Published : 01 Oct 2018 07:15 PM
Last Updated : 01 Oct 2018 07:15 PM

கருண் நாயர் ரன்களையும் குவித்துக் கொண்டு வாய்ப்புக்காக காத்திருக்கவும் வேண்டுமா? எதிர்காலம் இருளுமா, பிரகாசிக்குமா?

சேவாகுக்குப் பிறகு டெஸ்ட் முச்சதம் கண்ட கருண் நாயர் அதன் பிறகு 2-3 டெஸ்ட்களில் சரியாக ஆடவில்லை என்பதற்காக ஒதுக்கப்பட்டார், இன்று வரை அவருக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு நழுவிக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் பிடிஐ-யிடம் கூறும்போது, “எங்கள் தேர்வுகுழுவின் பலம் என்னவெனில் வீரர்களிடம் என்ன தெரிவிக்க வேண்டுமோ, எப்படித் தெரிவிக்க வேண்டுமோ அதை உரிய நேரத்தில் தெரிவிப்பதுதான். எந்த வீரராக இருந்தாலும் அவரை ஏன் நீக்கினோம் என்பதை காரணத்துடன், அது அவர் ஏற்றுக் கொள்ளாத காரணமாக இருந்தாலும் கூறிவிடுவோம்.

ஆகவே எங்கள் தொடர்புபடுத்துதலில் எந்த வித சிக்கலும் இல்லை. என் சகா தேவங் காந்தி, கருண்நாயரிடம் விலாவாரியாக பேசினார். இங்கிலாந்தில் அவருக்கு ஊக்கமளித்து காத்திருக்குமாறு ஆறுதல் கூறினார்.

எனவே கருண் நாயர் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித் திட்டத்தில் இருக்கவே செய்கிறார். இப்போதைக்கு அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி ரன்களைக் குவித்தபடியே காத்திருக்க வேண்டியதுதான்” என்றார்

இந்திய அணித்தேர்வு வரலாற்றைப் பார்க்கும் போது கருண் நாயருக்கு மட்டும் இது நடக்கவில்லை என்று தெரியும், ரோஹித் சர்மா, ரஹானேவுக்கு இது நடந்தது, யுவராஜ் சிங் டெஸ்ட் போட்டிக்குள் வந்தது ஆகியவை பல்வேறு தளங்களில் விமர்சனத்துக்கு ஆளானவைதான்.

ஆனால் கருண் நாயருக்கு நடந்தது வேறு, இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்று இந்திய வீரர்களுக்கு அவர் பயிற்சி அளித்தார். ஹனுமா விஹாரியை அழைத்து வாய்ப்பு கொடுத்தனர், ஏற்கெனவே இருக்கும் வீரரை விடுத்து புதிதாக ஒருவரை இந்தியாவிலிருந்து வரவழைத்து வாய்ப்பு கொடுப்பது நிச்சயம் ஏற்கெனவே தொடரில் தேர்வாகி விட்டு வாய்ப்பு கிடைக்காத கருண் நாயருக்கு உத்வேகத்தையும் நம்பிக்கையிழப்பையும் ஏற்படுத்தியிருக்கும்.

சுனில் கவாஸ்கரே கடுப்பாகி, ’கருண் நாயரை இந்திய அணி நிர்வாகத்துக்கு பிடிக்கவில்லை’ என்று கடிந்து கொண்டார். இந்நிலையில் இது போதாதென்று மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி அணியிலும் கருண் நாயர் இல்லை. ஆஸ்திரேலியா தொடருக்காவது அவருக்கு வாய்ப்பளிக்கப் படுமா? ஆனால் சுலபமானத் தொடர்களிலெல்லாம் இவர்கள் விரும்பும் வீரர்களுக்கு வாய்ப்பளித்துவிட்டு, கடினமான ஆஸ்திரேலியா தொடரில் அதுவும் அவர் நொந்து நூலான நிலையில் வாய்ப்பளித்தால் அது உண்மையில் வாய்ப்பாகாது அவரது கரியரைக் காலி செய்வதாகவே அமையும் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x