Published : 19 Aug 2018 06:05 PM
Last Updated : 19 Aug 2018 06:05 PM

ரிஷப் பந்த்தை வீழ்த்திவிட்டு வார்த்தைகளை உதிர்த்த பிராட்: இந்தியா 329 ரன்களுக்கு ஆல் அவுட்

நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 307/6 என்று 2ம் நாளில் தொடங்கிய இந்திய அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

ரிஷப் பந்த் முதல்நாள் ஆட்டத்தில் 22 நாட் அவுட் என்று இருந்தவர் இன்று 2 ரன்கள் மட்டுமே சேர்த்து 24 ரன்களில் பிராடின் சோதனை தரும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகும் லைன் பந்தை காலை நகர்த்தாமல் மட்டையை மட்டும் தொங்க விட்டு ஆடப்பார்த்தார், பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது.

அதுவரை அருமையாக பந்துகளை ஆடாமல் விட்டுவந்த பந்த், தடுப்பாட்டத்திலும் நல்ல நிதானத்தையும் இறுக்கத்தையும் காட்டினார், ஆனால் ஒரு பந்து அவரைப் பதம் பார்த்தது, தவறு அவருடையதுதான். ஆனால் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தவுடன் ஸ்டூவர்ட் பிராட் அவரிடம் சில வார்த்தைகளைக் கூறினார், அவரது முகபாவத்தை வைத்துப் பார்த்தபோது விஷமமான வார்த்தைகளா, அல்லது வாழ்த்தினாரா என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் இதுவும் ஒரு வழியனுப்புதலே, ஆட்ட நடுவர் கவனத்தில் கொள்வாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

ரவிச்சந்த்திரன் அஸ்வின் 3 பவுண்டரிகளையும் தேர்ட்மேன் திசையிலேயே அடித்து 14 ரன்கள் எடுத்து பிராடின் இன்ஸ்விங்கருக்கு ஸ்டம்புகளை இழந்தார். மொகமது ஷமி, பும்ரா ஆகியோரை ஆண்டர்சன் அடுத்தடுத்த பந்துகளில் காலி செய்ய இந்திய அணி 94.5 ஓவர்களில் 329 ரன்களுக்குச் சுருண்டது. வோக்ஸ், பிராட், ஆண்டர்சன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரஷீத் கோலியை வீழ்த்தினார்.

இங்கிலாந்து உணவு இடைவேளையின் போது 9 ஓவர்கள் முடிவில் 46 ரன்களுக்கு விக்கெட் விழாமல் ஆடி வருகிறது. ஸ்லிப்பில் பந்து இடையில் புகுந்து போனாலும் வேடிக்கைப் பார்க்கின்றனர் இந்திய வீரர்கள். ஸ்லிப் திசையில் நிற்கும் போது துணைக்கண்டத்தில் நிற்பது போல் இருகைகளையும் கால்முட்டியில் ஊன்றக்கூடாது என்று பலரும் பலமுறை அறிவுறுத்தியும் அப்படித்தான் நிற்கிறார்கள், இதனால் ஒரு பந்து கேட்ச் பிடிக்கும் உயரத்தில் ரஹானே, ராகுல் வேடிக்கைப் பார்க்க இடையில் புகுந்து பவுண்டரி சென்றது. டைவ் அடித்துக் கேட்ச் பிடிக்க வேண்டிய பந்து அது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x