Published : 26 Aug 2018 06:00 PM
Last Updated : 26 Aug 2018 06:00 PM
டி20 போட்டிகளில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் எனும் பெருமையை பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் பெற்றார்.
4 ஓவர்கள் வீசிய முகமது இர்பான் (4-3-1-2) 23 டாட் பந்துகள், 3 மெய்டன் ஓவர், ஒரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்பான். பாகிஸ்தானில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் ப்ரிமீயர் லீக் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. இதனால், மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள கரீபியன் கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், பர்படாஸ் டிரிடென்ட்ஸ் அணிக்காக முகமது இர்பான் விளையாடி வருகிறார். பர்படாஸில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பர்படாஸ் டிரிடென்ட்ஸ் அணி 147 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 148 ரன்கள் இலக்காக வைத்து ஆட்டத்தைத் தொடங்கிய செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 7 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் பர்படாஸ் பாட்ரியாட்ஸ் அணி வீரர் முகமது இர்பான் 4 ஓவர்கள் வீசி 3 மெய்டன்களையும் 2 விக்கெட்டுகளையும், ஒரு ரன்னை மட்டுமே விட்டுக்கொடுத்து டி20 வரலாற்றில் மிகக் குறைந்த ரன் கொடுத்த பந்துவீச்சாளர் எனும் புதிய சாதனையைப் படைத்தார்.
7 அடி உயரம் கொண்ட, இடதுகை வேகப்பந்துவீச்சாளரான முகமது இர்பான் பந்துவீசிய முதல் ஓவரிலேயே கிறிஸ் கெயில் விக்கெட்டையும், அடுத்த பந்தில் இவின் லிவிஸ் விக்கெட்டையும் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். அதன்பின் தனது அசுரத்தனமான வேகப்பந்துவீச்சால் ரன்கள் விட்டுக்கொடுக்காமல் இர்பான் பந்துவீசினார்.
இது குறித்து முகமது இர்பான் கூறுகையில்,” நான் எனது பந்துவீச்சு குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால், இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். டி20 வரலாற்றிலேயே மிகக் குறைந்த ரன் கொடுத்ததாக எனப் பந்துவீச்சு அமைந்தது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது.
பந்துகள் நன்றாக எழும்பும், தரமான ஆடுகளங்களில் பந்துவீச எனக்கு மிகவும் பிடிக்கும், நான் வழக்கமான பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் உயரம் அதிகம் என்பதால், பந்துவீசும் போது பவுன்ஸ் ஆவது அதிகரிக்கும், இதனால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படும். இந்தப் போட்டியில் எனது பந்துவீச்சு மனநிறைவு அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் வீரரான முகமது இர்பான் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளையும், 60 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 83 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். 20 டி20 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT