Published : 16 Aug 2018 09:05 AM
Last Updated : 16 Aug 2018 09:05 AM
ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா துப்பாக்கி சுடுதலில் இதுவரை பெரிய அளவில் சாதித்தது இல்லை. இதுவரை நடைபெற்றுள்ள தொடர்களில் இந்தியா ஒட்டுமொத்தமாக 49 பதக்கங்களையே பெற்றுள்ளது. இதில் 7 தங்கம், 17 வெள்ளி, 25 வெள்ளிப் பதக்கம் அடங்கும்.
ஆடவர் பிரிவில் இந்தியா 7 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் ஒட்டுமொத்தமாக பதக்கம் வேட்டையாடிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது சீனா தான். சீனா மொத்தம் 395 பதக்கங்களை வேட்டையாடி உள்ளது. இதில் 197 தங்கம், 120 வெள்ளி, 78 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இந்த வரிசையில் சீனாவை விட இந்தியா பின்தங்கி 8-வது இடத்திலேயே உள்ளது.
இம்முறை இந்திய ஆடவர் அணியில் ரைபிள் பிரிவில் சஞ்ஜீவ் ராஜ்புத், அகில் ஷியோரன் (50 மீட்டர் ரைபிள் த்ரி பொசிஷன்ஸ்), ரவி குமார், தீபக் குமார் (10 மீட்டர் ஏர் ரைபிள்), ஹர்ஜிந்தர் சிங், அமித் குமார் (300 மீட்டர் ஸ்டான்டர்டு ரைபிள் த்ரி பொஷிசன்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதேவேளையில் பிஸ்டல் போட்டிக்கான அணியில் அபிஷேக் வர்மா, சவுரப் சவுத்ரி (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), சிவம் சுக்லா, அனிஷ் பன்வாலா (25 மீட்டர் ரேப்பிடு பையர் பிஸ்டல்) ஆகியோரும், ஷாட் கன் பிரிவில் லக் ஷய் ஷியரோன், மனவ்ஜித் சிங் சாந்து (ட்ராப்), ஷீராஸ் ஷெய்க், அங்காத்வித் பஜ்வா (ஸ்கீட்), அங்குர் மிட்டல், ஷர்துல் விஹான் (டபுள் ட்ராப்) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலி யாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி யில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா 7 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங் களைக் கைப்பற்றியிருந்தது. இதனால் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்திய அணி சிறப்பாக செயல்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை யில் இம்முறை ஆசிய விளையாட்டில் துப்பாக்கிச் சுடுதலில் தனிபர் போட்டிகள் மட்டுமே இடம்பெறுவது இந்தியாவுக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
ஏனெனில் சமீபகாலமாக சர்வதேச போட்டிகளில் அணிகள் பிரிவில் இந்தியா சிறந்த பங்களிப்பு செய்துள்ளது.
ஆடவர் பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களில் சஞ்ஜீப் ராஜ்புத், மனவ்ஜித் சிங் சாந்து ஆகியோர் 6-வது முறையாக ஆசிய விளையாட்டு தொடரில் பங்கேற்க உள்ளனர். இவர்களைத் தவிர அணியில் இடம் பெற்றுள்ள மற்றவர்கள் ஆதிக்க போக்குடன் செயல்படும் சீனாவுக்கு சவால் கொடுக்கக்கூடிய இளம் வீரர்களே. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ரவி குமார், தீபக் குமார் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.
இதேபோல் ஏர் பிஸ்டல் பிரிவில் அபிஷேக் வர்மா, சவுரப் சவுத்ரி, அனிஷ் பன்வாலா ஆகியோர் மீது அதிக எதிர் பார்ப்பு உள்ளது. ஷாட் கன் பிரிவிலும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரர்கள் உள் ளனர். எனினும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வது அவ்வளவு எளிதானது அல்ல. கடும் சவால் அளிக்கக்கூடிய போட்டியாளர்களுக்கு இடையே தங்கம் வென்றால் அது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான சிறந்த முன் தயாரிப்பாக இருக்கும்.
முன்னாள் கடற்படை வீரரான சஞ்ஜீவ் ராஜ்புத் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் முக்கியமான வீரராக உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் த்ரி பொஷிசன்ஸ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் 2014-ம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றியிருந்தார். 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 1200-க்கு 1170 புள்ளிகள் குவித்து தேசிய சாதனை நிகழ்த்தி 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
2011-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் த்ரி பொஷிசன்ஸ் பிரிவில் தங்கம் வென்று அசத்தியிருந்தார் சஞ்ஜீவ் ராஜ்புத். கடந்த முறை தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இம்முறை தங்கப் பதக்கம் வெல்லும் முனைப்புடன் உள்ளார்.
42 வயதான மனவ்ஜித் சிங் சந்து, ட்ராப்பில் முன்னாள் உலக சாம்பியன் ஆவார். ஆசிய விளையாட்டு போட்டியில் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், அணிகள் பிரிவில் 4 பதக்கங்களும் வென்றுள்ளார். ஆசிய கண்டங்களுக்கு இடையிலான போட்டியில் எந்த வகையில் பதக்கம் வெல்வது என்பதை அறிந்து வைத்திருப்பவராக மனவ்ஜி சிங் கருதப்படுகிறார்.
இந்திய அணியில் இடம் பிடித்த ஒரு வருடத்துக்குள்ளேயே 15 வயதான அனிஷ் பன்வாலா, கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன்மூலம் இளம் வயதில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருந்தார். 25 மீட்ர் ரேப்பிடு பையர் பிரிவில் சிறப்பாக செயல்படும் திறன் கொண்ட அனிஷ் பன்வாலா கடந்த 2017-ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சுடுதலில் இந்திய மகளிர் அணியில் ரைபிள் பிரிவில் அஞ்சும் மவுத்கில், காயத்ரி (50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ்), அபுர்வி சண்டிலா, இளவேனில் வாளறிவன் (10 மீட்டர் ஏர் ரைபிள்) ஆகியோரும், பிஸ்டல் பிரிவில் மனு பாகர், ஹீனா சித்து (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), ராகி சர்னோபத், மனு பாகர் (25 மீட்டர் பிஸ்டல்) ஆகியோரும் ஷாட் கன் பிரிவில் ஸ்ரேயாஷி சிங், சீமா தோமர் (ட்ராப்), கனேமத் சேகோன், ரஷ்மி ரத்தோர் (ஸ்கீட்), ஸ்ரேயாஷி சிங், வர்ஷா வர்மன் (டபுள் ட்ராப்) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா மகளிர் பிரிவில் இதுவரை தங்கப் பதக்கம் வென்றது இல்லை. இதுவரை இந்தியா 4 வெள்ளி, 6 வெண்கல பதக்கங்களே கைப்பற்றி உள்ளது. ஆனால் இம்முறை ஆடவர் பிரிவுக்கு எந்த வகையிலும் சளைக்காத வகையில் மகளிர் அணி சவால் கொடுக்கக்கூடியதாக அமைந்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியும், ஒலிம்பிக் போட்டியும் இந்திய வீராங் கனைகளுக்கு கடும் சோதனைகளாக இது வரை இருந்து வந்துள்ளது. இருப்பினும் இம்முறை ஹரியாணாவைச் சேர்ந்த 16 வயதான மனு பாகர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஜூனியர், சீனியர் உலகக் கோப்பை மற்றும் கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டி ஆகியவற்றில் தங்கப் பதக்கம் வென்றுள்ள மனு பாகர், அதே திறனை ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெளிப்படுத்தும் பட்சத்தில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.
இதேபோல் காமன்வெல்த் போட்டியில் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சீனியர் வீராங்கனையான ஹீனா சித்துவும் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார். இதேபோல் 18 வயதான இளவேனில் வாளறிவனிடம் இருந்தும் சிறந்த திறன் வெளிப்படக்கூடும் என கருதப்படுகிறது.
அகமதாபாத்தைச் சேர்ந்த ஏர் ரைபிள் வீராங்கனையான இளவேனில் கடந்த ஆண்டு தேசிய அணிக்கான தேர்வின் போது உலக சாதனையை சமன் செய்து அனைவரையும் பிரம்மிக்க வைத்திருந்தார். இதன் பின்னர் சிட்னியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரில் உலக சாதனையை முறியடித்து தங்கம் வென்றார். இவர்களுடன் 26 வயதான ட்ராப் மற்றும் டபுள் ட்ராப் பிரிவு வீராங்கனையான ஸ்ரேயாஷி சிங் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. இவர்கள் 4 பேரும் இம்முறை சீன வீராங்கனைகளுக்கு கடும் சவால் கொடுத்து தங்கப் பதக்கத்தை வெல்வதில் முனைப்பு காட்டுவார்கள் என கருதப்படுகிறது.
242.5 இந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாகர் 242.5 குவித்து உலக சாதனை படைத்திருந்தார்.
2014 பல் அறுவை சிகிச்சை நிபுணரான ஹீனா சித்து கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி துப்பாக்கி சுடுதல் உலக தரவரிசை பட்டியலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருந்தார். மேலும் 2013-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் உலகக் கோப்பையில் இந்தப் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்திருந்தார்.
96 கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான டபுட் ட்ராப் பிரிவில் ஸ்ரேயாஷி சிங் 96 புள்ளிகள் குவித்து மிரட்டினார். இதே பிரிவில் ஆஸ்திரேலியாவின் எமா காக்ஸூம் 96 புள்ளிகள் சேர்க்க இறுதியில் ஷூட்-ஆப் முறையில் 2-1 என்ற கணக்கில் ஸ்ரோஷி சிங் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT