Last Updated : 29 Oct, 2018 09:44 AM

 

Published : 29 Oct 2018 09:44 AM
Last Updated : 29 Oct 2018 09:44 AM

குல்பி ஐஸ் விற்கும் பாக்ஸிங் வீரர்: அர்ஜுனா விருது, 17 தங்கப்பதக்கங்கள் பெற்றவருக்கு நேர்ந்த அவலம்

ஹரியாணாவில் அர்ஜுனா விருதுபெற்ற பாக்ஸிங் வீரர் தனது வீட்டுச் சுமைக்காக தெருத்தெருவாக குல்பி ஐஸ் விற்கும் அவலம் ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அரசின் உதவி இல்லாததால் வாங்கிய கடனை அடைக்க இந்தியாவுக்காக 17 தங்கப்பதக்கம் வென்ற அந்த பாக்ஸிங் வீரர் குல்பி விற்கிறார்.

சினிமாவில் தான் இதுபோன்ற காட்சிகள் வரும். விளையாட்டுத்துறையில் சாதனைகள் படைக்கும் கதாநாயகன் ஏதோ ஒரு அரசியலால் ஓரங்கட்டப்பட்டு சாதாரண தொழில் செய்வார். அதே போன்றதொரு அவலம், ஹரியாணா மாநிலம் பிவானா மாவட்டத்தில் நிஜத்தில் ஒரு பாக்ஸிங் வீரருக்கு நடந்துள்ளது.

அதுவும் அவர் சாதாரண வீரர் அல்ல, இந்தியாவுக்காக ஒலிம்பிக் வரை பாக்சிங்கில் பங்கேற்றவர். தேசிய, சர்வதேசப் போட்டிகளில் 17 தங்கப்பதக்கங்கள் வென்றவர். இதற்காக இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருதை குடியரசுத் தலைவரிடம் பெற்றவர்.

ஹரியாணாவைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (30). இவர் தற்போது பிவானி மாவட்ட தெருக்களில் குல்பி ஐஸ் விற்கிறார். அவரது ஐஸ் வண்டியில் தினேஷ் குமார் குல்பி ஐஸ் என எழுதப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகளுக்கு தினேஷ்குமார் பிரபலம்.

குத்துச் சண்டைவீரர் ஏன் தெருவில் குல்பி ஐஸ் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்?

ஹரியாணாவின் பிள்ளையாக இந்தியாவில் நடந்த தேசிய, சர்வதேசப்போட்டிகளில் குத்துச்சண்டையில் ஜூனியர் போட்டிகளில் வென்று வாகை சூடியவர் தினேஷ் குமார். 17 தங்கப்பதக்கங்கள், 1 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கங்கள் வென்ற இவர் ஒலிம்பிக் வரை சென்றுள்ளார்.

இதற்காக இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருதை தனது 22 வது வயதில் குடியரசுத் தலைவரிடம் பெற்றார். இந்தியாவின் மகனாக பாக்ஸிங்கில் வெற்றிகரமாக உலா வரவேண்டிய தினேஷ் குமாரின் வாழ்க்கையில் பேரிடியாக இறங்கியது அந்த விபத்து.

2014-ம் ஆண்டு தினேஷ் குமார் சென்ற கார் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அதோடு முடிந்துபோனது அவரது பாக்ஸிங் வாழ்வு. விபத்தில் சிக்கிய தினேஷ் குமாருக்கு அரசாங்கமும், விளையாட்டுத் துறையும் உதவ முன் வரவில்லை.

யாரும் உதவாத நிலையில் தினேஷ் குமாரின் தந்தை மகனின் சிகிச்சைக்காக செலவு செய்ய லட்சக்கணக்கில் கடன் வாங்க நேர்ந்தது. ஏற்கெனவே மகன் பாக்ஸிங்கில் பெரிய வீரனாக வரவேண்டும் என்பதற்காக வெளிநாடு செல்ல, பயிற்சி என லட்சக்கணக்கில் அவர் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில் சிகிச்சைக்கான கடனும் சேர்ந்து மிகவும் நொடிந்துபோகும் நிலைக்கு தினேஷ் குமார் குடும்பம் தள்ளப்பட்டது.

தனது உடல் நிலை தேறி மீண்டும் பாக்ஸிங்கில் காலூன்றும் அளவுக்கு தினேஷ் குமார் தயாரானாலும், கடனுக்கான வட்டியே பெரும் தொகையாக மாதாமாதம் கட்டவேண்டிய நிலையில் நெருக்கடியைச் சந்தித்தார். இந்நிலையில் தனது தந்தைக்கு உதவு வேண்டிய சூழலில் தள்ளப்பட்டார். அரசாங்க உதவியும் இல்லாத நிலையில் தற்போது தெருவில் குல்பி ஐஸ் விற்கிறார். இதன்மூலம் வரும் வருமானத்தில் தாங்கள் வாங்கிய கடனுக்கான வட்டியைக் கட்ட முடிகிறது என தினேஷ் குமார் தெரிவிக்கிறார்.

தினேஷ் குமார் தேசிய சர்வதேச அளவில் குத்துச் சண்டையில் தங்கப்பதக்கம் பெற்றாலும், அர்ஜுனா விருது வாங்கியிருந்தும் அவருக்கு ஒரு அரசு வேலை கூட ஒதுக்க இதற்கு முன்பிருந்த அரசும், இப்போதுள்ள அரசும் முன்வரவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

தனக்கு அரசு வேலை ஒதுக்க வேண்டும், தற்போதும் முழு உடல் தகுதியுடன் இருக்கும் தான் ஜூனியர் அளவிலான குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்து பதக்கம் வாங்கும் அளவுக்கு தயார்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள தினேஷ் குமார் அரசு தனக்கு வாய்ப்பு கொடுத்தால் தேசிய அளவில் பதக்கம் பெறும் வகையில் பல வீரர்களைத் தயார்படுத்துவேன் என தெரிவித்துள்ளார். 

தினேஷ் குமாரின் பயிற்சியாளர் பகவான் சிங் தெரிவிக்கையில், ''குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்த மிகச்சிறந்த வீரர் தினேஷ் குமார். அவருக்கு அரசு நிரந்தரமான ஒரு வேலையை வழங்கினால் அவர் தனது பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு அவரது எதிர்காலம் நன்றாக அமைய அது உதவும்'' எனத் தெரிவித்துள்ளார்.

தினேஷ்குமார் எனும் அர்ஜுனா விருது பெற்ற வீரர் குல்பி ஐஸ் விற்கும் செய்தி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதன்மூலம் அரசின் பார்வை அவர்மீது திரும்பினால் நல்லதொரு வாய்ப்பாக தினேஷ் குமாருக்கு அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x