Published : 27 Oct 2018 08:49 PM
Last Updated : 27 Oct 2018 08:49 PM

ஹாட்ரிக் சதம் அடித்து ‘கிங் கோலி’ இன்னொரு சாதனை படைத்தார்: முதல் இந்திய வீரர்; புனேயில் தனிமனிதப் போராட்டம்

புனேயில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியிலும் சதமெடுத்து விராட் கோலி ஹாட்ரிக் சதம் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். 283 ரன்கள் இலக்கை எதிர்த்து இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் செல்ல விராட் கோலி சதமெடுத்துப் போராடி வருகிறார்.

இந்திய அணி 39வது ஒவரில் 207/5 என்று உள்ளது, கடைசியாக தோனி ஹோல்டர் பந்தில் 7 ரன்களில் விக்கெட் கீப்பர் கையில் கேட்ச் கொடுத்து விட்டுச் சென்றார், அது கேட்சிங் பிராக்டீஸ்.

இது விராட் கோலியின் 38வது ஒருநாள் சதமாகும், அதுவும் ஹாட்ரிக் சதமாக அமைந்தது. ஹாட்ரிக் ஒருநாள் சதம் கண்ட முதல் இந்திய வீரர் என்ற இன்னொரு சாதனையை நிகழ்த்தினார் விராட் கோலி.

ஹாட்ரிக் சதம் எடுத்ததில் சங்கக்காரா 4 தொடர் சதங்களுடன் முதலிடம் வகிக்கிறார். இதை சங்கக்காரா 2015 உலகக்கோப்பையில் ஆஸி.யில் சாதித்தார். பாகிஸ்தானில் ஜாகிர் அப்பாஸ், சயீத் அன்வர், பாபர் ஆஸம் ஆகியோர் ஹாட்ரிக் சதம் ஒருநாள் போட்டியில் எடுத்துள்ளனர், இவர்கள் தவிர கிப்ஸ், டிவில்லியர்ஸ், டி காக், ராஸ் டெய்லர், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் ஹாட்ரிக் சதங்களை எடுத்துள்ளனர்.

ஆட்டத்தின் 38வது ஓவரில் ஹோல்டர் பந்தை டீப் பேக்வர்ட் ஸ்கொயர்லெக்கில் சிங்கிளுக்குத் தட்டி விட்டு 110 பந்துகளில் சதம் கண்டார் விராட் கோலி. முன்னதாக ரோஹித் சர்மா 8 ரன்களிலும் ஷிகர் தவண் 35 ரன்களிலும் ராயுடு 22 ரன்களிலும் ரிஷப் பந்த் 24 ரன்களிலும் தோனி 7 ரன்களிலும் நடையைக் கட்டினர், தற்போது புவனேஷ்வர் குமார் கோலியுடன் நிற்கிறார். வெற்றிக்கு இந்திய அணிக்குத் தேவை ஓவருக்கு 6.85 ரன்கள்.

அடுத்து பேட்ஸ்மென்கள் இல்லாத நிலையில் கோலி தனிமனிதராக இலக்கை விரட்டி வருகிறார். விராட் கோலியை வீழ்த்தி விட்டால் மே.இ.தீவுகளுக்குக் கதவு திறந்து விடும். ஹோல்டர், நர்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

விராட் கோலி 104 ரன்களில் ஆடி வருகிறார் அவர் இதில் 10 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x