Last Updated : 25 Aug, 2018 04:21 PM

 

Published : 25 Aug 2018 04:21 PM
Last Updated : 25 Aug 2018 04:21 PM

செரீனாவின் ‘பிளாக் பாந்தர்’ ஆடைக்குத் தடை: பிரெஞ்ச் ஓபன் நிர்வாகம் உத்தரவு

2019-ம் ஆண்டு நடக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கவர்ச்சிகரமான பிளாக் பாந்தர் ஆடை அணியக்கூடாது என்று ‘பிரெஞ்சு ஓபன்’ டென்னிஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிகவும் புகழ்பெற்றது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியாகும். பாரீஸ் நகரில் களிமண் தரையில் நடக்கும் இந்தப் போட்டியில் விளையாடி பட்டம் வெல்வது மிகக் கடினம்.தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்கள் கூட களிமண் தரையில் விளையாடும்போது நிலைகுலைந்து விடுவார்கள்.

இந்த வகையில் களிமண்தரையில் சிறப்பாக விளையாடக் கூடியவர் மகளிர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். குழந்தை பிறப்புக்குப் பின் பின் ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின் இந்த ஆண்டு பிரஞ்சு ஓபனில் விளையாடினார். ஆனால், பட்டம் வெல்லாமல் காயம் காரணமாக வெளியேறினார்.

ஆனால், இந்த ஆண்டு செரீனா விளையாட வந்திருந்த போது, அவர் அணிந்திருந்த ஆடை ‘பிளாக் பாந்தர் கேட் சூட்’ எனச் சொல்லப்படும் ஆடை அனைவரையும் ஈர்த்தது. விளையாடும் போது, செரீனாவின் ஆட்டத்தைப் பார்த்தவர்களைக் காட்டிலும் ஆடையின் மீது ரசிகர்களுக்குக் கவனம் சென்றது.

பிரெஞ்சு ஓபன் போட்டியில் செரீனா அணிந்திருந்த ‘பிளாக் பாந்தர்’ ஆடை பரவலாகப் பேசப்பட்டது. ஹாலிவுட் திரைப்படமான பிளாக் பாந்தரில் வாரியர் பிரின்சஸ் போன்று உடை அணிந்து செரீனா வந்துள்ளார் என்று பேசப்பட்டது.

இது குறித்து செரீனா வில்லியம்ஸிடம் கேட்டபோது, விளையாட்டுக்காக இந்த கறுப்பு ஆடை அணிந்தேன், இருக்கமாக ஆடை அணிவதால், ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்தக் காரணத்தை ஏற்க மறுத்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் நிர்வாகம், 2019-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபனில் செரீனா பிளாக் பாந்தர் ஆடை அணியக் கூடாது என்று தடை விதித்தது.

இது குறித்து பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் நிர்வாகத்தின் தலைவர் பெர்நார்ட் ஜியுடிசில் கூறுகையில், செரீனா வில்லியம்ஸ் அணிந்திருந்த பிளாக் பாந்தர் ஆடை அடுத்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனுக்கு அனுமதிக்கப்படாது. இந்த ஆடையால் போட்டியின் ஒழுங்கு முறைகள் மீறப்படுகின்றன.

ஒவ்வொருவரும் போட்டியை மட்டுமே கண்டு ரசிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் கண்ணைக் கவரும் ஆடைகள், உடலை இறுக்கமாகப் பிடிக்கும் ஆடைகள் அணிவதற்குத் தடைவிதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x