Published : 01 Oct 2018 09:33 PM
Last Updated : 01 Oct 2018 09:33 PM
மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை(பிசிசிஐ) தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் கொண்டு வந்து மத்திய தகவல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுநாள்வரை தேசியக் கொடியை வெளிநாடுகளில் பயன்படுத்திவரும் பிசிசிஐ அமைப்பு, பிரச்சினை வரும்போதும், அந்த அமைப்பின் நிர்வாகத்தில் கேள்வி எழுப்பும் பட்சத்தில் தாங்கள் தனியார் அமைப்பு எங்களைக் கட்டுப்படுத்த முடியாது, கேள்விக்குப் பதில் அளிக்கக் கடமைப்பட்டவர்கள் இல்லை எனத் தெரிவித்து வந்தது. இனிமேல் அவ்வாறு சொல்வது இயலாது.
உச்ச நீதிமன்ற உத்தரவுகள், சட்ட ஆணையத்தின் அறிக்கை, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறையின் மத்திய தகவல் ஆணையம் ஆகியவை அளித்த அறிக்கை, பிசிசிஐயின் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆர்டிஐ வரம்புக்குள் பிசிசிஐ அமைப்பைக் கொண்டுவர முகாந்திரம் இருந்ததால், இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு நிருபர்களிடம் கூறுகையில், கீதா ராணி என்ற மனுதாரர், இந்தியவீரர்களை எந்த அடிப்படையில் பிசிசிஐ தேர்வு செய்கிறது, எந்த வழிகாட்டுதல் முறையில், நெறிமுறை அடிப்படையில் இந்திய தேசத்தின் பிரதிநிதியாக பிசிசிஐ இந்தியஅணியை விளையாட வைக்கிறது என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் கீதா ராணிக்கு மனநிறைவான பதிலை அளிக்கவில்லை. இதையடுத்து மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டில் ஆய்வு செய்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவுகள், சட்ட ஆணையத்தின் அறிக்கை, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறையின் மத்திய தகவல் ஆணையம் ஆகியவை அளித்த அறிக்கை, பிசிசிஐயின் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆர்டிஐ வரம்புக்குள் பிசிசிஐ அமைப்பைக் கொண்டுவர முகாந்திரம் இருந்தது. இதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், நாட்டில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் முழு அதிகாரம் பெற்ற, முற்றுரிமை பெற்ற தேசிய அளவிலான அமைப்பு பிசிசிஐ என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்டது.
ஆதலால், பிசிசிஐ அமைப்பின் சார்பில் தகுதியான பொது தகவல் அதிகாரிகள், துணை தகவல் அதிகாரிகள் ஆகியோரைச் சட்டத்தின் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்றஉ பிசிசிஐ தலைவர், செயலாளர், நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மற்றும் ஆப்-லைன் மூலம் மனுக்களைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்க வேண்டும். பிசிசிஐ மட்டுமல்லாது பிசிசிஐ அமைப்பின் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும், உறுப்பினர்களுக்கும் இது பொருந்தும்
இவ்வாறு ஆச்சார்யலு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT