Published : 13 Aug 2014 12:00 AM
Last Updated : 13 Aug 2014 12:00 AM
ஜெர்மனி கால்பந்து அணியின் ஸ்டிரைக்கர் மிராஸ்லாவ் க்ளோஸ் என்றாலே, நம் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வருவது அவர் அடிக்கும் பல்டிதான் (குட்டிக்கரணம்). கோலடித்த பெரும்பாலான போட்டிகளில் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த கூடவே பல்டியும் அடித்துவிடுவார். 360 டிகிரி அளவில் உடலை சுழற்றி மிக அழகாக அவர் அடிக்கும் அந்த பல்டி, ரசிகர்களுக்கு கண்கொள்ளாக் காட்சிதான். அந்த பல்டியை ரசிப்பதற்கே ஒரு கூட்டம் இருக்கிறது.
ஜெர்மனி உலக சாம்பியனாகி உச்சத்தில் இருக்கும் நேரத்தில் சர்வதேச கால்பந்து போட்டிக்கு பிரியா விடை கொடுத்திருக்கிறார் 36 வயதான க்ளோஸ். கால்பந்துக்கு பிரசித்தி பெற்ற ஐரோப்பா கண்டத்தில் உள்ள அணிகளில் இடம்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. அப்படி இடம்பிடிக்கும் ஒவ்வொரு வீரருக்கும் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற மிகப்பெரிய கனவு இருக்கும். அந்தக் கனவு சிலருக்கு பலிக்கும், சிலருக்கு கடைசி வரை கனவாகவே போய்விடும்.
ஆனால் மிராஸ்லாவ் க்ளோஸ், ஒன்றல்ல, இரண்டல்ல… நான்கு உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி முத்திரை பதித்திருக்கிறார். இப்போது உலகக் கோப்பையை வென்றது மட்டுமின்றி, உலகக் கோப்பை போட்டியில் அதிக கோலடித்தவர் (16 கோல்கள்) என்ற சாதனையோடு தனது 14 ஆண்டுகால சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கு விடை கொடுத்திருக்கிறார் க்ளோஸ்.
8 வயதில் ஆரம்பமான பயணம்
1978-ம் ஆண்டு போலந்தில் பிறந்த க்ளோஸ் ஜெர்மனிக்காக ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். இவருடைய தந்தை ஜோசப் க்ளோஸ் கால்பந்து வீரர். தாயார் பர்பரா ஜெஸ் ஹேண்ட்பால் வீராங்கனை. 1986-ல் தனது 8-வது வயதில் ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்தார் க்ளோஸ். அப்போதுதான் அவருடைய கால்பந்து பயணமும் ஆரம்பமானது.
தனது 20-வது வயதில் தொழில் முறை கால்பந்து வீரராக உருவெடுத்த க்ளோஸ், ஜெர்மனியில் நடைபெறும் புகழ்பெற்ற கிளப் போட்டியான புந்தேஸ்லிகா போட்டியில் 2000-ல் முதல்முறையாக களமிறங்கினார். புந்தேஸ்லிகா போட்டியில் அவர் தொடர்ச்சியாக கோலடித்ததைப் பார்த்து வியந்துபோன போலந்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஜெர்ஸி இங்கேல், அவரை போலந்து அணிக்காக ஆடவைக்க முயன்றார். அதற்காக ஜெர்மனிக்கு வந்து க்ளோஸை சந்தித்து, தங்கள் நாட்டு அணிக்காக விளையாட வருமாறு அழைத்தார்.
திருப்புமுனை
ஆனால் அதை மறுத்த க்ளோஸோ, “ நான் ஜெர்மனி பாஸ்போர்ட் வைத்திருக்கிறேன். இதேபோன்று சிறப்பாக ஆடினால் ஜெர்மனி அணியில் இடம்பிடித்துவிடுவேன்” எனக் கூறிவிட்டார். சொன்னதுபோலவே அடுத்த இரண்டு மாதங்களில் ஜெர்மனிக்காக ஆடும் வாய்ப்பை பெற்றார் க்ளோஸ். அந்த அறிமுகப் போட்டிதான் அவருடைய கால்பந்து வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
2001 மார்ச் 24-ல் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் அல்பேனியாவுக்கு எதிராக அறிமுக வீரராக களம்கண்டார் க்ளோஸ். விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோலடித்திருந்த நிலையில் 73-வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராக க்ளோஸை களமிறக்கினார் அப்போதைய பயிற்சியாளர் ரூடி வாலர்.
ஆட்டம் முடிய இரு நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் க்ளோஸ் கோலடிக்க, ஜெர்மனி வெற்றி பெற்றது. அந்தத் தருணத்திலேயே ரூடி வாலரின் நம்பிக்கைக்கு உரியவரானார் க்ளோஸ். உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் எஞ்சிய ஆட்டங்களில் கலக்கிய க்ளோஸ், இஸ்ரேல் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டிகளில் ஹாட்ரிக் கோலடித்தார். 2002 உலகக் கோப்பையில் பங்கேற்ற ஜெர்மனி அணியில் நட்சத்திர வீரர் அந்தஸ்தைப் பெற்றிருந்தார்.
சோமர்சால்ட்
அந்த உலகக் கோப்பையில் 5 கோல்களை அடித்த அவர், ஒரு உலகக் கோப்பையில் அதிக கோலடித்தவர்கள் வரிசையில் 2-வது இடத்தை ரிவால்டோவுடன் பகிர்ந்து கொண்டார். அவர் அடித்த 5 கோல்களும் தலையால் முட்டி அடிக்கப்பட்டவை. இதன்மூலம் ஒரு உலகக் கோப்பையில் தலையால் முட்டி 5 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
அந்த உலகக் கோப்பையில் சவூதி அரேபியாவுக்கு எதிராக ஹாட்ரிக் கோலடித்தபோது பல்டியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய க்ளோஸ், அப்போது முதல் சோமர்சால்ட் என்றழைக்கப்படுகிறார். சோமர் சால்ட் என்றால் 360 டிகிரி அளவில் உடலை வளைத்து பல்டி அடிப்பது அல்லது ஜிம்னாஸ்டிக் செய்வது என்பது பொருள்.
சுயநலமில்லாத க்ளோஸ்
அதன்பிறகு 2006, 2010, 2014 என மொத்தம் 4 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிவிட்டார் க்ளோஸ். கடுமையான காயங்கள் ஏற்படக்கூடிய கால்பந்து விளையாட்டில் 14 ஆண்டுகளுக்கு மேல் கோலோச்சுவது அவ்வளவு எளிதல்ல. ஜாம்பவான்கள் பீலே, மரடோனா மற்றும் மெஸ்ஸி அளவுக்கு அபரிமிதமான ஆட்டக்காரர் என்று க்ளோஸை சொல்ல முடியாது. ஆனால் கால்பந்தில் பல சாதனைகள் க்ளோஸின் வசம் உள்ளன. இது எப்படி சாத்தியமானது என்றால், க்ளோஸின் ஒழுக்கமும், சுயநலமற்ற ஆட்டமும்தான்.
அனல் பறக்க ஆடும் கால்பந்து விளையாட்டில் சிலர் அபாயகரமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். சிலர் ஆக்ரோஷமாக ஆடுகிறார்கள். சிலர் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். லூயிஸ் சுரேஜ் போன்றவர்கள் சகவீரரின் காதையே கடிக்கிறார்கள். ஆனால் க்ளோஸ் மைதானத்தில் எப்போதுமே சாந்தமாக இருந்தவர்.
கால்பந்தில் பெரும்பாலான வீரர்கள் தாங்களே கோலடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் க்ளோஸ் மாறுபட்டவர். அணியின் நலனுக்கே முக்கியத்துவம் அளிப்பவர். சகவீரர்களுக்கு கோலடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர். அதனால்தான் அப்போதைய பயிற்சியாளர் வாலரில் தொடங்கி தற்போதைய பயிற்சியாளர் ஜோசிம் வரை எல்லோருக்கும் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார். சகவீரர்களாலும் மிகவும் நேசிக்கப்பட்டவர்.
சாதனை மன்னன்
அதேநேரத்தில் கோல் கம்பத்தின் முன்னாலேயே வட்டமடிக்கும் க்ளோஸ், பந்து எப்போது தன்னிடம் வந்தாலும் சரியாக கோலாக்கிவிடுவார். அதனால்தான் சர்வதேச போட்டிகளில் அதிக கோலடித்த ஜெர்மனி வீரர், உலகக் கோப்பையில் அதிக கோலடித்தவர், 4 உலகக் கோப்பைகளில் விளையாடி அவையனைத்திலும் கோலடித்த 3-வது வீரர், 4 உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாடிய ஒரே வீரர் போன்ற சாதனைகள் அவருக்கு சாத்தியமாயின.
அணியின் நலனுக்காக ஆடியவர்
உலகக் கோப்பையில் அதிக கோலடித்தவர் என்ற சாதனையை படைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த க்ளோஸ், “ஜெர்மனி உலகக் கோப்பை வெல்லாமல் போனால் இந்த சாதனையால் எந்த பயனும் இல்லை” என்று சொன்னார். அவர் அணியின் நலனுக்கு முன்னுரிமை அளித்தார் என்பதற்கு மேற்கண்ட வரிகளே சாட்சி.
உலகக் கோப்பையின் இறுதியாட்டத்தில் மிக பரபரப்பான தருணத்தில் மைதானத்தில் இருந்து வெளியேறியபோதும் கூட அவர் நடுவரிடம் கை குலுக்க மறக்கவில்லை. எங்கேயோ நின்ற நடுவரை தேடிச்சென்று கை குலுக்கிய பின்னரே வெளியேறினார். இந்த ஆட்டத்தில்கூட அவர் கோலடிக்காவிட்டாலும், அவருக்குப் பதிலாக மாற்று வீரராக களமிறங்கிய கோட்ஸேதான் கோலடித்தார்.
கனவு நனவானது
ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கும் க்ளோஸ், “பிரேசிலில் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தனது சிறு வயது கனவு நனவாகிவிட்டது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். 2002 உலகக் கோப்பையின் இறுதியாட்டத்தில் பிரேசிலிடம் தோற்று கோப்பையை இழந்த ஜெர்மனி, இப்போது பிரேசில் மண்ணில் உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. கால்பந்துக்கு பெயர்பெற்ற பிரேசில் மண்ணில் உலகக் கோப்பையை வென்றதன் மூலம் கனவு நனவாகிவிட்ட மகிழ்ச்சியில் சர்வதேச கால்பந்துக்கு விடை கொடுத்திருக்கிறார்.
ராசியான ராஜா
ஜெர்மனிக்காக க்ளோஸ் விளையாடிய 14 ஆண்டுகளில் அவர் கோலடித்த எந்தப் போட்டியிலும் ஜெர்மனி தோற்றதில்லை. ஆம், இந்த ராசியான ராஜா இனி சர்வதேச போட்டிகளில் ஆடமாட்டார், அவர் பல்டியடிப்பதைப் பார்த்து மகிழ முடியாது என்பது ஜெர்மனி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலக கால்பந்து ரசிகர்களுக்கும் இழப்புதான். காலத்தின்போக்கில் கால்பந்தில் க்ளோஸ் படைத்த சாதனைகள் வேண்டுமானால் முறியடிக்கப்படலாம்.
ஆனால் அவர் ஆடிய ஜென்டில்மேன் ஆட்டத்தையும், அவர் அடித்த பல்டிகளையும் யாராலும் மறக்க முடியாது. கால்பந்து வாழும் வரை பெயருக்கேற்றாற்போலவே ரசிகர்களின் மனதில் மிக ‘க்ளோஸ்’ ஆக (நெருக்கமாக) இருப்பார். உண்மையிலேயே மிராஸ்லாவ் க்ளோஸ் ஓர் அதிசய மனிதன்தான் (‘மிராக்கிள் மேன்’).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT