Published : 27 Oct 2018 09:17 AM
Last Updated : 27 Oct 2018 09:17 AM

பெட்ரோ ஜாவியரின் ஹாட்ரிக் கோலால் சென்னை சிட்டி எஃப்.சி அபார வெற்றி: 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஏரோஸை வீழ்த்தியது

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சிட்டி எஃப்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஏரோஸ் அணியை வீழ்த்தியது.

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரின் 12-வது சீசன் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சிட்டி எஃப்.சி - இந்தியன் ஏரோஸ் அணிகள் மோதின. ஆட்டம் 2-வது நிமிடத்திலேயே இந்தியன் ஏரோஸ் அணி கேப்டன் அமர்ஜித்சிங் முதல் கோலை அடித்தார். இதனால் அந்த அணி 1-0 எனமுன்னிலை வகித்தது. 32-வது நிமிடத்தில் சென்னை சிட்டி எஃப்.சிவீரர் பெட்ரோ ஜாவியர் கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோலுடன் சமநிலை வகித்தன.

2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில்   பெட்ரோ ஜாவியர் 2-வது கோலை அடித்தார். இதனால் சென்னை சிட்டிஎஃப்.சி அணி 2-1 என்ற முன்னிலையை பெற்றது. 64-வது நிமிடத்தில் சென்னை சிட்டி எஃப்.சி அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. இதையும் பெட்ரோ ஜாவியர் கோலாக மாற்றினார். இதனால் இந்தியன் ஏரோஸ் அணி அதிர்ச்சியில் உறைந்தது.

76-வது நிமிடத்தில் அலெக்ஸாண்டர் ரொமாரியோ ஜேசுராஜ் கோல் அடிக்க சென்னை சிட்டி எஃப்.சி. 4-1 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலையை அடைந்தது.

இந்தியன் ஏரோஸ் அணி போராடிய போதும் பதிலடி கொடுக்க முடியாமல் போனது. முடிவில், 4-1 என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி எஃப்.சி. அணி வெற்றி பெற்றது.

சென்னை அணி வீரரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெட்ரோஜாவியர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு அணி உரிமையாளரும், `தி இந்து’குழும இயக்குநர்களில் ஒருவருமான ரோஹித் ரமேஷ் பரிசு வழங்கினார்.

வெற்றி குறித்து சென்னை சிட்டி எஃப்.சி அணியின் பயிற்சியாளர் அக்பர் நவாஸ் கூறும்போது, “உள்

ளூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே வெற்றிகிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தடுத்த ஆட்டங்களிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது” என்றார்.

கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நவம்பர் 1-ம் தேதி   நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் சர்ச்சில் பிரதர்ஸ் அணியுடன் சென்னை சிட்டி எஃப்.சி. அணி மோதுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x