Published : 20 Oct 2018 03:55 PM
Last Updated : 20 Oct 2018 03:55 PM

வீறு வீறு விரூ: அச்சம் தவிர் அதிரடி- சேவாக் எனும் தன்னலமற்ற அற்புதன்

பந்தைப் பார் அடி... எனும் கொள்கையுடைய கையளவு உலக கிரிக்கெட் பேட்ஸ்மென்களில் சேவாக் சமீபமானவர், முதன்மையானவர். அவருக்கு இன்று 40வது பிறந்த தினம், பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களுக்கு மீண்டும் விரூவின் வீறலைப் பார்க்க அடங்காத ஆசை இன்னமும் உள்ளது.

பேட்டிங் செய்யும் போது வாயில் பழைய இந்தி மெலடிகளின் முணுமுணுப்பு, ஆனால் மட்டையிலிருந்து கிளம்புவது மெலடி அல்ல அதிரடி. The Uncluttered mind என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் இவரைப்பற்றி கூறியது ரத்தினச் சுருக்கமான அவதானிப்பு. ஒருமுறை ஆஸ்திரேலியா தொடருக்கு இவரைக் கழற்றி விட்டுச் சென்ற போது இதே இயன் சாப்பல் where is viru? என்று எழுதிய பத்தியில் இந்திய அணித்தேர்வு நிர்வாகம் அவரை மீண்டும் அணிக்குள் அழைத்தது. சிட்னி மோசடி ஆஸி.வெற்றிக்குப் பிறகு பெர்த்தில் வெற்றி பெற்றதில் விரூவின் பங்களிப்பு சொற்பமானாலும் மிகப்பெரிது.

அடுத்த அடிலெய்ட் போட்டியில் அரண்டு போன ஆஸ்திரேலிய அணி தோல்வி பயத்தில் பம்மிப் பம்மி ஆடிய போது விரேந்திர சேவாக் தன் மீள்வருகையை மீண்டும் ஒரு அற்புத சதம் (155) மூலம் நிரூபித்தார். இந்தச் சதத்தின் முக்கிய அம்சம் என்னவெனில் சேவாக் அல்லாத ஒரு இரண்டு மணி நேர ஆட்டம், அதாவது பவுண்டரியே இல்லாமல் ஒரு செஷனில் ஆடினார் சேவாக். மிகப்பெரிய இன்னிங்ஸ் அது, அதுவும் கம் பேக் இன்னிங்ஸ்... என்னை இனி அணியை விட்டு தூக்குவாயா? என்று மட்டையால் பதில் சொன்ன இன்னிங்ஸ்.

 

முன்னதாக 2004-ல் சவுரவ் கங்குலி தலைமையில் ஆஸ்திரேலியா சென்ற போது அடிலெய்ட் டெஸ்ட்டில் ஆஸி.யை இந்திய அணி அதிர்ச்சி வெற்றி பெற்றது, நன்றி, அஜித் அகார்க்கரின் 6/42 அபாரப் பந்து வீச்சு. அடுத்த போட்டி பாக்சிங் டே டெஸ்ட், மெல்பர்னில் நடைபெற்றது, முதல் நாள் ஆட்டம் ப்ளே என்றவுடன் ஆரம்பித்த அடி நிற்கவில்லை. சேவாக் 195 ரன்களை விளாசினார். சைமன் கேடிச்சை சிக்ஸ் அடித்து சதம் கண்டார். முதல் இரட்டைச் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் தன் இன்னிங்சை மந்தப்படுத்தவில்லை, தூக்கி அடித்து லாங் ஆனில் கேட்ச் ஆகி இரட்டைச் சதம் போடாமலேயே வெளியேறினார். போடப்போட அடி என்பார்களே அதுதான் இது, மே.இ.தீவுகளின் ராய் பிரெட்ரிக்ஸ் எனும் அதியற்புத அதிரடி தொடக்க வீரரின் பாக்சிங் டே சதத்துக்குப் பிறகு சேவாகின் சதம்தான் பெரியது என்று உயர்ந்த இடத்தை அளித்தது ஆஸி. நிபுணர்கள் குழுவும் ஊடகங்களும். சேவாக் குறித்த அச்சம் எழுந்தது அப்போதுதான், அதற்கு அடுத்த தொடரில்தான் முல்டானில் ஷோயப் அக்தர் அண்ட் கோ-வை உரித்தெடுத்த முச்சதம் வந்தது. ’ சக்லைன் முஷ்டாக்கை சிக்ஸ் அடித்து சதம் கண்டார் பிறகு முச்சதமும் சிக்ஸ்தான்.

அதே போல் ஒருநாள் போட்டிகளில் இலங்கையில் நடந்த தொடரில் நியூஸிலாந்துக்கு எதிராக 2001-ல் 70 பந்துகளில் சதம் கண்டு அதிசயிக்கச் செய்தார்.

இது நடந்து முடிந்த பிறகு தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் அறிமுகம் ப்ளூம்ஃபாண்டேனில் மிடில் ஆர்டரில் இறங்கி அறிமுகச் சதம் கண்டார். அதிலும் தன் லட்சிய வீரன் சச்சினுடன் ஆடினார். அதன் பிறகுதான் இங்கிலாந்தில் சவுரவ் கங்குலி மாஸ்டர் ஸ்ட்ரோக் செய்ய சேவாக் தொடக்க வீரரானார். இவரைத் தொடக்க வீரராக இறக்கிய போது அணித்தேர்வாளரில் ஒருவர், “சேவாக் 2 மணி நேரம் பேட் செய்தால் போதும் நாம் போட்டியை வென்று விடுவோம்” என்றார்.

டெஸ்ட் போட்டிகளில் 49.34 என்ற சராசரி வைத்திருந்தார். 45 க்கும் மேல் சராசரி உள்ள வீரர்கள் பொதுவாக, தொடக்க வீரர்கள் 1,2,3,4 என்று காபிபுக் ஸ்டைலில் ஆடுவார்கள் ஆனால் சேவாக் அதனை முறியடித்தார்.

 

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல ஆஃப் ஸ்பின் பவுலிங்கையும் அவர் வீசியுள்ளார். 2001-ல் பெங்களூருவில் ஆஸ்திரேலிய அணி 316 ரன்கள் இலக்கை விரட்டிய போது 174/3 என்று ஒருநாள் போட்டியை வெல்லும் நிலையில் இருந்தது, ஆனால் சேவாக், மேத்யூ ஹெய்டனை 99-ல் வெளியேற்றி, ஸ்டீவ் வாஹை எல்.பி.செய்து, டேமியன் மார்ட்டின் விக்கெட்டையும் வீழ்த்த ஆஸ்திரேலியா 60 ரன்களில் தோல்வியடைந்தது.

அதே போல் 2002 சாம்பியன்ஸ் ட்ராபி அரையிறுதியில் ஹெர்ஷல் கிப்ஸ் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா 192/1 என்று வெற்றியின் உறுதியில் இருந்த போது ஜாக் காலிஸ், மார்க் பவுச்சர், லான்ஸ் குளூஸ்னர் போன்ற அபாய வீரர்களை சேவாக் காலி செய்தார். இந்தியா வென்றது.

2002-ல் நியூஸிலாந்தில் ஒரு தொடர். சூப்பர் ஸ்டார் இந்திய வீரர்களை அவமானப்படுத்துவதற்காகவே அங்கு ஒரு குழிப்பிட்சைப் போட்டார்கள், இந்தக் குழி பிட்ச் இந்திய குழி பிட்ச் அல்ல இந்திய பேட்ஸ்மென்களை உடல் ரீதியாகக் குறிவைத்துத் தாக்கும் வேகப்பந்து குழி பிட்ச், சச்சின், திராவிட், லஷ்மன் போன்ற உத்தி மாஸ்டர்களே திணறிய அந்தத் தொடரில் சேவாக் 2 சதங்களை அபாயகரமான பவுலிங்குக்கு எதிராக அடித்ததை யாரும் மறக்க முடியாது, சேவாக் என்றால் முச்சதம் என்று நினைவில் வைத்துக் கொள்பவர்கள் நியூஸிலாந்தில் எந்த ஒரு பெரிய பேட்ஸ்மென்களும் ஆடவே முடியாத அபாயகரமான பிட்ச்களில் 2 சதங்கள் அடித்தது அவரது மனநிலையைக் காட்டுவதோடு, கிரிக்கெட்டில் உத்தியெல்லாம் ஆரம்பகாலங்களுக்குத்தான், அதன் பிறகு உயர்மட்ட அளவில் தைரியமும் மனத்தடை இல்லாத அணுகுமுறையும்தான் உதவும் என்பதை சேவாக் தவிர வேறு யார் நிரூபித்திருக்க முடியும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x