறை சொல்லாமல் சாதனைகள் பல செய்த பிரவீண் அணியினர், இந்த முறை அச்சிட்டு வழங்கியிருக்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என சென்னை கால்பந்து ஆர்வலர்கள் நம்புகின்றனர். அந்த வாக்குறுதிகள் நிறை வேற்றப்படும்போது சென்னையில் கால்பந்து மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த காலங்களில் குலாம் அணியினர் சென்னை கால்பந்து சங்கத்தில் அங்கம் வகித்தாலும், அவர்கள் கால்பந்தின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் கால்பந்து ஆர்வலர்கள். பிரவீண் அணியினர் கால்பந்து வளர்ச்சிக்காக பாடுபட்டிருந்தாலும், குலாம் அணியினருக்கும் செல்வாக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. மொத்தத்தில் இரு அணியினரிடையே கடும்போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x