Published : 09 Oct 2018 07:09 PM
Last Updated : 09 Oct 2018 07:09 PM
துபாயில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தன் முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்குச் சுருண்டது. அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடும் 33 வயது ஆஃப்ஸ்பின்னர்/தூஸ்ரா வீச்சாளர் பிலால் ஆசிப் 21.3 ஓவர்கள் வீசி 7 மெய்டன்களுடன் 36 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
மொகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 142/0 என்று இருந்த ஆஸ்திரேலியா அடுத்த 60 ரன்களுக்கு 10 விக்கெடுகளைப் பரிதாபமாகப் பறிகொடுத்து தனது கொத்துக் கொத்தாக சரியும் சமீபத்திய பாரம்பரியத்தை மீண்டும் நிலைநாட்டியது. பாகிஸ்தான் வீச்சாளர்களில் 3வது சிறந்த அறிமுகப் பந்து வீச்சை வீசி பிலால் ஆஸிப் சாதனை புரிந்தார்.
இதன் மூலம் 280 ரன்கள் பாகிஸ்தான் முன்னிலை பெற்றும் பாலோ ஆன் கொடுக்காமல் மீண்டும் பேட் செய்து 31 ரன்கள் எடுத்தது.
ஏரோன் பிஞ்ச் டெஸ்ட் வீரராக தனது ஒருநாள் தாக்குதல் ஆட்ட உள்ளுணர்வைக் கட்டுப்படுத்தி 161 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சர் என்று 62 ரன்களுடன் ஆடிவந்த போது ஸ்கோர் முதல் விக்கெட் விழாமல் 142 என்று வலுவாக இருந்தது. அப்போது சர்பராஸ் அகமட் ஷார்ட் மிட் ஆனைக் கொண்டு வந்தார், அப்பாஸ் வீசிய பந்து உள்ளே வர பிஞ்ச் அடிக்கப் போனார் அது பிட்ச் அருகே நின்று கொண்டிருந்த ஆசாத் ஷபீக்கின் அற்புத கேட்ச் ஆனது.
ஷான் மார்ஷ் அடுத்ததாக 7 ரன்களில் பிலால் ஆசிப்பின் முதல் விக்கெட்டானார், பெரிய பந்தெல்லாம் ஒன்றுமில்லை ட்ரைவ் ஆடும்போது பந்த் பிட்ச் ஆன இடத்துக்கு மட்டை செல்லவில்லை, உடலுக்கு தள்ளி ஆடினார் எட்ஜ் ஆகி ஆசாத் ஷபீக்கிடம் கேட்ச் ஆனது.
உஸ்மான் கவாஜா மிகப்பிரமாதமாக ஆடி வந்தார், ஸ்வீப் ஷாட்கள், பெடல் ஷாட், ரிவர்ஸ் ஷாட், என்று அசத்தி வந்தார், ஆனால் ஆசியாவில் முதல் சதம் நோக்கி 85 ரன்களுடன் வலுவாகச் சென்று கொண்டிருந்த அவர் பிலால் ஆசிப் வீசிய சற்றே ஷார்ட் பிட்ச் பந்தை பெடல் ஸ்வீப் ஆட முயன்று ஷார்ட் லெக்கைத் தாண்டவில்லை ஷாட். கேட்ச் ஆனது வெளியேறினார்.
இது மிடில் ஆர்டரை அம்பலப்படுத்தியது. ட்ராவிஸ் ஹெட் (0), இதே ஓவரில் அறிமுக வீரர் மார்னஸ் லபுஷான் டக் அவுட் ஆகி பிலால் ஆசிப்பிடம் வெளியேறினர். மிட்செல் மார்ஷ் 12 ரன்களில் மொகமத் அப்பாஸிடம் எல்.பி. ஆனார். பெய்ன் 7 ரன்களில் பேட்-கால்காப்பு கேட்சில் பிலால் ஆசிப்பிடம் காலியானார். மிட்செல் ஸ்டார்க் அப்பாஸிடம் டக் அவுட் ஆக, பீட்டர் சிடில் 10 ரன்கலில் இவரிடமே பவுல்டு ஆனார். நேதன் லயன் 6 ரன்களில் பிலால் ஆசிப்பிடம் நடையைக் கட்ட., 52வது ஓவரில் 142/0 என்று இருந்த ஆஸ்த்ரேலியா, 84வது ஓவரில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 282 ரன்கள் பின் தங்கியது, பிலால் ஆசிப் 36 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT