Published : 14 Aug 2014 12:00 AM
Last Updated : 14 Aug 2014 12:00 AM

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் சோங்காவை வெளியேற்றினார் யூஸ்னி

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் மிக்கேல் யூஸ்னியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார் பிரான்ஸின் ஜோ-வில்பிரைட் சோங்கா.

சமீபத்தில் நடைபெற்ற ரோஜர் கோப்பை போட்டியில் ஜோகோவிச், ஆன்டி முர்ரே, ரோஜர் ஃபெடரர் ஆகியோரைத் தோற்கடித்து சாம்பியன் ஆன சோங்கா, சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில் முதல் சுற்றோடு அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் சின்சினாட்டியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் மிக்கேல் யூஸ்னி 6-1, 6-4 என்ற நேர் செட்களில் சோங்காவை வீழ்த்தினார்.

தோல்வி குறித்துப் பேசிய சோங்கா, “ஒரு போட்டியில் விளையாடிவிட்டு அடுத்த போட்டியில் விளையாடும்போது அங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு விரைவாக மாறுவது எளிதல்ல. மழை காரணமாக அதிரடியாக விளையாடவில்லை. அதேநேரத்தில் நான் தோற்றதற்கு மழை மட்டுமே காரணமல்ல. முடிந்த அளவுக்கு விளையாடினேன். ஆனால் சவால் அளிக்கக்கூடிய வகையில் விளையாடவில்லை.

கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக ஆடியதால், இந்தப் போட்டியிலும் சிறப்பாக ஆட முடியும் என நினைத்தேன். ஆனால் முதல் சுற்றில் களமிறங்கியபோது சிறப்பாக ஆட முடியாது என்பதை உணர்ந்தேன். சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு அமெரிக்க ஓபன் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிடுவேன். அமெரிக்க ஓபன் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும். அந்தப் போட்டிக்குப் பிறகு நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை போட்டியும் மிக முக்கியமானதாகும்” என்றார். வெற்றி குறித்துப் பேசிய யூஸ்னி, “ஒவ்வொரு புள்ளியையும் பெறுவதற்காக கடுமையாகப் போராடினேன்” என்றார்.

மற்ற ஆட்டங்களில் குரேஷியாவின் மரின் சிலிச் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ஃபெலிஸியானோ லோபஸையும், பிரிட்டனின் தகுதிநிலை வீரர் ஜேம்ஸ் வார்ட் 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் கில்லர்மோ கிரேஸியா லோபஸையும் தோற்கடித்தனர். இதேபோல் கனடாவின் வசேக் போஸ்பிஸில் 5-7, 6-1, 7-6 (4) என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக்கை தோற்கடித்தார்.

ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கில்லஸ் சைமனைத் தோற்கடித்தார்.

மகளிர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள செக்.குடியரசின் லூஸி சஃபரோவா 6-7 (2), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை தோற்கடித்தார். மான்ட்ரியால் ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய வீனஸ், இந்த முறை முதல் சுற்றோடு வெளியேறியிருக்கிறார்.

மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மேடிசன் கீஸை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.-பிடிஐ/ஏ.பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x