Published : 02 Aug 2018 09:57 AM
Last Updated : 02 Aug 2018 09:57 AM
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அபாரமாக ஆடி 80 ரன்கள் எடுத்து பெரிய சதத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளையில் ஜானி பேர்ஸ்டோவின் அழைப்பை நம்பி 2வது ரன் ஓடி கோலியின் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.
இதனையடுத்து விராட் கோலி, கொஞ்சம் நாமும் கிண்டல் செய்து பார்ப்போமே என்று ஜோ ரூட் அன்று சதமடித்து ஒருநாள் தொடரை வென்ற போது ‘ஊதிவிட்டோம்’ என்ற பாணியில் செய்கை செய்து கிண்டல் செய்ததைப் போல் ரன் அவுட் செய்து கோலியும் ‘ஊதிவிட்டோம்’ என்றும் இங்கிலாந்து ரசிகர்களுக்கு அறிவுறுத்துமாறு உதட்டின் மேல் விரல்களை வைத்து ‘உஷ் சத்தம் போடாதீங்க’ என்றும் கூறியது முதல் டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் ருசிகர சம்பவமாகியுள்ளது.
கோலி எப்போதுமே தான் வாங்கியதைத் திருப்பிக் கொடுக்கும் பழக்கமுள்ளவர். தொடருக்கு முன் அநியாயத்திற்கு அவரது 2014 பார்ம் குறித்து இங்கிலாந்து ஊடகங்கள் வம்பிழுத்தன.
112/3 என்ற நிலையிலிருந்து ஜோ ரூட், பேர்ஸ்டோ இணைந்து 216 ரன்களுக்குக் கொண்டு சென்று வலுவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது மிட்விக்கெட்டில் ஒரு பந்தைத் தள்ளிவிட்டு 2வது ரன்னுக்கு பேர்ஸ்டோ அழைப்புக்கு தேவையில்லாமல் இசைந்தார் ஜோ ரூட், விராட் கோலி பந்தை விரட்டிச் சென்று எடுத்து திரும்பி அதே போஸில் த்ரோ அடிக்க நேராக ரன்னர் முனை ஸ்டம்பைப் பந்து தாக்கியது, ஜோ ரூட் மிகவும் பின் தங்கிவிட்டார். ரன் அவுட் ஆனார். இந்த ரன் அவுட்டினால் இங்கிலாந்து சரிவு ஆரம்பமானது.
இதனையடுத்து ஜோ ரூட் அன்று ஒருநாள் தொடரை தன் சதத்தின் மூலம் வென்று செய்த செய்கையை இமிடேட் செய்த கோலி அவரைப்போலவே செய்து ரூட்டை எள்ளி நகையாடினார்.
இந்தக் கொண்டாட்டம் குறித்து இங்கிலாந்து தொடக்க வீரர் கீட்டன் ஜெனிங்ஸ் கூறும்போது, “எந்த வீரரும் தான் விரும்பும் வழியில் கொண்டாட உரிமை உண்டு. அவர் கொண்டாடினார் அது கூலானதுதான்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT