Last Updated : 04 Oct, 2018 05:18 PM

 

Published : 04 Oct 2018 05:18 PM
Last Updated : 04 Oct 2018 05:18 PM

மே.இ.தீவுகள் கிரிக்கெட்டை நாசப்படுத்திய பணமழை ஐபிஎல்: கார்ல் ஹூப்பர் ஆவேசம்

பணம் கொழிக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் வந்தபின் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டையே நாசப்படுத்திவிட்டது. திறமையான இளம் வீரர்கள் அனைவரும் ஐபிஎல் ஒப்பந்தத்தைப் பெறுவதிலேயே இலக்காக இருக்கிறார்கள் என்று மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கார்ல் ஹூப்பர் வேதனைத் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கார்ல் ஹூப்பர். இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,762 ரன்களும், 227 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,671 ரன்களும் குவித்துள்ளார். சிறந்த சுழற்பந்துவீச்சாளரான ஹூப்பர் டெஸ்ட் போட்டிகளில் 114 விக்கெட்டுகளையும், ஒரு நாள் போட்டிகளில் 194 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கார்ல் ஹூப்பர், தற்போது ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். ஏறக்குறைய 16 ஆண்டுகளுக்குப்பின், கிரிக்கெட் வரண்னனையாளராக தற்போது ஹூப்பர் வந்துள்ளார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்ட பின், மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் சொந்த நாட்டுக்கு விளையாடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்று ஆதங்கப்பட்டார். கார்ல் ஹூப்பர் ஊடகங்களிடம் கூறியதாவது:

மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணிக்கும், வீரர்களுக்கும் இடையே ஊதியப் பிரச்சினை இருந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால், அது தீர்க்கப்பட்டுவிட்டது. ஆனால், பணம் கொழிக்கும் ஐபிஎல் போட்டி வந்தபின், மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட்டை ஐபிஎல் நாசப்படுத்திவிட்டது. எங்கள் நாட்டின் திறமையான, இளம் வீரர்கள் அனைவரும் ஐபிஎல் ஒப்பந்தத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கிறார்கள்.

ஐபிஎல் போட்டியின் தாக்கம் எங்கள் நாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதை வரும் ஐபிஎல் தொடரில் பார்க்கலாம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் விளையாடியதைக் காட்டிலும் அதிகமான லீக் போட்டிகள் நடக்கின்றன. இதுபோன்ற லீக் போட்டிகளில் சேர்ந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், மேற்கிந்தியத்தீவுகள் சொந்த நாட்டுக்கு விளையாடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டியது இருக்கிறது.

கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட ஊதியப் பிரச்சினை காரணமாக, நட்சத்திர வீரர்களான கறிஸ் கெயில், டிவைன் பிராவோ, கிரண் பொலார்ட், சுனில் நரேன் ஆகியோர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதையே விரும்புகிறார்கள்.

ஐபிஎல் என்பது 6 வாரங்கள் நடக்கும் போட்டி. ஆனால், அந்தப் போட்டிகள் முடிந்த பின் சுனில் நரேன் போன்ற வீரர்கள் மீண்டும் அணிக்குத் திரும்பலாம். ஆனால், சுனின் நரேன் மட்டுமல்ல, கெயில், பொலார்ட் கூட அணிக்கு வருவதில்லை.

 

என்னைப்பொருத்தவரை அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் முழுமையாக விளையாடி தங்களை மெருகேற்றிக் கொள்ளாதவரை அவர்களை முழுமையான கிரிக்கெட் வீரர்களாகக் கூற முடியாது. டெஸ்ட் போட்டிகளி்ல அதிகமாக விளையாடினால்தான் முழுமையான வீரராக மாற முடியும். ஆனால், வீரர்கள் அதில் ஆர்வம் காட்டுவதில்லை.

எங்கள் நாட்டின் ஷிம்ரன் ஹெட்மேயர் சிறந்த வீரர், கரீபியன் லீக் போட்டியில் சிறப்பாக விளையாடியவர். நிச்சயம் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் ஆனால், அவர் ஐபிஎல் போட்டிக்கு செல்வதை நான் வெறுக்கிறேன். இதன் மூலம் எங்கள் நாட்டு டெஸ்ட் அணிக்குச் சிறந்த, திறமையான வீரர்கள் வருவதைப் பாதிக்கிறது.

வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது தவறு எனச் சொல்லவில்லை. ஆனால், மே.இ.தீவுகள் வாரியத்தின் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு, மற்ற நாட்டு லீக்போட்டிகளில் விளையாட முயல்வது எந்த விதத்தில் நியாயம்.

மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் வாரியம் ஆக்கப்பூர்வமான கொள்கைகளை நடைமுறைப்படுத்தி, கிரிக்கெட்டே நல்ல வழியில் கொண்டு செல்வது அவசியம். வீரர்களுக்குச் சிறந்த ஊதியம் வழங்குவதும் அவசியம். ஊழல் எந்தவிதத்திலும் கிரிக்கெட்டை பாதித்துவிடக்கூடாது

இவ்வாறு கூப்பர் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x