Published : 24 Aug 2018 06:41 PM
Last Updated : 24 Aug 2018 06:41 PM
முதலில் பாண்டியாவை விமர்சித்தார் மைக்கேல் ஹோல்டிங், ஆனால் பாண்டியா 5 விக்கெட்டுகளையும் ஒரு வேகமான அரைசதத்தையும் எடுத்தார். தற்போது பும்ரா புதிய பந்தில் வீச சரிப்பட மாட்டார் என்று மைக்கேல் ஹோல்டிங் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை.
பும்ரா தன் 4 டெஸ்ட் போட்டிகளில் இருமுறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பெரிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ள நிலையில் மைக்கேல் ஹோல்டிங் தேவையற்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் அவர் மீது வருத்தமடைந்துள்ளனர்.
தொலைக்காட்சியில் மைக்கேல் ஹோல்டிங் கூறும்போது, “பும்ரா புதிய பந்தில் வீசக்கூடியவர் அல்ல, அவரை இங்கிலாந்து தொடருக்கு நானாக இருந்தால் தேர்வு செய்திருக்க மாட்டேன்” என்று கூறினார்.
“நான் புதிய பந்தில் வீச பும்ராவை அழைக்க மாட்டேன். புதிய பந்தில் இஷாந்த், ஷமி கூடுதலாக ஸ்விங் செய்கின்றனர். புவனேஷ்வர் குமார் இல்லாத போது இவர்கள்தான் தொடக்கத்தில் வீச வேண்டும்.
நான் பார்த்தவரையில் பும்ரா, வைட் ஆஃப் த கிரீசிலிருந்து பந்தை உள்ளே கொண்டு வந்து பிறகு சற்றே வெளியே எடுக்கிறார் இது பழைய பந்துக்குப் பொருந்தும். பந்து பழசான பிறகே பும்ரா திறமையாக வீசுகிறார்.
இங்கிலாந்தில் அவரால் வலது கை பேட்ஸ்மென்களுக்கு இதை அவர் செய்ய முடியும். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில் இம்மாதிரி உள்ளே வந்து பந்தை வெளியே ஸ்விங் செய்ய முடியாது. ஆனால் பும்ராவின் சொத்து அவரது வேகம்” என்று கூறியுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
‘மைக்கேல் ஹோல்டிங் தன் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். இந்திய வீர்ர்களை அவர் ஒவ்வொருமுறையும் விமர்சனமோ, கேலியோ பேசுகிறார். இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் பற்றிய அவரது கருத்துகள் மிகவும் தவறாக உள்ளன. கம் ஆன் மைக்கேல், ஸ்டீவ் பக்னர் வழியில் செல்ல வேண்டாம்’ என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
இன்னொரு ட்விட்டர் வாசி, “ஹர்திக் பாண்டியா அடுத்த கபில்தேவ் இல்லை என்று ஹோல்டிங் கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பும்ராவை டெஸ்ட் போட்டிகளுக்கு எடுத்திருக்க மாட்டேன் என்று கூறுவது தர்க்கத்துக்கு ஒத்துவரவில்லை.” என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT