Published : 29 Aug 2018 08:53 PM
Last Updated : 29 Aug 2018 08:53 PM
கடினமான இங்கிலாந்து தொடர் 3 கடினமான டெஸ்ட் போட்டிகளின் சவாலான கிரிக்கெட்டுக்குப் பிறகு நாளை 4வது டெஸ்ட் போட்டியில் சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுலில் இந்தியா-இங்கிலாந்து களமிறங்குகின்றன.
இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ், போப் ஆகியோருக்குப் பதிலாக சாம் கரன், மொயீன் அலி அணிக்கு வந்துள்ளனர். இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது.
டிரெண்ட் பிரிட்ஜில் இந்திய அணி ஆசியாவுக்கு வெளியே மிகப்பிரமாதமான முழு ஆதிக்க வெற்றியைப் பெற்று இங்கிலாந்துக்கு தொடர் தோல்வி பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
0-2 தோல்வியிலிருந்து 1936-37 தொடரில் டான் பிராட்மேனின் ஆஸ்திரேலிய அணி 3-2 என்று தொடரைக் கைப்பற்றியது பற்றிய கதையாடல்கள் ஏற்கெனவே வலம் வந்துள்ள நிலையில் விராட் கோலி படை மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
3வது டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மென்களான ராகுல், தவன், புஜாரா, ரஹானே ஆகிய வீரர்கள் பின் காலில் சென்று ஆடியதையும், பந்தை ஸ்விங் ஆகவிட்டு கடைசி நேரத்தில் ஆடுவதோ ஆடாமல் விடுவதோ போன்று எடுத்த முடிவுகளினால் விளைந்த பயனையும் பார்த்தோம். இந்தப் பிட்சிலும் கொஞ்சம் புல் உள்ளது. டாஸ் வென்றால் முதலில் பேட் செய்ய வேண்டிய பிட்ச் ஆக இது உள்ளது, எனவே விராட் கோலி முதலில் டாஸை வெல்ல வேண்டும். ஏனெனில் ஜோ ரூட் டாஸ் வென்று இன்னொரு முறை இந்தியாவை பேட் செய்ய அழைக்கும் தவறைச் செய்ய வாய்ப்பில்லை.
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவின் வருகையும், ஹர்திக் பாண்டியாவின் அபாரப் பந்து வீச்சும் பேட்டிங்கும் உத்வேகமூட்டியுள்ளன. இஷாந்த் சர்மா பிரமாதமாக வீசி வருகிறார், அவரிடம் நாம் எதிர்பார்ப்பது ‘கில்லர் இன்ஸ்டிங்க்ட்’ அது இருந்தால் அவரே தனி நபராக 2014 லார்ட்ஸில் இங்கிலாந்தைச் சாய்த்தது போல் இப்போதும் முடியும், அந்த இங்கிலாந்து அணியை விட இது பலவீனமான பேட்டிங் அணிதான். மொகமது ஷமி இன்னும் சரியாக தன் திறமையை நிரூபிக்கவில்லை, பெயர் சொல்லும்படியாக ஒரு ஸ்பெல்லைக் கூட வீசவில்லை. ஒரு ஆதரவு, கூடுதல் பவுலராகவே செயல்பட்டு வருகிறார். கடந்த டெஸ்ட்டில் ஓவருக்கு 5 ரன்களுக்கும் மேல் கொடுத்தார். எனவே இவர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் பிழைப்பார், இல்லையெனில் புவனேஷ்வர் குமார் வந்த பிறகு இவர் தன் இடத்தை இழக்க வேண்டிவரும். இவருக்குப் பதில் ரஜ்னீஷ் குர்பானி போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ரொடேஷன் முறையில் வாய்ப்பளித்துப் பார்க்கலாம்.
இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சோபிக்க வேண்டுமெனில் அலிஸ்டர் குக் ரன்கள் எடுக்க வேண்டும், இதுவரை இந்திய அணி இவரை விரைவில் பெவிலியன் அனுப்பியது. இங்கிலாந்து வெற்றி பெற வேண்டுமெனில் 350-400 ரன்கள் அடிப்பது அவசியம்.
இந்திய அணி 350-400 அடிக்க வேண்டுமெனில் முதல் 15 ஓவர்களில் விக்கெட் இழக்கக் கூடாது. கடந்த டெஸ்ட் போல் கூட்டணிகளை அமைப்பது அவசியம். ஜேம்ஸ் ஆண்டர்சனை யாராவது நாலு சாத்து சாத்தினால் அது இந்தத் தொடரின் சாதனையாகப் பேசப்படும். 90-95 ரன்களிலும் விராட் கோலி இவரிடம் பீட்டன் ஆகிறார், ஆனால் இதுவரை விக்கெட்டை இவரிடம் கொடுக்கவில்லை, இதுவே தன்னளவில் விராட் கோலிக்கு ஒரு வெற்றிதான்.
பிட்ச் நிலவரம்:
பிட்ச் கிரீன் டாப் விக்கெட்டாகும். ஆனாலும் கொஞ்சம் வறண்ட வானிலை என்பதால் முதல் 2 மணி நேர புதிய பந்து சவால்களைக் கடந்து விட்டால் முதலில் பேட் செய்யும் அணிக்குச் சாதகமான பிட்ச். இதே பிட்சில் தான் 2014-ல் மொயின் அலி 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஆனால் இப்போது பிட்ச் அதன் தன்மையை வெகுவாக மாற்றிக் கொள்ளாது என்றே பிட்ச் அறிக்கைக் கூறுகிறது.
புள்ளிவிவரங்கள்:
ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்னும் 7 விக்கெட்டுகள் எடுத்தால் கிளென் மெக்ராவின் விக்கெட்டுகளைக் கடந்து 564 விக்கெட்டுகள் என்று புதிய வேகப்பந்து வீச்சு வரலாறு படைப்பார்.
விராட் கோலி இன்னும் 6 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். 9 இந்திய வீரர்கள்தான் 6000 ரன்கள் மற்றும் அதற்கு மேல் எடுத்துள்ளனர். கேப்டனாக 4000 டெஸ்ட் ரன்கள் மைல்கல்லுக்கு கோலிக்கு தேவை 104 ரன்கள். இஷாந்த் சர்மா ஒரு விக்கெட் எடுத்தால் 250 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டுவார்.
இங்கிலாந்து அணி: அலிஸ்டர் குக், ஜெனிங்ஸ், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்[ (வி.கீ), மொயின் அலி, சாம் கரன், ஆதில் ரஷீத், பிராட், ஆண்டர்சன்.
இந்திய அணி: தவண், ராகுல், புஜாரா, கோலி, ரஹானே, பாண்டியா, ரிஷப் பந்த், ஆர்.அஸ்வின், ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT