Published : 23 Oct 2018 03:47 PM
Last Updated : 23 Oct 2018 03:47 PM

கிரிக்கெட் கடவுளுக்கு’ வீசுவதற்காகவே இடது கை வேகப்பந்திலிருந்து ஸ்பின்னுக்கு மாறிய பப்பு ராய்

ஒரு விக்கெட் எடுத்தால் 10 ரூபாய் கிடைக்கும், சில நேரங்களில் போட்டிகளில் விக்கெட் எடுக்கமுடியாமல் பட்டினியோடு அலைந்திருக்கிறேன், இன்று இந்திய சி அணியில் இடம் கிடைத்து பட்டினிக்குக் கிடைத்த வெற்றி என்று உருக்கமாகத் தெரிவித்த கொல்கத்தா சுழற்பந்துவீச்சார் பப்புராய், சச்சின் டெண்டுல்கருக்கு வீசுவதற்காகவே இடது கை சுழற்பந்து வீச்சுக்கு மாறியதாகத் தெரிவித்துள்ளார்.

வறுமையிலும் திறமை:

இந்திய சி அணியில் இடம் பெற்ற இடது கை சுழற்பந்துவீச்சாளர் பப்பு ராய். சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்து, மாமாவின் ஆதரவில் வளர்ந்து, வறுமையின் படியில் சிக்கி தற்போது, இந்திய சி அணியில் இடம்பெற்றுள்ளார்.

பப்பு ராயின் பெற்றோர் பீகார் மாநிலம், சரண் மாவட்டம் கஜூரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பப்புராயின் தந்தை ஜம்தார் ராய், தாய் பார்வதி தேவி. பிகாரில் பிழைக்க வழியில்லாததால், சிறுவயதிலேயே பப்பு ராயை தூக்கிக் கொண்டு கொல்கத்தாவுக்குப் பிழைப்பு தேடி வந்தனர். ஆனால், பப்பு ராயின் பெற்றோர் கொல்கத்தாவுக்கு வந்த ஒரு ஆண்டில் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர்.

இதையடுத்து, சிறுவயதில் இருந்த பப்பு ராயை அவரின் தாய்மாமன் எடுத்து வளர்த்தார். சிறுவயதில் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமாக இருந்த பப்பு ராய் இடதுகை வேகப்பந்துவீச்சாளராக இருந்தார், அப்போது, இவரை அடையாளம் கண்ட பிற அணிகள் பந்துவீச வாடகைக்கு அழைப்பார்கள். ஒரு விக்கெட் வீழ்த்தினால் 10 ரூபாய் என்ற கணக்கில் வாடகைக்கு அழைத்துச் சென்றனர்.

குடும்பம் வறுமை, பசிக்கொடுமை ஆகியவற்றால், துல்லியமாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தியதால், அதில் கிடைக்கும் பணத்தை வீட்டுக்குக் கொடுத்துள்ளார்.

அதன்பின் பப்பு ராயின் திறமையைப் பார்த்த ஹவுரா கிரிக்கெட் அகாடெமியின் பயிற்சியாளர் வேகப்பந்து சரிவராது சுழற்பந்துக்கு மாறு என்று திருத்தியுள்ளார். அதன்பின்சுழற்பந்துவீசசை பழகிய பப்பு ராய் வேகப்பந்துவீச்சைக் காட்டிலும் சுழற்பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டார்.

2011-ம் ஆண்டில் கொல்கத்தா கிரிக்கெட் அகாடெமி சார்பில் நடந்த போட்டியில் 9 ஆட்டங்களில் 50 விக்கெட்டுகளை பப்புராய் வீழ்த்தி அனைவரையும் வியக்க வைத்தார். இவரின் திறமையைப் பார்த்த ஒடிசா கிரிக்கெட் சங்கம், பப்பு ராயை தத்தெடுத்து, ஒடிசாவுக்காக விளையாடக் கேட்டுக்கொண்டது.

ஒடிசா மாநிலத்தின் 23வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடி வரும் பப்பு ராய் இந்திய சி அணிக்குத் தேர்வு செய்யப்பட்டதும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

“என்னுடைய பசிக்கொடுமை, வீட்டில் வறுமை ஆகியவற்றால், 10 ரூபாய் கிடைக்கிறது என்பதற்காக ஆர்வத்துடன் துல்லியமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துவேன். இதன் மூலம் எனக்குக் கிடைக்கும் பணத்தால் வயிறார சாப்பாட்பிட்டு இருக்கிறேன். என்னுடைய 15 வயதுக்கு மேல் நாள் தோறும் நான் சாப்பிடுவது என்பது இயலாத காரியம் அப்போதெல்லாம் எனக்குச் சாப்பாடு போட்டது கிரிக்கெட்டும் விக்கெட்டும்தான்” என்றும் கூறியிருந்த பப்பு ராய் இடது கை வேகப்பந்து வீச்சிலிருந்து இடது கை ஸ்பின்னுக்கு மாறியதன் பின்னணியில் ‘இந்திய கிரிக்கெட் கடவுள்’ சச்சின் டெண்டுல்கர் இருப்பதை அவரே இப்போது வெளிப்படுத்தியுள்ளார்:

கிரிக்கெட் கடவுள் சச்சின்’

“சச்சின் டெண்டுல்கர் சார், அப்போது தன் பிரியாவிடை டெஸ்ட் போட்டியில் ஆடவிருந்தார். முதல் டெஸ்ட் போட்டிக்கு 2 நாட்கள் முன்னதாக ஹவுரா யூனியன் பவுலர்களை வலைப்பயிற்சியில் வீசுவதற்காக அழைத்திருந்தனர். நான் ஜெய்ப்பூரில் இருந்தேன். ஆனால் இரவோடு இரவாக பஸ்ஸைப் பிடித்து கொல்கத்தா வந்து சேர்ந்தேன்.

ஈடன் கார்டனில் வந்த பிறகு தவறாக ஸ்பின்னர்கள் வரிசையில் போய் நின்றேன். பிறகு என்னிடம் கூறினார்கள் வேகப்பந்து வீசுவதற்கான பவுலர்கள் தேர்வு முடிந்து விட்டது, இடது கை ஸ்பின் வீசுவாயா சச்சின் டெண்டுல்கருக்கு வீசலாம் என்றனர். அந்த செட்டில் நான் மட்டுமே இடது கை சுழற்பந்து வீசுபவன், நான் தீவிரமாக யோசித்தேன், ‘கடவுளுக்கு (சச்சினுக்கு) நான் இடது கை சுழற்பந்து வீச வேண்டும் என்று எழுதியிருந்தால் நான் அதைத்தான் செய்ய வேண்டும். இது எனக்கு முன்னேற ஒரு வாய்ப்பு’ என்று என் மனக்குரல் என்னுள் ஒலித்தது.

ஒரு முறை ஹனுமா விஹாரி விக்கெட்டை வீழ்த்தினேன், எனக்கு அவர் யார் என்று தெரியாது, அப்போது தான் அணியில் சொன்னார்கள் இந்திய அணி வீரரை நீ வீழ்த்தியிருக்கிறாய் என்று. அதன் பிறகு ரிக்கிபுய்-ஐ வீழ்த்தினேன். என்னுடைய பவுலிங் ஸ்டைல் ரவீந்திர ஜடேஜா போல் உள்ளது என்று என் பயிற்சியாளர் ரஷ்மி ரஞ்சன் பரிதா தெரிவித்தார்.”

என்று சச்சின் டெண்டுல்கருக்கு வீசுவதற்காகவே இடது கை ஸ்பின்னரான கதையை பப்பு ராய் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x