Published : 22 Aug 2018 06:36 PM
Last Updated : 22 Aug 2018 06:36 PM
டிரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலியின் அருமையான இன்னிங்ஸ்கள், கேப்டன்சி, பும்ராவின் அபாரப் பந்து வீச்சு ஆகியவற்றினால் இந்திய அணி ஒரு அரிய அயல்நாட்டு வெற்றியைப் பெற்றது.
ஆனால் தென் ஆப்பிரிக்காவில் ஜொகான்னஸ்பர்க் வெற்றியை அடுத்து அடுத்த தொடரிலேயே இரண்டு தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் வெற்றி சாதித்துள்ள கோலி தொடரை வெல்ல வழி திறந்துள்ளார்.
இந்நிலையில் தாதா கங்குலி கேப்டன்சி சாதனையைக் கடந்துள்ளார் விராட் கோலி, அதாவது 21 டெஸ்ட் போட்டிகளில் தாதா கங்குலி தலைமையில் இந்தியா வென்றுள்ளது, தற்போது கோலி தலைமையில் 22 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது, முன்னாள் வெற்றிக் கேப்டன் தோனி 27 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளார்.
ஆகவே தோனியை முறியடிக்க கோலிக்கு இன்னும் 6 வெற்றிகளே தேவை, அப்போது இந்தியாவின் சிறந்த கேப்டனாக கோலி ஆகிவிடுவார்.
மேலும் இந்திய அணி கேப்டனாக 35 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது பணியாற்றிய கேப்டன்களில் கோலியின் வெற்றி தோல்வி விகிதம் 3.14. இது 3வது சிறந்த நிலையாகும்.
இதற்கு முன்பாக 1986-ல் ஹெடிங்லீயில் 279 ரன்களில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது இந்திய அணி. அதன் பிறகு தற்போது 203 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி அங்கு கிட்டியுள்ளது. இந்தியாவில் விசாகப்பட்டிணத்தில் 246 ரன்களில் இங்கிலாந்தை வீழ்த்தியதும் பெரிய வெற்றியாகும்.
தொடரில் 0-2 என்று பின்னிலைக்குப் பிறகு 3வது போட்டியை 200 க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இது 6வது நிகழ்வாகும். இலங்கைக்கு எதிராக 2000-, ஆண்டு 2 டெஸ்ட்களில் தோல்வியுற்ற பிறகு பாகிஸ்தான் இலங்கையை 222 ரன்களில் வென்றது. இந்தியா இதே சாதனையை இருமுறை இந்தியாவுக்கு வெளியே சாதித்துள்ளது.
முதல் 2 டெஸ்ட்களில் தோல்வியடைந்த பிறகு 3வது டெஸ்ட் போட்டியை இந்தியா 5வது முறையாக வென்றுள்ளது. கடந்த தென் ஆப்பிரிக்கா தொடரிலும் இதைச் செய்த இந்திய அணி இதற்கு முன்னர் 1974-75ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவில் 1977-78 மற்றும் 2007-08 தொடரிலும் இந்திய அணி இப்படி வென்றுள்ளது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 19 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டியில் கைப்பற்றியுள்ளமை 2வது அதிகமாகும். வாண்டரர்ஸில் 20 விக்கெட்டுகளை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் கைப்பற்றினர்.
டிரெண்ட் பிரிட்ஜில் இங்கிலாந்து தொடர்ச்சியாக 2வது முறை தோல்வி அடைகிறது, கடந்த முறை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 340 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வி கண்டது. இதற்கு முன்னர் இதே மைதானத்தில் 7 போட்டிகளில் இங்கிலாந்து 6-ல் வென்று, ஒன்றை டிரா செய்துள்ளது.
ஆசியாவுக்கு வெளியே 5 இந்திய கேப்டன்கள் 5 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளனர். இது ஜிம்பாபவே நீங்கலாக. இதில் கபில்தேவ் (இருமுறை: ஒன்று அடிலெய்ட் 1985-86, பிறகு 1986 லார்ட்ஸ்), சச்சின் டெண்டுல்கர் மெல்போர்னில் 1999-00 தொடரில் கேப்டனாக ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2003-04 ஆஸி.தொடரில் பிரிஸ்பனில் தாதா கங்குலி கேப்டனாக ஆட்ட நாயகன் விருது பெற்றார். ராகுல் திராவிட் கிங்ஸ்டனில் 2006ம் ஆண்டு ஆட்ட நாயகன் விருதை கேப்டனாகத் தட்டிச் சென்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT