Published : 27 Oct 2018 02:47 PM
Last Updated : 27 Oct 2018 02:47 PM

3வது ஒருநாள்; ஓடிப்போய் டைவ் அடித்து தோனி பிடித்த பிரமாத கேட்ச்: நீக்கிய தேர்வுக்குழுவுக்கு சூசக பதிலடி?

மே.இ.தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கோலி முதலில் மே.இ.தீவுகள் அணியை பேட் செய்ய அழைத்தார்.

மே.இ.தீவுகளின் தொடக்க இடது கை வீரர் சந்தர்பால் ஹேம்ராஜ் 6வது ஓவரில் பும்ராவை முதலில் கவருக்கு மேல் ஒரு அரக்க பவுண்டரி அடித்தார். இதில் கடுப்பான வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அடுத்த பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீசினார், ஆனால் ஹேம்ராஜ் நின்ற இடத்திலிருந்து லாங் ஆன் மேல் ஒரு அரக்க சிக்சரையும் விளாசினார்.

ஆனால் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத பும்ரா மீண்டும் ஹேம்ராஜ் தொண்டைக்கு ஒரு பவுன்சரை வீசினார், ஹேம்ராஜ் ஹூக் ஷாட் ஆட முயன்றார் பந்து டாப் எட்ஜ் ஆகி பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரிக்கு அரைவழியில் காற்றில் எழும்பியது, அப்போது வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் தோனி பந்துடனேயே ட்ராவல் செய்தார். பந்திலிருந்து கண்களை எடுக்கவில்லை.

பந்து அவரிடம் இருந்து கொஞ்சம் தள்ளி தரைத் தட்டும் நிலையில் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கேட்சை எடுத்து உற்சாகத்தில் தூக்கிப் போட்டார், மிக அற்புதமான கேட்ச் இது, இதன் மூலம் இந்திய அணி முதல் விக்கெட்டைக் கைப்பற்றியது.  2 பவுண்டரி 1 சிக்சருடன் அபாயமாகத் திகழ்ந்த ஹேம்ராஜ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தோனி கடைசியாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தது எப்போது என்று நினைவில் இல்லை, டைவ் அடிக்க மாட்டார், பிட்னெஸ் எல்லாம் அவர் பேசினாலும் டைவ் மட்டும் அடிக்காமல் இருந்தார், அதனால் அணிக்கும் பெரிய பாதிப்பில்லாமல்தான் இருந்தது, இந்நிலையில் தேவைப்பட்டால் எங்கு ஓடியும் எப்படி டைவ் அடித்தும் கேட்ச் பிடிப்பேன் என்று தோனி தன் வயது பற்றி பேசுபவர்களுக்கு இந்தக் கேட்ச் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், இந்திய டி20 அணியிலிருந்து நீக்கப்பட்ட தோனி, அணித்தேர்வுக்குழுவுக்கு தன் கேட்ச் மூலம் ஒரு பதிலடியும் வழங்கியது போல் அமைந்தது இந்த கேட்ச்.

மே.இ.தீவுகள் தற்போது 13.3 ஒவர்களில் 56/3. பும்ரா 2 விக்கெட் கலீல் அகமெட் 1 விக்கெட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x