Published : 05 Aug 2018 01:01 PM
Last Updated : 05 Aug 2018 01:01 PM
சிறு இலக்குகளை 4வது இன்னிங்ஸில் விரட்டுவது என்பது ஒர் இரண்டக மனோநிலையை எப்போதும் தோற்றுவிக்கும். பந்து வீச்சை அடித்து நொறுக்குவதா? அல்லது இன்னிங்ஸை கட்டமைப்பதா போன்ற பிரச்சினைகள் சவால்தான்.
அழுத்தம் முழுதும் பேட்டிங் அணிக்குத்தான், பவுலிங் அணி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற ரீதியில் அணுகும். ரன்களை சுலபமாக எடுக்கவிடாமல் செய்யும். அதுவும் பிட்சில் பவுலிங்கிற்குச் சாதக அம்சங்கள் இருக்கும் போது குறைந்த ரன் எண்ணிக்கை எவ்வளவு பெரிய அணிக்குமே சவால்தான்.
இப்படித்தான், 1997 மே.இ.தீவுகள் தொடரில் வெறும் 120 ரன்கள் இலக்கை எடுக்க முடியாமல் இந்திய அணி 81 ரன்களுக்குச் சுருண்டு அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
கர்ட்லி ஆம்புரோஸ், இயன் பிஷப், பிராங்க்ளின் ரோஸ் ஆகியோர் வீச லஷ்மன் மட்டுமே இரட்டை இலக்கத்தை எட்டினார். அப்போது வெங்கடேஷ் பிரசாத் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியை வெற்றி நிலைக்குக் கொண்டு வந்தார், ஆனால் குறைந்த இலக்கில் இந்திய அணி தோற்றது.
இந்நிலையில் அந்தப் போட்டி குறித்தும், நேற்று எட்ஜ்பாஸ்டன் தோல்வி குறித்தும் வெங்கடேஷ் பிரசாத் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறியதாவது:
அப்போது ஆம்புரோஸ் பந்து வீசியபோது பேட்டிங் முனையில் ஒரு இடம் மிகவும் மோசமாக பிட்ச் இருந்தது. சில பந்துகள் அபாயகரமாக எழும்பியது சில பந்துகள் காலுக்கு அடியில் சென்றன. ஆம்புரோஸ் பவுலிங் வீசாத இன்னொரு முனையிலிருந்து நாங்கள் அடித்து ஆடியிருக்க வேண்டும். வலுவான பேட்டிங் வைத்திருந்தோம் அடித்து ஆடாததால் தோல்வி ஏற்பட்டது.
இப்போது பர்மிங்ஹாமிலும் 200 ரன்களுக்குக் கீழான இலக்கை விரட்டும் போது சேவாக் இருந்திருந்தால் நிச்சயம் ஆட்டம் வேறுகதைதான். அவர் அடித்து ஆடி நெருக்கமான களவியூகத்தை பரவலாக்கச் செய்வார். இதன் மூலம் மற்ற பேட்ஸ்மென்களுக்கு சுலபமாக அமையும்.
இந்த அணியில் விராட் கோலி மேல் அனைத்துச் சுமைகளும் உள்ளது, மற்றவர்களும் பங்களிக்க வேண்டும். ஸ்விங் பவுலிங்குக்கு ஏற்றவாறு அவர்கள் தங்கள் கால் நகர்த்தல்களை மேம்படுத்த வேண்டும்.
இந்தப் போட்டியிலும் கூட ஒருமுனையை இறுக்கிப் பிடித்து இன்னொரு முனையில் அடித்து ஆடியிருக்க வேண்டும். ரன்கள் விரைவாக வந்தால் எதிரணி பதற்றம் அடைவார்கள்.
தோல்வியிலும் இந்திய அணிக்கு பெரிய விஷயம் என்னவெனில் கோலியின் பேட்டிங் பார்ம், அஸ்வின், இசாந்த் சர்மாவின் பந்து வீச்சு ஆகியவையாகும்.
இவ்வாறு கூறினார் பிரசாத்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT