Published : 31 Aug 2018 04:28 PM
Last Updated : 31 Aug 2018 04:28 PM
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஹெப்டத்லான் பிரிவில் முதன்முதலாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தவர் ஸ்வப்னா பர்மன். கடுமையான கால் வலியால் அவதிப்பட்ட அவர், 6 விரல்கள் கொண்ட தனது கால்களுக்கு யாராவது பிரத்யேகக் காலணிகள் தயாரித்துக் கொடுப்பார்களா என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த 'ஐசிஎஃப்' நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த 'நைக்' நிறுவனத்துடன் இணைந்து பிரத்யேக ஷூக்களைத் தயார் செய்து ஸ்பான்ஸர் செய்ய உள்ளது.
யார் இந்த ஸ்வப்னா பர்மன்?
21 வயதான ஸ்வப்னா மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். ரிக்ஷா ஓட்டிய தந்தை, மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்தார். தாயின் வருமானம் தந்தையைக் கவனிப்பதிலேயே போனது. அண்ணன் கூலி வேலை செய்து, கொண்டுவரும் பணத்தில்தான் சாப்பாடு, பயிற்சி எல்லாமே.
கடுமையான பயிற்சிக்குப் பிறகு புவனேஸ்வரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டி ஹெப்டத்லான் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதால், நேரடியாக ஆசிய தடகளப் போட்டிக்குத் தேர்வு பெற்றார்.
போட்டிக்கு முந்தைய நாள் கடுமையான பல்வலியால் அவதிப்பட்டார் ஸ்வப்னா. வலி நிவாரணி மருந்துகள் எடுத்தால் ஊக்க மருந்துப் பிரச்சினை ஏற்படும் என்பதால் அதைத் தவிர்த்தார். போட்டி நாளில் வலி அதிகமாக, தாடையை இறுக்கி பிளாஸ்திரி ஒட்டினார் ஸ்வப்னா. கால் வலியுடனும் பல் வலியுடனும் விளையாடி ஹெப்டத்லானில் 6,026 புள்ளிகள் பெற்று இந்திய அளவில் புதிய சாதனை படைத்தார்.
ஹெப்டத்லான் விளையாட்டு
100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 800 மீ. ஓட்டம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய 7 போட்டிகள் அடங்கிய தொகுப்பு விளையாட்டே ஹெப்டத்லான்.
கால்வலியால் அவதிப்பட்ட ஸ்வப்னா
ஸ்வப்னாவின் இரு கால்களிலும் 6 விரல்கள் இருப்பதால், ஷூ அணிய முடியாமல் கடுமையாக அவதிப்பட்டார் ஸ்வப்னா. காலின் ஆறாவது விரலை நீக்கிவிட்டு விளையாடுமாறு பலர் அறிவுரை கூறினர். ஆனால் தன்னுடைய அடையாளத்தை இழக்க ஸ்வப்னா விரும்பவில்லை.
ஆறாவது விரலுடனேயே உறுதியுடன் போராடி நாட்டுக்காகத் தங்கம் வென்றார் ஸ்வப்னா. அடுத்த சில மணி நேரத்தில் தனக்கான பிரத்யேக ஷூக்களைத் தயாரித்து அளிக்க யாராவது முன்வரவேண்டும் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ஐசிஎஃப் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த நைக் நிறுவனத்துடன் இணைந்து பிரத்யேக ஷூக்களைத் தயார் செய்து ஸ்பான்ஸர் செய்ய உள்ளது.
இதுகுறித்துப்பேசிய மூத்த ஐசிஎஃப் அதிகாரியொருவர், ''ஐசிஎப்பின் விளையாட்டு பிரிவு 'நைக்' நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த 3 நாட்களில் ஸ்வப்னாவுக்கு 6 ஜோடி பிரத்யேகக் காலணிகளை அனுப்ப உள்ளோம். ஸ்வப்னாவுக்கும் ரெயில்வேக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், நாட்டுக்கே பெருமை சேர்த்தவருக்கு காலணிகளை வழங்குவதில் ஐசிஎஃப் பெருமை கொள்கிறது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT