Last Updated : 27 Oct, 2018 06:47 PM

 

Published : 27 Oct 2018 06:47 PM
Last Updated : 27 Oct 2018 06:47 PM

மெல்ல மறைகிறது: முடிவுக்கு வருகிறதா தோனியின் கிரிக்கெட் சகாப்தம்?

மே.இ.தீவுகள், ஆஸி அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் தல தோனி இந்திய அணியில் இல்லை என்ற என்ற செய்தி அவரின் ரசிகர்களுக்கு இடியாக இறங்கியுள்ளது.

அதாவது, 2018 நவம்பர் மாதம் முதல் 2019, பிப்ரவரி மாதம் வரையிலான நாட்களுக்கு தோனி இந்திய அணியில் இல்லை என்பதுதான் நிதர்சனம். பிப்ரவரிக்குப் பின் முற்றுப் புள்ளியும் வைக்கப்படலாம் அல்லது தொடரவும் செய்யலாம்.

சமீபகால மோசமான பேட்டிங் ஃபார்மால் தவித்து வந்ததாலும், அடுத்த விக்கெட் கீப்பரை உருவாக்க வேண்டிய நிர்பந்தம் காரணமாகவும் மே.இ.தீவுகள், ஆஸ்திரேலியா டி20 தொடரில் தோனியை நீக்கி இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் முடிவு எடுத்துள்ளார்.

பிசிசிஐ அமைப்பு எடுத்த முடிவு உண்மையில் மிகவும் துணிச்சலானது என்று ஒரு தரப்பால் பேசப்படுகிறது. அதேசமயம், தோனியின் பேட்டிங் குறித்து பல்வேறு மூத்த கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு இந்த முடிவு முற்றுப்புள்ளி வைக்கும்.

ஆனால், இந்த முடிவை தோனி மீதான விமர்சனத்தை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்பட்ட கண்துடைப்பாக எடுக்காமல் உள்ளார்ந்து பார்த்தால், தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை மெல்ல முடிவுக்கு வந்துள்ளதும், இந்திய கிரிக்கெட்டில் இருந்து தோனி மெல்ல மறைவதும் தெரிகிறது.

ஏற்கனவே மோசமான பேட்டிங்கால் தடுமாறி வரும் தோனி அடுத்த 3 மாதங்களுக்குப் பெரிய அளவிலான போட்டிகள் எதிலும் பங்கேற்க வாய்ப்பில்லை.

அதாவது, ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டார் என்பதால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடமாட்டார். விஜய் ஹசாரே, துலீப் டிராபி போட்டிகளும் முடிந்துவிட்டது. ஆதலால், அடுத்த 70 நாட்களுக்கு மேலாக உள்நாட்டில் எந்தவிதமான பெரிய அளவுக்கு கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறுவதற்குச் சாத்தியமில்லை.

கிரிக்கெட் விளையாட்டோடு தன்னுடைய உறவை தோனி உயிர் பித்துக்கொள்ள நினைத்தால், இங்கிலாந்தில் கவுண்டி போட்டியில் விளையாடி தன்னுடைய இழந்த ஃபார்மை மீட்கலாம். அவ்வாறு விளையாடும் போது, அணியில் இருந்து தோனியை நீக்கிய தேர்வுக்குழு, மீண்டும் திரும்பிப் பார்க்கும். தன் மீதான விமர்சனங்களுக்கு தோனி பதிலடி தர முடியும்.

ஒருவேளை தோனி உள்நாட்டிலேயே தங்கி விடுவதாக இருக்கும்பட்சத்தில் தனக்கான முடிவுரையைத் தானே எழுதிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்

ஆனால், தோனியை நீக்கியதால், டி20 கிரிக்கெட்டில் இருந்து தோனி ஒட்டுமொத்த வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தமில்லை என்று தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளது மட்டுமே இங்கு அவரின் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.

அதிரடி ஆட்டக்காரர், கிரேட் பினிஷர், களத்தில் அனல்பறக்கும் பேட்டிங்கிற்கு சொந்தக்காரர், இந்திய அணியை ஒற்றை மனிதராக நின்று பலபோட்டிகளி்ல வெற்றி பெறவைத்தவர் என பல்வேறு புகழுக்குச் சொந்தக்காரர் தோனி என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், தோனி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகவே மோசமான பேட்டிங்கால் சூழப்பட்டு அதில் இருந்து மீளமுடியவில்லை, அதிலிருந்து விடுபட முயற்சிக்கவும் இல்லை என்றே சொல்லலாம்.

இளம் வீரர்களுக்கு சில வாய்ப்புகள் அளித்து அவர்களால் பிரகாசிக்க முடியாத பட்சத்தில் அவர்களை அணியில் இருந்து அணி நிர்வாகம் கழற்றிவிட்டது. ஆனால், கடந்த 20 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக தோனி ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல், ஒரு 22 மாதங்களுக்கு மேலாகச் சதம் அடிக்க முடியாமல் திணறிய நிலையில், அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வந்தனர்.

தோனி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்லாது, சிறந்த விக்கெட் கீப்பர் என்பதால், அவருக்கு அவகாசமும் அதிகமாக அளிக்கப்பட்டது, மேலும், தோனி தன் தவறுகளைத் திருத்திக்கொள்ளவில்லை தன் மீதான மறைமுக விமர்சனங்களுக்குத் தனது பேட்டால் பதில் அளிக்கவில்லை.

கடைசியாக 2017, டிசம்பர் 10-ம் தேதி தர்மசலாவில் இலங்கைக்கு நடந்த ஆட்டத்தில் தோனி அரைசதம் அடித்துள்ளார். அதன்பின் தோனியால் பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பிரகாசிக்க முடியவில்லை. ரன்களையும் ஸ்கோர் செய்ய முடியவில்லை.

தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை 2004-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுவரை 3 பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.

அதாவது 2004 டிசம்பரில் இருந்து ஏப்ரல் 2011-ம் ஆண்டுவரை தோனி 166 இன்னிங்ஸ்களில் விளையாடி 6,049 ரன்கள் குவித்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் தோனியின் பேட்டிங் சராசரி 48.78 சதவீதமாக இருந்தது.

2011ஏப்ரல் முதல் 2015 மார்ச் மாதம் வரை தோனி 62 இன்னிங்ஸ்களில் விளையாடி 2,450 ரன்கள் குவித்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் தோனியின் பேட்டிங் சராசரி 64.47 சதவீதமாக இருந்தது.

2015 ஏப்ரல் முதல் 2018-செப்டம்பர் வரை தோனி 50 இன்னிங்ஸ்களில் விளையாடி 1,624 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் தோனியின் சராசரி 42 ஆகக் குறைந்துவிட்டது. ஆக கடந்த 3 ஆண்டுகளில் தோனியின் பேட்டிங் திறமை என்பது அவரை அறியாமலே மெல்ல மங்கிவிட்டது என்பது நிதர்சனம்.

தோனி கடைசியாக 2017, ஜனவரி மாதம் 19-ம் தேதி கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார். அதன்பின் ஏறக்குறைய 22 மாதங்களாக ஒரு போட்டியில் கூட சதம் அடிக்கவில்லை, 10 மாதங்களாக அரைசதமும் அடிக்கவில்லை.

 

கடந்த 30 இன்னிங்ஸில் தோனி 873 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் சராசரி என்பது 45.94 மட்டுமே. இதில் 11 முறை நாட்அவுட்டாக இருந்துள்ளதால் இந்த சராசரி வந்துள்ளது.

கடந்த 30 இன்னிங்ஸ்களாக தோனியின் ரன்சேர்க்கும் நிலைத்தன்மை என்பது ஒவ்வொரு போட்டியாக குறைந்து கொண்டே வந்துள்ளது, அதாவது நடுவரிசையில் இறங்கி 30 ரன்களுக்கு மேல் அதிகமாக அடிக்கும் அவரின் திறன் ஒவ்வொரு 3 போட்டிகளுக்கும் குறைந்துள்ளது புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது. 15-20 ரன் வீரராக அவர் மாறிவிட்டார். அதுவும் 30 பந்து, 40 பந்து எடுத்துக் கொள்கிறார்.

மேலும் தொடக்கத்தில் ஒவ்வொரு போட்டியிலும் சிக்ஸர் அடிக்கும் திறன் என்பது தொடக்கத்தில் 9 ஓவர்களுக்கு ஒரு சிக்ஸர் என்ற நிலையில் இருந்து 10 ஓவர்களுக்கு ஒரு சிக்ஸர் என்று சரிந்துவிட்டது.

அதிலும் கடந்த 2018-ம் ஆண்டில் தோனியின் ஸ்டிரைக் ரேட் கடந்த 15 ஆண்டுகளாக கிரிக்கெட் வாழ்க்கையில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவாக 67.37 சதவீதமாகக் வீழ்ச்சி அடைந்தது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிகப்பெரிய சேஸர் தோனி என்று வர்ணிக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. ஆனால், 2016-ம் ஆண்டுக்குப்பின் அந்த பெயர் தோனியை விட்டு மெல்ல மறையத் தொடங்கியது.

கடந்த ஒரு ஆண்டாக தோனி களமிறங்கினால், மந்தமாக ஆடி ஆட்டத்தின் சேஸிங்கை பார்க்கும் பார்வையாளர்களின் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கச் செய்யும் அளவுக்கு டென்ஷனாக மாற்றிவந்தார். குறிப்பாக இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் போட்டிகள், ஆசியக்கோப்பை போட்டிகள் போன்றவற்றை கூறலாம். அதிரடிக்குப் பெயர்போன தோனியின் பேட்டிங் மந்தமான பேட்டிங்காக மாறியது

கடந்த 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது சேஸிங்கில் தோனியின் பேட்டிங் சராசரி 82.46 சதவீதமாக இருந்த நிலையில், 2016-ம் ஆண்டுக்குப்பின் அது 61.11 சதவீதமாகக் குறைந்தது.

பேட்டிங் வரிசையிலும் தோனியின் இடத்தை மாற்றி பரிசோதிக்கப்பட்டது. ஆனால் அதிலும் தோனியின் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு கடந்த ஒரு ஆண்டில் ஜொலிக்கவில்லை.

தற்போது மாற்றத்துக்குள்ளாகி இருக்கும் இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் தங்களுக்கான இடத்தைக் தக்கவைத்துக்கொண்டால், தோனிக்கான இடம் காலத்தின் கட்டாயத்தால் காணாமல் போகும். அதற்கான நேரம் வந்துவிட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது. எப்படியாகினும், இந்தியக் கிரிக்கெட்டில் இருந்து தோனியின் சகாப்தம் மெல்ல மறைவது தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x