Published : 27 Aug 2018 09:06 PM
Last Updated : 27 Aug 2018 09:06 PM
1996 உலகக்கோப்பையை வென்று இலங்கை அணி தங்களை எதிர்கொண்டு ஆட்கொள்ள வேண்டிய சக்தியாக உலக அணிகளுக்குச் சவால் விடுத்துக் கொண்டிருந்த தருணம். ரணதுங்கா கேப்டன்சியில் பிரமாதமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த காலம்.
மேலும், இலங்கை அணியைக் கண்டாலே அனைவருக்கும் ஒரு பயம் கலந்த எரிச்சலும், தேவையற்ற ஏளனமும் இருந்த காலக்கட்டம். ஜெயசூரியா, ரொமேஷ் கலுவிதரன, அரவிந்த டிசில்வா ஆகியோர் எதிரணியை கதிகலங்கச் செய்து கொண்டிருந்தனர், பந்து வீச்சில் முரளிதரன் ஒரு பேரச்சுறுத்தலாகத் திகழ்ந்த காலம். அப்போது உலகக்கோப்பையை வென்று 2 ஆண்டுகள் ஆனபின்பு கூட இலங்கையை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அழைக்கவில்லை, ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்கு அழைத்தது.
ஏனெனில் இந்தத் தொடருக்கு முன்பாகத்தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்று பின் நிலையிலிருந்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதனால் வீரர்களும் உண்மையில் களைப்படைந்தே இருந்தனர்.
லண்டன் ஓவலில் ஆகஸ்ட் 27ம் தேதி இந்த டெஸ்ட் தொடங்கி கடைசியில் இங்கிலாந்தைப் புரட்டி எடுத்து அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் வெற்றியைப் பெற்றது இலங்கை. சனத் ஜெயசூரியா 213 ரன்களையும் அரவிந்த டி சில்வா 152 ரன்களையும் எடுக்க முரளிதரன் 220 ரன்களுக்கு 16 இங்கிலாந்து விக்கெட்டுகளைக் கைப்பற்ற முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைக் குவித்த இங்கிலாந்து ஒரே டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 445 ரன்கள் எடுக்க இலங்கை அணி 591 ரன்கள் குவித்து அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 181 ரன்களுக்குச் சுருண்டது, முத்தையா முரளிதரன் 65 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளைச் சாய்த்தார். வெற்றிக்குத் தேவையான 37 ரன்களை 5 ஓவர்களில் ஜெயசூரியா முடித்தார்.
அந்தப் போட்டிகுறித்து அதே நாளான இன்று தி கிரிக்கெட் மந்த்லி இதழுக்காக நடந்த கலந்துரையாடலில் இலங்கை, இங்கிலாந்து அணி வீரர்கள் அந்தப் போட்டியை நினைவு கூர்ந்தனர்.
இதில் ஜெயசூரியா கூறியதாவது:
அப்போது எங்களுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுவதைக் கூட நேர விரயம் என்று இங்கிலாந்து நினைத்தது போலும். நாங்கள் ஏதோ பித்துப் பிடித்த நபர்கள் என்றும் அனாயாச மட்டை சுழற்றிகள், கன்னாபின்னாவென்று அடிப்பவர்கள் என்ற பெயர் இருந்தது, ஆனால் எங்களுக்கு அது அப்படியல்ல.
இந்தப் போட்டிக்கு முன்பாக நான் சரியாக ஆடவில்லை. என்னுடைய பார்ம் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக இருந்தது. ஆனால் கேப்டன், துணை கேப்டன் என் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தனர். இங்கிலாந்து அணியினரும் என்னை வெறும் அனாயாச மட்டைச் சுழற்றி, டெஸ்ட் போட்டிகளில் தாங்க மாட்டார் என்றெல்லாம் கருத்து கூறிவந்ததும் எனக்கு உத்வேகமூட்ட இந்த டெஸ்ட்டில் நிரூபிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
நல்ல கிரிக்கெட்டை ஆடினோம், உண்மையான கிரிக்கெட் ஷாட்களை ஆடினோம். துணைக்கண்டத்தில் ஏதாவது புதியன எழுந்தால் அவர்கள் உடனே வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். ஆனால் நாம் செய்வதையே அவர்கள் திரும்பிச் செய்யும் போது அது உடனடியாக ‘பெரிய விஷயம்’ என்று பேசப்படும். அவற்றையெல்லாம் நாம் மண்டையில் ஏற்றிக் கொள்வதில்லை. எங்கள் பணி அவர்களைப் புண்படுத்தும் விதமாக பந்துகளை அடிக்க வேண்டும் என்பதே.
தாறுமாறாகவெல்லாம் அடிக்கவில்லை. நல்ல பந்து வீச்சுக்கு மரியாதை கொடுத்துத்தான் ஆடினோம். அந்தப் பிட்சில் பவுன்ஸ் கணிக்க முடியாததாக இருந்தது. அரவிந்த டி சில்வாவின் பலம் புல் ஷாட், அவர் அதனை ஆடிக்கொண்டேயிருந்தார். ஒரு பக்கத்தில் நீளமான பவுண்டரி அந்த பவுண்டரியை கிளியர் செய்வது கடினம். நான் அப்போதெல்லாம் சிங்கிள் எடுத்து டிசில்வாவிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுத்து விடுவேன். காஃப் என் கால்களுக்குள் பந்தை ஸ்விங் செய்து கொண்டிருந்தார். நான் அவற்றை நிதானமாகவே எதிர்கொண்டேன்.
அரவிந்த டி சில்வா, என்ன மாதிரியான பேட்ஸ்மென். ஒரே பந்தில் அவர் சிங்கிளுக்கும் ஆடுவார், அதே பந்தை பவுண்டரிக்கும் அனுப்புவார், அவர் போன்ற ஒரு திறமைசாலி இருந்ததில்லை இனியும் எங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை.
இவ்வாறு ஜெயசூரியா அந்த டெஸ்ட் போட்டியை நினைவுகூர்ந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT