Published : 04 Oct 2018 07:29 PM
Last Updated : 04 Oct 2018 07:29 PM

பிரித்வி ஷா-வின் பிரமிப்பூட்டும் முதல் சதம், சதத்தை நோக்கிய கோலியின் ஆட்டம்: முதல் நாளில் இந்தியா 364/4

ராஜ்கோட்டில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீர்ர் பிரித்வி ஷா பிரமிப்பூட்டும் சதம் எடுக்க, விராட் கோலி சதத்தை நோக்கி பயணிக்க இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்துள்ளது.

ஆட்ட முடிவில் விராட் கோலி 72 ரன்களுடனும் ரிஷப் பந்த் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று காலை மே.இ.தீவுகள் தங்களின் அனுபவ பவுலர்கள் கிமார் ரோச், கேப்டன் ஜேசன் ஹோல்டர் இல்லாத பின்னடைவுடன் அனுபவமில்லாத கிரெய்க் பிராத்வெய்ட் கேப்டன்சியுடனும் 42 டிகிரி வெயிலுடனும், டாஸில் தோல்வியிடனும் தொடங்கியது.

கே.எல்.ராகுல், கேப்ரியல் வீசிய பந்துக்கு காலைத் தூக்கி முன்னே போட்டார், மட்டையைக் கொண்டு வர முடியவில்லை, பந்து நேராக மிடில் ஸ்டம்பில் கால்காப்பில் பட வெளியேறினார், முதல் போட்டியில் ஆடும் பிரித்வி ஷாவிடம் மேல்முறையீடு செய்யலாமா என்று கேட்டார்!! ஆனால் ரிவியூ விரயம். ராகுலால் இன்னொரு ரிவியூ விரயம்.

அதன் பிறகு பிரித்வி ஷா பல சாதனைகளை உடைத்தார், பின்காலை முதலில் குறுக்காக நகர்த்தி ஆடுவதால் எந்தப் பந்துக்கும் அவர் தன்னை சரியாக நிலைப்படுத்திக் கொள்ள முடிகிறது, பந்தை அடிக்கவும் தடுக்கவும் மற்ற வீரர்களை விட இவருக்கு கால அவகாசம் நிறைய கிடைக்கிறது இது அவரது முதல் பேக்ஃபுட் பஞ்ச் 3 ரன்களிலும் பிறகு அடித்த பேக்ஃபுட் பஞ்ச் ஸ்கொயர் பவுண்டரியிலும் தெரிந்தது. ஸ்பின்னர்களையும் இவர் மேலேறி வந்தும் ஆடுகிறார், பின்னால் சென்றும் ஆடுகிறார். இப்போதைய ‘பெரிய’ வீரர்களெல்லாம் ஸ்வீப் ஆடத்தண்ணிக் குடிக்கும் போது அவர் ஸ்லாக் ஸ்வீப்பை திறம்பட பயன்படுத்துகிறார், இன்னும் அவரிடமிருந்து புல், ஹூக் பார்க்கவில்லை, ஆனால் அதையும் அவரது பின் கால் நகர்வு முறியடிக்கும் என்றே தோன்றுகிறது, மொத்தத்தில் அனைத்து ஸ்ட்ரோக்குகளையும் விளையாடக்கூடிய ஒரு தொடக்க வீரர் சேவாகுக்குப் பிறகு இந்திய அணிக்குக் கிடைத்துள்ளார். 99 பந்துகளில் சதமெடுப்பது அறிமுக டெஸ்ட்டில் சாதாரணமல்ல, மேலும் 18 வயது வீரர் ஒருவர் எந்த ஒரு பதற்றமும் பயமுமின்றி பிரமாதமாக ஆடியது பலரையும் பிரமிக்கச் செய்தது.

 

இவர் வலுவான ஃபேக்ஃபுட் வீரர் என்பதால் 134 ரன்களில் முக்கால்வாசி இருபுறமும் ஸ்கொயர் திசைகளிலேயே வந்தது. ஆனால் முன் காலிலும் அவர் தன் திறமையை காட்டினார், மே.இ.தீவுகள் பவுலர்கள் அபத்தமாக ஓவர் பிட்ச் வீசிய போதும் அதனை தரையோடு தரையாக விளாசினார். இங்கிலாந்து போல் இல்லை என்பதால் புஜாராவும் ஃப்ரீயாக ஆடி சதம் நோக்கிச் சென்றார். 130 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 86 ரன்களில் அவர் லூயிஸ் பந்து ஒன்று உள்ளே வந்து வெகுலேசாக வெளியே எடுத்தது, விட்டிருக்கலாம் அவர் என்ன ஆட முயற்சி செய்தார் என்று தெரியவில்லை, எட்ஜ் ஆகி டவ்ரிச் ‘லபக்’கினார். ஷாவும் இவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்காக 206 ரன்களைச் சேர்த்தனர். பிரித்வி ஷா அதன் பிறகு 134 ரன்களில் பிஷூ பந்து ஒன்றை கவர் திசையில் பஞ்ச் செய்ய நினைத்தார் ஆனால் பந்து சற்றே கூடுதலாக திரும்பி நின்று வந்தது இதனால் பிஷூவிடமே கேட்ச் ஆனது. .

ரஹானே, விராட் கோலி இணைந்து 4வது விக்கெட்டுக்காக மேலும் 105 ரன்களைச் சேர்த்தனர். ரஹானே 92 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41 எடுத்த நிலையில் ராஸ்டன் சேஸ் பந்து ஒன்று சறுக்கிக் கொண்டு செல்ல இவர் கட் ஆட முயன்றார் மெலிதான எட்ஜ், நடுவர் அவுட் என்றார், கோலி ரஹானேவிடம் கேட்ட போது எட்ஜா? இல்லையே என்றார் இதனால் இன்னொரு ரிவியூ விரயம். ரிஷப் பந்த் இறங்கி கேப்ரியல் வீசிய பவுன்சரை ஹூக் செய்து டாப் எட்ஜ் சிக்ஸ் அடித்தார், விராட் கோலி தன் வழக்கமான பாணியில் அனாயசமாக ஆடி 72 நாட் அவுட். ஆனால் இருமுறை பீட்டன் ஆனார். மற்றபடி அனாவசிய ஷாட்களுக்கெல்லாம் போகவில்லை. கேப்டன் இன்னிங்ஸ். இந்திய அணி 364/4.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x